
அண்ணாமலை கை தொழ...
இவ்வாண்டு தமிழ் இசைச் சங்கத்தின் 61வது இசை விழாவில் “இசைப் பேரறிஞர்” பட்டத்தைப் பெற்றவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆரம்பித்து வளர்த்த சங்கத்தின் பரிசு மன்னர் ஒருவருக்கு (மெல்லிசை மன்னருக்குப்) போய்ச் சேருவது இயற்கையான நிகழ்வுதானே! இவ்வாண்டின் “இசைப் பேரறிஞர்” எம்.எஸ்.வி. என அழைக்கப் பெறும் எம்.எஸ்.விஸ்வநாதன் 74 வயது நிரம்பிய ஒரு இசை மேதை.
கிட்டத்தட்ட 1750 படங்களுக்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,
ஹிந்தி என்ற 5 மொழிப் படங்களில் இவர் இசை அமைத்திருக்கின்றார். கேரளத்தில் பிறந்த எம்.எஸ்.வி. தூய்மையான தமிழ்ப் பேசுவது, கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றது. இவ்வாண்டு உன்னி கிருஷ்ணனின் இசை
நிகழ்ச்சியைக் கேட்ட பின்பு மேடைக்குச் சென்ற நான் எம்.எஸ்.வி. உன்னி
கிருஷ்ணனிடம் மலையாளத்தில் பேசுவதைக் கேட்டேன். அதுவுமே எனக்குத் தமிழ் போன்றுதான் ஒலித்தது.
பரிசளிப்பு விழாவில் பேசியபோது எம்.எஸ்.வி. கூறியவை : "நான் ஏழு வயதில் பள்ளிக்கு அனுப்பப் பட்டேன். ஆனால் பள்ளியில் படிப்பதில்லை. அருகில் இருந்த நீலகண்ட பாகவதரின் வீட்டிற்குச் சென்று அங்கு எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டு, மற்றவர்கள் பாடுவதைக் கேட்பேன். அவ்வாறு கேட்டுக் கேட்டு ஒரு விஜயதசமி தினத்தன்று விரிபோணி எனும் அடதாள வர்ணத்தைப் பாடினேன். அதைக் கேட்ட பாகவதர் கண்கள் பனிக்க என்னை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார். அதன்பின் அசுர ஸாதகத்துடன் வெற்றியை நோக்கிய பயணம் தான்.” நாடகங்களில் நடித்த எம்.எஸ்.வி. சினிமாவில் முதன்முதலாகக் கோவலன் வேடத்தில் நடித்தாராம்,. தற்காலத்தில் நகைச்சுவை கலந்த தந்தையின் கதாபாத்திரம் என்றால் எம்.எஸ்.வி. தான். "கலையை ரசிக்கத் தெரிந்தவன்தான் சிறந்த கலைஞனாக முடியும்” என்கிறார், எம்.எஸ்.வி. "இறக்கும் மனிதனின் இறவாப் பாடல்கள்” என்று எம்.எஸ்.வி. அடிக்கடி குறிப்பிடுவது கவிஞர் கண்னதாசனின் பாடல்களை
பரிசளிப்பு விழாவிற்குப் பிறகு பல பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்த எம்.எஸ்.வி. எல்லாப் பத்திரிகைகளிலும் தான் "இசைப் பேரறிஞர்” பட்டம் பெறுவதற்கு
"அண்ணாமலை கை தொழ” என்று தான் இசையமைத்த தேவார ஒலி நாடாவே
முக்கியக் காரணம் என்று கூறியுள்ளார். அவர் கூறும் இந்த ஒலி நாடா தமிழ் இசைச் சங்கத்தில் ஸ்பிக் நிறுவனத்தின் கல்வி அறக்கட்டளையின் வாயிலாக வெளியிடப் பெற்றது. இவ்விழா தமிழ் அறிஞர் செந்தமிழ்ச் செம்மல் அமரர்
திரு. அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் தலைமையில் நடந்தது.
திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் திருக்கரங்களால் வெளியிட, நீதி அரசர் மாண்புமிகு திரு. பக்தவச்சலம் அவர்கள் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அவ்விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்கும் பேறு எனக்குக் கிட்டியது.
