• தனிமையும் கவிதையும்

    “கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா? என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாடல் இடம் பெற்ற “பார்த்தால் பசி தீரும் எனும் படம் வந்தபோது எனக்குச் சுமார் பதினேழு அல்லது பதினெட்டு வயதிருக்கும். அந்த வயதில் இப்பாடல் வரிகளின் தாக்கமே வேறு!! பல வருடங்கள் கழித்து இதேப் பாடல் வரிகள் என்னை “நீயும் உங்க நாட்டுக் கவிஞர் போல் பாடல் எழுதேன், எழுதேன் என்று ஓயாமல் உரைத்தன. இது யானையைப் பார்த்து சிறு எறும்பு ஆசைப்பட்டது போல் உள்ளது என்பதனை நீங்கள் உணர வேண்டும். அந்தத் தாக்கத்தின் வடிவம்தான் இந்தப் பாடல்.

    பாடலை எழுதி முடித்த பின் வழக்கம் போல் வித்வான் லட்சுமணன் அய்யாவிடம் அனுப்பி வைத்தேன். படித்தபின் வித்வான் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “அப்பப்பா! பாடல் வரிகள் பிரமாதம் அம்மா. எப்போதும் போல் பாடலை அமுதசுரபிக்கு அனுப்பி விட்டு அடுத்த இஷ்யூவில் (Issue) பால ஜோதிடத்திற்கும் தாங்கது என்றார். வித்வான் அய்யாவின் சம்மதம் பெறாமல் நான் அமுதசுரபிக்கு என் கட்டுரைகளையோ, பாடல்களையோ அனுப்பியதேயில்லை. அவ்விரண்டு பத்திரிக்கைகளிலும் பிரசுரமானதும் கவிதையை ஃபலில் போட்டு வைத்துவிட்டேன். மறந்தும் போய் விட்டேன். வெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரியின் நூலகத்தில் பணி புரியும் (Librarian) அனந்தலக்ஷமிதான் என் இல்லத்தில் உள்ள எனது நூல்களையும், நூலகத்தையும் பராமரித்து வருகிறார். எனது கையெழுத்து இருக்கும் சிறு காகிதத்தைக் கூட அவர் விடுவதில்ல. அதனை எடுத்து, நாளடைவில் பாழாகிவிடும் என்று லாமினேட் செய்து அழகாக ஃபல்களில் போட்டு பத்திரப்படுத்தி வைப்பார். இம்முறை எனது நூலகத்த சுத்தம் செய்தபோது “நிறைய கவிதைகளை நீங்கள் பிரசுரிக்கவில்லயே அம்மா என்று கூறி இந்தக் கவிதைய எடுத்துக் கொடுத்தார்.

    இன்று என எழுத்துப் பிரதிகள் ஆயுளுடன் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் அனந்தலக்ஷ¢மிதான். என் எழுத்தை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்தது வித்வான் வெ.லெட்சுமணன் அவர்களுக்கும், எழுத்தாளர் விக்கிரமன் அவர்களுக்கும் என் நன்றி. பிரசுரமான கட்டுரைகள், பாடல்கள் அனைத்தையும் சீராகப் பிரித்து லாமினேட் செய்து ஃபல் செய்து பத்திரப்படுத்தியது அனந்தலக்ஷ¢மி கீர்த்திவாசனுக்கு என் நன்றி. பழைய பாடல இதோ அபிராமி வாசகர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

     

    கவிதை வந்ததால் தனிமை போனதா?
    தனிமை போனதால் கவிதை வந்ததா?

    சூரியன் உதித்ததால் தாமரை மலர்ந்ததா? தாமரை மலர்ந்ததால்
    சூரியன் உதித்ததா?
    சந்திரன் வந்ததால் பூமி குளிர்ந்ததா? பூமி குளிர்ந்ததால்
    சந்திரன் எழுந்ததா?
    மழைத்துளிகள் கூடியே கருமேகம் ஆனதா? கருமேகம் சிந்தியதால்
    மழைத்துளிகள் விழுந்ததா?
    மழை நின்றதும் வானவில் தோன்றியதா? வானவில் தோன்றியதால்
    மழையும் நின்றதா?
    குயில் பாடியதால் வசந்தம் வந்ததா? வசந்தம் வந்ததால்
    குயில் பாடியதா?
    கனிகள் பழுத்ததால் கிளியும் கொத்தியதா? கிளிகள் வந்திடத்தான்
    கனிகள் பழுத்ததா?
    கருவண்டு பருகவே மலர் தேனைச் சிந்தியதா? தேனை உண்ணவே வண்டு
    மலர நாடுதா?
    முகில் கூட்டம் கண்டுதான் மயில் தோகை விரிக்குதா? மயில்தோகை விரிக்கவே
    முகில் கூட்டம் கூடுதா?
    இமைகள் மூடவே கனவு தோன்றுதா? கனவு தோன்றத்தான்
    இமைகள் மூடுதா?
    மனம் அலைவதால நினைவு மோதுதா? நினைவு மோதுவதால்
    மனம் அலைகின்றதா?
    கண்ணன் துளபம் என்பதால் அது சிறந்து மணக்குதா? சிறப்பாய் மணப்பதால்
    அது துளபமானதா?
    செவி கேட்டு மகிழத்தான் அரும் வேதம் பிறந்ததா? வேதம் ஒலிப்பதால் செவி கேட்டு மகிழுதா?
    மந்திர ஜபத்தைத்தான் நம் நாவும் ஓதா? நாம் ஓதுவதால் அது
    மந்திரம் ஆனதா?
    தெய்வம் என்பதால் கரம் கூப்பித் தொழுததா? கரம் கூப்பித் தொழுவதால்
    அது தெய்வமானதா?
    கோவிலானதால் கால்கள் வலம் வருகுதா? கால்கள் வலம் வருவதால்
    அது கோவிலானதா?
    பக்தி முதிர்ந்ததால் புத்தி பழுத்ததா? புத்தி பழுத்ததால் அதில்
    பக்தி வந்ததா?

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com