திருமதி தேவகி முத்தையா அவர்களைப் பற்றிய ஒரு அறிமுகக் குறிப்பு

தமிழ் இலக்கியம், ஆன்மீகம் மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர் திருமதி தேவகி முத்தையா. பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம், தமிழில் முதுகலைப் பட்டம் மற்றும் தமிழில் எம்ஃபில் பட்டமும் பெற்றவர்.

இவர் தமது எம்.ஃபில் பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்துப் பட்டம் பெற்றிருக்கின்றார். இவரது ஆய்வேடு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்றபின் தருமை ஆதீனத்தின் ஞானசம்பந்தப் பதிப்பக வெளியீடாக “அபிராமி அந்தாதி ஆராய்ச்சி” என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றிருக்கின்றது. இந்நூலின் வெளியீட்டு எண் 911. அபிராமி அந்தாதிப் பாடல்களை விளக்கி “அபிராமி அந்தாதி விளக்கவுரை எனும் தலைப்பிலும் நூலாக வெளியிட்டுள்ளார். திருக்கடையூரில் வீற்றிருக்கும் அபிராமியின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட இவர் சென்னையிலிருந்து வெளிவரும் “அபிராமி” என்ற ஆன்மீக மாத இதழின் கௌரவ ஆசிரியை ஆவார்.

அறிவுபூர்வமான அணுகுமுறை, ஆக்கப்பூர்வமான சிந்தனை ஆகியவற்றின் இருப்பிடமாகத் திகழும் திருமதி தேவகி முத்தையா ஒரு உரத்த சிந்தனையாளர். பல்வேறு தலைப்புகளைப் பற்றிச் சரளமாக உரையாடக்கூடிய இவரின் நேர்த்தியும், பாங்கும் அறிவுகூர்மையும்,ஞானமும் சொல்லில் அடங்காது.

தமிழ் இலக்கிய வளர்ச்சி மற்றும் ஆன்மீகத் தத்துவம் போன்றவற்றிற்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில், தொன்மைவாய்ந்த குன்றக்குடி ஆதீனம், திருமதி தேவகி முத்தையா அவர்களுக்கு 'செந்தமிழ்த் திலகம்' என்ற பட்டத்தை 28 ஆகஸ்ட் 2003 ம் வருடம் வழங்கிக் கௌரவித்தது.

எம். ஏ. சி அறக்கொடை நிறுவனத்தின் சார்பாக , பல் கலையில் சிறந்து விளங்கும் சொற்பொழிவாளர்களைக் கொண்டு, தத்துவம், ஆன்மீகம், தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு எனும் தலைப்புகளில் இவர் பல சொற்பொழிவுக் கூட்டங்களை நடத்தி வருகின்றார்.

கோட்டூர்புரத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் 'நாயகி' என்ற கலை மற்றும் பண்பாட்டு அமைப்பின் தலைவராகத் தொண்டாற்றி வரும் திருமதி தேவகி முத்தையா, இந்த அமைப்பின் சார்பில் மாதம்தோறும் முன்னணிக் கலைஞர்கள் பங்கு பெறும் பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெற பெரும் உறுதுணையாக உள்ளார்.

ஆன்மீகம் மற்றும் தத்துவக் கோட்பாடுகளை வலியுறுத்தி வெளிவரும் பல்வேறு
மலர்கள் மற்றும் மாத இதழ்களுக்குக் கட்டுரைகள் பல படைத்து வருகிறார். ஸ்தல வரலாறு மற்றும் கவிதைத் தொகுப்புகள் போன்ற எண்ணற்றப் படைப்புகள் மூலம் பல்வேறு தரப்பினரின் எண்ணங்களையும் தன்பால் திருப்பிய சாதனையாளர் என்று கூறினால் அது மிகையாகாது.

 
     
Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com