• நெஞ்சு பொறுக்குதில்லையே!!

  நம்மைச் சுற்றிலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மைத் தாக்கம் செய்யும் வலிவு பெற்றவை. நில நிகழ்ச்சிகளின் தாக்கம் என் மனதை ஆழமாகப் பாதித்திருக்கின்றன. அவற்றைப் பற்றி சொல்லக்கூடாது என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் சொல்லாது விட்டுவிட்டால் அவ்வாறு மீண்டும் நிகழாதவாறு தடுக்க இயலாது. நான் எழுதுவதை உலகம் முழுவதும் படிக்கப் போகிறார்களா என்ன? கிடையவே கிடையாது. ஒரு நூறு பேராவது படிக்கலாம். அதில் ஒரு இரண்டு பேராவது நான் சொல்வது நன்மைக்குத்தான் என்று எண்ணி தம்மைத் திருத்திக் கொள்ளலாம் அல்லவா!! அவ்வாறு இரண்டு பேரை மாற்றிய புண்ணியம் எனக்கு உண்டாகட்டுமே.

  ஒரு நாள் சுமார் மாலை மூன்று மணியிருக்கும். காந்தி மண்டபத்திலிருந்து எங்கள் இல்லத்திற்கு (கோட்டூர்புரம்) காரில் வந்து கொண்டிருந்தேன். வழியில் உள்ள பல்கலைக்கழகத்திலிருந் நான்கு மாணவர்கள் மிகவும் நீட்டாக உடையணிந்து கொண்டு, டிரிம்மாக பாண்ட், சர்ட், காலில் பூட்ஷுடன் சிரித்துப் பேசிக் கொண்டு வெளியில் வந்தார்கள். அங்கு பல்கலைக்கழகம் என்று பெரிய பெயர்ப் பலகையின் முன்பு நான்கு பேரும் சிறுநீர் கழித்தார்கள். நான் வெட்கித் தலைகுனிந்தேன். படிக்காதவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள், கிராமவாசிகள் என்று சொல்வார்களே அவர்களுக்கெல்லாம் வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் நிறையவே இருக்கின்றது. படித்தவர்கள், நாகரீகம் தெரிந்தவர்கள், நகரத்து வாசிகள் என்று சொல்கிறார்களே அவர்களுக்கெல்லாம் இவை இன்னும் அதிகம் இருக்க வேண்டாமா? சிறுநீர் கழிப்பது இயற்கயான ஒரு நிகழ்வுதான். அதற்கென்று தனி இடம் இல்லையா? பல்கலைக்கழகத்தினுள் கழிப்பிடங்கள் இல்லையா? போக்குவரத்து மிகுந்த வீதியில் பலர் நடமாடும் இடத்தில் மாணவர்கள் தாங்கள் படித்த அதே பல்கலைக்கழகத்தின் பெயர்ப் பலகையின் கீழ் இவ்வாறு செய்யலாமா? இவர்கள்தான் நாளைய இந்தியா. இவர்களே இப்படி செய்தால் நம் நாட்டிற்கும் நம் பண்பாட்டிற்கும் என்ன மதிப்பு இருக்கும். அழகான பூங்காக்களை நகரம் முழுவதும் மாநகராட்சி உண்டாக்கி வத்திருக்கின்றது. மோட்டார் பைக்கில் பல வாலிபர்கள் வருகிறார்கள். தெரு ஓரத்தில் மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு பூங்கா சுவற்றின் மீது சிறுநீர் கழிக்கின்றார்கள். 2006-ஆம் ஆண்டிற்கு வந்து விட்டோம். உலக நாடுகள் அனைத்தும் விண்வெளிக்குப் போவது பற்றியும், ஐ,டி (IT) கம்பெனிகள் பற்றியும் பேசுகின்றன. அமெரிக்க நாடு வெண்நிலாவை வாடகைக்கு விடுவது பற்றிப் பேசுகின்றது. ஆனால் நாம் மட்டும் நமது நகரங்களைப் பெரிய கழிப்பிடங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றோம். நாம் திருந்துவது என்று?

