• இசைக்கு இசையாதார் யார்?

    மனதை இசையச் செய்வதாலேயே இசைக்கு இசை என்று பெயர். ஆத்மாவைப் பரமாத்மனிடம் இசையச் செய்வது இசை. பரமாத்மாவை ஆத்மாவிடம் இணையச் செய்வதும் இசையே !! கவலையைப் போக்கவல்லது ,இசை! வியாதியைக் குணப்படுத்தவது இசை! கோபத்தைக் குறைக்கவல்லது இசை! காதலை உணரச் செய்வது இசை! மனிதன் பிறக்கும் காலம் முதல் அவன் இறக்கும் காலம் வரை - ஏன் இறந்த பின்பும் கூட அவனோடு ஒன்றரக் கலந்திருப்பது இசை. தொட்டிலில் தாயின் தாலாட்டைக் கேட்கும் மனிதன் பள்ளியில் வாழ்வை நெறிப்படுத்தும் இசையக் கேட்கின்றான். வாலிபத்தில் உணர்ச்சி வசப்படுத்தும் இசையைக் கேட்கும் அவன், வாழ்க்கையில் பெண்ணுடன் திருமணத்தில் இணையும் பொழுது மங்கல இசையக் கேட்கின்றான். வாழ்க்கை முழுவதும் வித விதமான இசைக்குப் பின் அவன் இறந்தும் கூடச் சுற்றத்தார் இசையோடு கதறுவது ஒப்பாரி!!

    இசை பிறந்தது எப்படி? கடலில் அலைகள் எழும்போது கேட்கும் ஓசை ஓம்காரமாகும். கடலில் பிறக்கும் சங்கைக் காதில் வைத்துக் கேட்டாலும் அந்த ஓம்காரம் தான் காதில் கேட்கும். இந்த ஓம்காரநாதமே இசையின் முதல் படி!! காட்டில் உள்ள மூங்கில் மரங்களில் வண்டுகள் துளைத்த வாரங்களின் வழியே காற்றுச் செல்லும்போது இனிமையான ஓசை உண்டாகின்றது. இதுவே புல்லாங்குழலின் வடிவத்தை மனிதன் மனதில் பதியச் செய்தது! புல்லாங்குழல் இசையானது! உறரி என்றால் கண்ணன், காம்பு என்றால் புல்லாங்குழல், ஊதி என்றால் வாசித்தது. புல்லாங்குழலிலிருந்து வந்ததால் அந்த ராகத்திற்கு ‘உறரி காம்போதி என்று பெயர். இதுவே முதன்மையானது என்று இசை வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனாலேதான் இசைப் பயிற்சியின் முதல் பாடமே உறரிகாம்போதியாக அமைந்திருக்கின்றது. ஓசையோடு ஸ்ருதியும் லயமும் சேர்ந்து உண்டானது தான் இசை. அதன் காரணமாகவே இசையின் தாய் ஸ்ருதி என்றும் தந்தை லயம் என்றும் கூறுவர்.

    மிகவும் மென்மையான இசையோடு ஒனறுவதற்கு மனதை நன்கு பக்குவப்படுதிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பக்குவப்பட்டால் பூ பூக்கும் ஓசையக் கூடக் கேட்கலாம் என்பதற்கு ஒரு கதை உண்டு. குரு ஒருவர் தனது சீடனைக் காட்டிற்கு அனுப்பி, மாலை திரும்பியவுடன் ‘என்னென்ன ஓசை உன் காதில் விழுந்தது" என்று கேட்டாராம். முதல் நாள் சீடன் புலி உருமுவது கேட்டது, யானை பிளிருவது கேட்டது, இடி இடிப்பது கேட்டது என்றானாம். மறுநாள் அவனை மீண்டும் அனுப்பிய குரு ‘இன்று என்ன கேட்டாய்?‘ என்றாராம். சீடன் அருவி விழுவது கேட்டது. காற்றில் இலைகள் அசைவது கேட்டது, மழைத்துளி விழுவது கேட்டது என்றானாம். மூன்றாவது நாளும்¢ அவனை அனுப்பிய குரு, ‘இன்று என்ன கேட்டாய்?‘ என்றதற்கு அவன் ‘என் காதில் பூ பூக்கும் ஓசை கேட்டது என்றானாம். பூ பூக்கும் ஓசை கேட்டது என்று அவன் சொன்னவுடன் சீடனுக்குத் தேவையான மனப் பக்குவம் வந்துவிட்டதாக குரு கூறினாராம். பூ பூக்கும் ஓசையே மிகமென்மையான இசையாகும்.