என் சிறிய வயதிலிருந்தே அண்ணாமலை மன்றத்தில் நமக்குப் பேச வாய்ப்பு கிடைக்குமா என்று நான் பல முறை ஏங்கியதுண்டு. அங்கு பேசும் பல பெரிய தமிழ் அறிஞர்கள் பேச்சைக் கேட்டுக் கேட்டு எனக்கு இவ்வாசை எழுந்ததுண்டு. மேலும் எம்.எஸ்.வி. குழுவினரின் கச்சேரி எப்பொழுது அண்ணாமலை மன்றத்தில்
நடந்தாலும் நான் தவறாமல் போய் வருவேன். நிகழ்ச்சியை "சரவணப் பொய்கையில் நீராடி” என்று பி. சுசீலாவின் பாடலுடன் ஆரம்பிப்பார். பின்பு கேட்க வேண்டுமா? பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பாச மலர், பார் மகளே பார், எனும்
திரைப்படங்களில் இருந்து கவிஞர் கண்ணதாசனின் பாடல்களை பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம். சௌந்தரராஜன் போன்றோர் பாடுவார்கள். இவை எல்லாம் என் மனதில் இருந்து என்றுமே அழியா நினைவுகள்.
திரு. ஏ.சி. முத்தையா அவர்களின் மனைவி என்பதால் அண்ணாமலை மன்றத்தில் எம்.எஸ்.வி. யின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் வரவேற்புரை ஆற்றும்
வாய்ப்பு எனக்குக் கிட்டியது. விழாவில் கலந்து கொண்ட திருமதி.
எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களும், அ.ச. ஞானசம்பந்தம் அவர்களும் ஏற்கனவே " இசைப் பேரறிஞர்கள்”. இப்போது எம்.எஸ். விஸ்வநாதனும் இசைப் பேரறிஞர் ஆகிவிட்டார். ஆதலால் அன்று நான் வாசித்தளித்த உரையிலிருந்து இம்மூன்று இசைப் பேரறிஞர்களைப் பற்றி நான் கூறியதை உங்களுக்கு “அபிராமி”யின் வாயிலாக அளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
"தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசும்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்கவலியும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி"
என்று மாணிக்கவாசகர் கூறும் அத்தொன்மைக் கோலத்தை - அம்மையப்பரான
அந்த அர்த்த நாரீஸ்வர கோலத்தை நம் கண்முன் காணும் பேற்றினை நமக்கு அருளும் சதாசிவத் தம்பதியினரை வருக என வரவேற்கின்றேன். சாதாரணமாக
சக்திதான் சிவத்தை இயக்கும் என்பார்கள். ஆனால் இங்கு சக்தியை இயக்குவதே சதாசிவம்தான். “அவர் சொல்கிறபடிதான் நான் நடக்கிறேன். ஏன்? அவருக்குப் பிடித்த பாடல்களைத்தான் நான் பாடுகிறேன். எனக்கு என்ன குறை? நன்றாகத்தானே இருக்கிறேன்” என்கின்றார்கள் எம்.எஸ். அம்மா அவர்கள். இது நம் நாட்டுப் பெண்கள் அனைவருக்குமே ஓர் எடுத்துக்காட்டு.
"Behind every successful man, there is always a woman"என்பது பழமொழி
"Beside every successful woman, there is always a man"என்பது புதுமொழி.
காற்றிலே வரும் கீதம், கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம், கல்லும் கனியும் கீதம், பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம், தண்ணொளி பொங்கிடும் கீதம், காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுரமோஹன கீதம், சுனை வண்டுடன் சோலைக்
குயிலும் மனம் குவிந்திடவும் வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும் பொழியும் கீதம் - அதுவே எம்.எஸ். அம்மாவின் தீங்குரல் கீதம். இமயம் முதல்
குமரி வரை ஒலிக்கும் இக்குயிலின் கீதம். இக்குயிலின் குரல் கேட்டுத்தான் அந்த ஏழுமலைக்கு அதிபதியான வெங்கடாசலபதியுமே துயில் எழுகின்றார். இசை அரசியான எம்.எஸ். அம்மா அவர்களது திருக்கரங்களால் "அண்ணாமலை கை தொழ” ஒலிப்பேழைகள் வெளியிடப் பெறுகின்றன. அது நாம் பெற்ற பேறு தெய்வீகத்தின் இருப்பிடமும் அடக்கத்தின் மறுபெயருமான எம்.எஸ். அம்மா அவர்களை “வருக” என்று வரவேற்கின்றேன்.
“செந்தமிழ்ச் செம்மல்” திரு. அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் பெரும் புலவர்.
அமரர் லால்குடி திரு. சரவண முதலியாரின் மகன், இளம் வயதிலிருந்தே பெரிய புராணத்தில் ஈடுபாடு கொண்டு தந்தையாரின் வழியில் ஆழமாகப் பயின்று
தேர்ந்தவர். அவர் பேசாத ஊர்களோ, செந்தமிழ் மன்றங்களோ தமிழ்நாட்டில்
இல்லை. உரமான சொற்பொழிவாளர். புதிய சிந்தனைகளைப் புதிய கருத்துக்களை இலக்கியத்திலிருந்து கண்டுபிடித்து வைரச் சுரங்கமாக மணிகளைக் கண்டு
அளிக்கும் ஆராய்ச்சியாளர்.இந்த முறையில் எங்கும் பணிக்கு மிகவும் உறுதுணையாக நின்று புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் முன்னுரையும்
விளக்கவுரையும் அளித்து இருக்கின்றார். எண்பது வயது நிறைந்தவரது
வெண்கலக் குரலில் தமிழ் அருவி கொட்டுகின்றது. இப்பெரியவரை "வருக" என வரவேற்கின்றேன்.
மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள எலப்பள்ளியில் பிறந்தவர். 74 வயது நிரம்பப் பெற்றவர்.
100 ஆண்டுகள் வாழப் போகின்றவர். முறையாக ஒரு சங்கீதப் பள்ளியில் பயிற்சி பெற்றுத் திரையுலகில் நடிக்க விரும்பி வந்தவர். இசையமைப்பாளராக மாறிப் பல கோடி மக்களைக் கவர்ந்தவர். மேதைகளான திரு. எஸ்.எம். சுப்பையா நாயுடு,
திரு. எஸ்.வி. வெங்கட்ராமன், திரு. சி.ஆர். சுப்பராமன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்து பிறகு தனியே இசை அமைக்க துவங்கியவர்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று இணைந்து பல வெற்றிகளைக் கண்டவர்.
எம். எஸ். விஸ்வநாதன் என்ற பெயரை அறியாத தமிழனே இருக்க முடியாது. பல புதிய வடிவங்களை, புதிய இசைகோலங்களை உருவாக்குபவர். புதிய குரல்களை அறிமுகப்படுத்தியவர். இந்த உயர்ந்த இசைமேதை ஆட்டி வைக்காத
முன்னணியில் உள்ள பின்னணிப் பாடகரே இல்லையென்று உறுதியாகக் கூறலாம். இந்தப் பணியில் தயங்கித் தயங்கி ஈடுபட்டார். பல பெரியவர்களின்
வழிகாட்டுதலோடு மரபை மறக்காமல் புதிய மெருகும் புதிய வடிவமும் கொடுத்து இசை அமைத்திருக்கின்றார். இசை மேதை எம்.எஸ்.வி. அவர்களையும் அவரது இசைக்கு இசையும் குழுவினரையும் இசைக் குயில்களையும் வருக என
வரவேற்கின்றேன்.