    இதற்கு எதிர்மாறான இசைதான் மரணத்தைக் கூட உண்டு செய்யக்கூடிய இசையான “நாராசம்" என்பது. “மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார், உயிர் நீப்பர் மானம் வரின்" என்பது குறள். தனது உடலில் உள்ள ரோமம் கீழே விழ நேருமாயின் கவரிமான் உயிர் நீத்து விடுமாம். அதுபோல் உயர் மக்கள் தமது பெயருக்கு இழுக்கு வருமாயின் உயிர் வாழ மாட்டார்கள் என்பது குறளின் பொருள். “நாராசம்" என்பது ஒரு வகை வாத்தியம். அது மரண வீட்டில் மட்டுமே ஒலிக்கப் பெறும். அதன் கொடூர ஓசையை உணர்த்தவே “நாராசமா இருக்கு “ என்று இனிமை இல்லாத இசையைக் குறிப்பிடுகின்றோம். கவரிமான் அதிவேகமாக ஓடக்கூடியது. அதனை அதன் ரோமத்திற்காகப் பிடிப்பதற்கு “நாராசம்" எனும் வாத்தியத்தை முழக்குவார்களாம். அதனைக் கேட்டவுடன் அது இறந்விடுமாம். அதன் பின்னே அதன் முடியை எடுத்து சாமரம் செய்வார்களாம். மேற்சொன்ன குறளுக்கும் இந்தச் செய்திக்கும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள். ஆத்மாவின் மீது இசைக்குள்ள தாக்கம் புரியும்.

    நம் தெய்வங்களின் உருவங்களைக் கவனித்துப் பார்த்தால் நம் மதத்தினர் இசைக்குத் தந்த தெய்வீக முக்கியத்துவம் புரியும். சரஸ்வதி கையில் வீணை, சிவனின் கையில் உடுக்கை, கண்ணனின் கையில் புல்லாங்குழல், நாரதரின் கையில் தம்பூரா, நந்தியின் கையில் மத்தளம் என்று நம் தெய்வங்க்ளுக்கும் இசைக்கும் உள்ள பிணைப்பு பரைசாற்றப்படுகின்றது. இந்தத் தெய்வீகத் தன்மையால்தான் இசை உலகில் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்களை இணைக்கின்றது. இதற்கு ஒரு நல்ல எடுத்க்காட்டாக சமீபத்தில் நடைபெற்ற (Art of Living) ஆர்ட் ஆப் லிவிங் என்ற சுவாமி ரவிசங்கர் அவர்களது அமைப்பின் வெள்ளி விழாக் கொண்டாட்டம் அமைந்தது. பெங்களூரில் நடைபெற்ற விழாவில் Super Symphony என்று அவர் அழைத்த சேர்ந்திசை காதில் தேன் வந்து பாய்ந்தது என்பார்களே, அதனை உண்மையாக்கியது. சுமார் 300 வீணகள், 300 வயலின்கள், 250 மிருதங்கங்கள், 250 புல்லாங்குழல்கள், நாதசுவரஙகள் என்று ஆயிரத்துக்கும் மேலான இசைக் கலைஞர்கள் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் வாசித்தார்கள். அனைவரும் சேர்ந்து சாதாரணமாகக் கோவில்களில் தியாகர், அம்பாள் நடனத்தின்போது இசைக்கப்படும் ஆங்கில நோட் ஒன்றினையும் ‘லட்சுமி பாரம்மா" என்ற பாடலையும் சேர்ந்து இசைத்தார்கள். சுவாமி அவர்கள் இசையை “ஆத்மாவின் மொழி" என்று குறிப்பிட்டது மிகவும் பொருத்தமான; மறக்க இயலாததும் கூட.

    மனிதன் ஒரு காலக் கட்டத்தில் மறையக் கூடியவன். இறக்கக்கூடியவன. ஆனால் அவன் படைக்கும் இசையும் பாடல்களும் இறவாத்தன்மை வாய்ந்தவது. அதற்குக் காரணம் இசையின் பிறப்பிடம் இறைவன் என்ற பரமாத்மா !!

    துணை புரிந்த பெரியோர்கள்:
    (1) ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்" பற்றிய செய்தி .. ஓவியக் கலைஞர் திரு S.ராஜம் அவர்கள்
    (2) ‘பூ பூக்கும் ஓசை" பற்றிய செய்தி .. எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்கள்

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com