ஓதுவார்கள் என்ற ஒரு சிறிய சமூகத்தினரால் மட்டுமே திருமுறைப் பாடல்கள்
பயின்று பாடப் பெறுகின்றது. இவர்கள் இப்பாடல்களைக் கடினமான பயிற்சியுடன் கட்டுப்பாடாக, authentic அதாவது சீரீய பாணியில் கோவில்களிலும் புனித
விழாக்களிலும் பாடி வருகின்றார்கள். அவர்கள் தங்களது பாணியினின்று ஒருபோதும் மாறக்கூடாது என்பது தான் நியதி. இருப்பினும் குடும்பத்தில் இருக்கும் பெண்கள், ஆண்கள், மற்றும் குழந்தைகளும் ஏன் திருமுறைகளைக்
கற்றுக் கொள்ளக் கூடாது? கனமான பொருளையும் இசையோடு சேர்த்துக்
கொடுத்தால் கற்றுக் கொள்பவர்க்கு எளிமையாகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அமையலாம் அல்லவா? என்ற எண்ணத்துடனேயே இப்பணியில்
நாங்கள் ஈடுபட்டோம்.
பன்னெடுங்காலமாக ஓதுவார்கள் அவர்கள் திருமுறை ஓதும் பாணியையும் நாம் மனநிறைவுடன் மதிக்கின்றோம். அந்தச் சீரிய முறைகளைக் குறை கூறும்
எண்ணத்தில் ஏற்பட்டதில்லை இவ்வொலிப் பேழை வெளியீடு என்பதனை உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். காலத்துக்குக் காலம் எல்லாமே மாறிக்கொண்டு வருகின்றது. மாற்றங்களுக்கேற்ப மக்கள் எதையும் புதுமையாகவும் எளிமையாகவும் எதிர்பார்க்கின்றார்கள். திருமுறைப் பாடல்கள் வேறு மொழிப் பாடல்களோ என்று பயந்து கற்காதவர்களுக்கும் அவை தமிழ்மொழிப் பாடல்கள் தான், கற்று மகிழுங்கள் எனும் வகையில் திரு. எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் சான்றோர் சிலர் தேர்ந்தெடுத்துத் தந்த பாடல்களை மிகவும் இனிமையான பாடல்களாக நமக்கு மெல்லிசையில் வடித்துத் தந்திருக்கின்றார். திருமுறைப் பாடல்களின் பயன் பாமர மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற பேராவல் என் கணவர்
திரு. ஏ.சி. முத்தையா அவர்களுக்கு வெகு நாட்களாக உண்டு. வித்தாக இருந்த இவ்வாசையை நீர் ஊற்றி வளர்த்து மரமாக்கி இன்று கனி தரும் நிலைக்குப் போற்றி வளர்த்தது ஒரு நல்ல உள்ளம். இந்த மரத்திற்கு ஆணிவேராக அமைந்தது அத்திரு உள்ளம். பாடல் தேர்வு தொடங்கி அது ஒலிப்பேழையாக இன்று ஒலிக்கும் தருணம் வரை அயராது ஓடி ஓடி வேலை செய்துவிட்டுத் தனக்கும் இந்த விழாவிற்கும்
எந்தச் சம்பந்தமும் இல்லாததுபோல் திரைக்குப் பின்னால் மறைந்து கொண்டு இருக்கும் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேரனும், தமிழ் இசை மீது
ஆர்வம் கொண்ட இலக்கியச் சிந்தனையாளரும், என் அன்பு சகோதரருமான
திரு. பி. லட்சுமணன் அவர்களை வருக என வரவேற்கின்றேன். அவருக்கு
இப்பணியில் உறுதுனையாக இருந்த திரு. பாரதி, திருப்பாம்புரம்
திரு. சண்முகசுந்தரம் ஓதுவார் சாமி தண்டபானி ஆகியோரையும் வருக என
வரவேற்கின்றேன். எங்களது இத்தமிழப்பணி உங்களுக்காகத் தமிழ் இசை
ரசிகர்களுக்காகச் செய்யப் பெற்றது. அதனை ஏற்று மகிழ்ந்து, இன்புற வேண்டி அமைகின்றேன். வணக்கம்”.
அன்று "அண்ணாமலை கை தொழ” ஒலிப் பேழையை வெளியிட்ட அதே மேடையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு “இசைப் பேரறிஞர்” என்ற பட்டம் தமிழ் நாட்டில் ஆளுநர் திரு. ராமமோகன் ராவ் அவர்களின் கைகளால் கிடைத்ததைப் பார்த்து என் உள்ளம் பூரித்தது.