  விமான நிலையத்திற்குப் போகும் வழியில் கத்திப்பாரா ஜங்ஷன் என்னும் இடத்தில் சிற்பி மணி நாகப்பா வடித்த அழகான ஜவஉறர்லால் நேருவின் சிலை உள்ளது. ஆரம்பத்தில் இது சதுக்கத்தின் நடுவில் ஒரு அழகிய தோட்டத்தில் இருந்தது. தற்போது பாலம் அமைக்கும் பணி நடப்பதால் அருகில் ஒரு ஓரமாக நகர்த்தி வைக்கப்பட்டிருக்கின்றது. சதுக்கத்தில் இருந்த போதும் சரி. தற்போதும் சரி. நிகழ்வது ஒன்றுதான். நவம்பர் மாதம் 14-ஆம் தேதி நேருவின் பிறந்த நாள் அன்று சிலைக்கு அழகிய பெரிய மாலைகளைச் சாத்துவார்கள். அந்த மாலைகள் அடுத்த நவம்பர் மாதம் வரை அகற்றப்படாமல் வாடி வதங்கி நேருவின் சிலை மீதே கிடக்கும். நம் வீட்டுப் பெரியவர்கள் படங்களுக்கு மாலை போட்டால் அதைக் காய்ந்தவுடன் எடுத்து விடமாட்டோமா? நம் வீட்டவர் குடும்பத்தவர் படங்கள் என்றால் ஒரு நியாயம். நாட்டின் தலைவர்கள் என்றால் ஒரு நியாயமா? தலைவர்கள் நாட்டின் உடமை அல்லவா?

  கோயில்களில் என்றும் பெண்கள் கூட்டம். அதுவும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்திலும், வெள்ளிக்கிழமைகளில் பகல், மற்றும் மாலை நேரங்களிலும் கேட்கவே வேண்டாம். தங்கள் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று அம்பாளை வேண்டி எலுமிச்சம் பழ விளக்கேற்றி பக்தியோடு வணங்குகின்றார்கள். விளக்கேற்றியவுடன் எண்ணெய் கையை தூண்கள் மீதும், சுவற்றின் மீதும் துடைத்து விடுகின்றார்கள். நம் வீட்டின் சுவற்றில் கரியையோ எண்ணெயயோ பூசுவோமா? அப்படியிருக்கக் கோயில்களின் தூண்கள் மீது மட்டும் ஏன் அம்மா -இந்த அலட்சிய பாவனை? நூற்றுக்கணக்கானவர் விளக்கு ஏற்றுகின்றோமே! சுமார் 200 எலுமிச்சம்பழ பாகங்கள் விளக்காக எரிந்து மேஜை மீதும் திண்ணை மீதும் உள்ளனவே! அவற்றையெல்லாம் அகற்றிப் பின்னர் வருபவர்களுக்கு விளக்கேற்ற வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று யாருக்காவத் தோன்றாதா?

  பெரிய கோயில்களில் சுவாமிக்கு தவறாமல் ஆறு கால அபிஷேகப் பூஜைகளும் நடக்கின்றன. அபிஷேகம் முடிந்த பிறகு கர்ப்பக்கிரஉறத்தையும், அபிஷேக நீர் வெளிவரும் முகத்துவாரத்தையும் சுத்தம் செய்யக் கூடாதா. கர்ப்பக்கிரஉறத்திற்குள் எல்லோரும் போக இயலாது. சரி. சுற்றுப் பிரகாரத்தில் உள்ள முகத்துவாரத்தை சுத்தம் செய்யக்கூடாதா? அழுகிய பூக்களும், பாலும், தண்ணீரும் அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசி வயிற்றைக் குமட்டுகிறதே? ஒரு தர்க்காவிலோ, ஒரு சர்ச்சிலோ இப்படிப் பார்க்க முடியுமா? நம் கோயில்கள் என்றால ஏன் இப்படி? நம் கலாச்சாரம், நம் தூய்மை எல்லாம் என்ன ஆனது ? எங்கு போனது?

  ஒரு பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் விழா நடக்கின்றது. விழாவிற்கு நிறுவனத்தின் தலைவர் தலைமை தாங்குகின்றார். அவரது மனைவி விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைக்கின்றார். விழா நடக்கும் இடம் ஒரு சிறு கிராமம். விழா கட்டிடத்தின் உள்ளே அல்ல. வெளியே ஒரு தற்காலிக மேடையில் நடக்கின்றது. கிராமத்து மக்களுக்கு மருத்துவ வசதிகள் அளிக்கப் பெறுகின்றன. மருத்துவ மையத்திற்கு நிறுவனம் பல மருத்துவக் கருவிகளை அளிக்கின்றது. அக்கருவிகளை நிறுவனத்தின் தலைவரே கொடுக்கக்கூடாதா? நிறுவனத்தில் நான்காவது அல்ல ஐந்தாவது தகுதியில் உள்ள ஒரு அதிகாரிதான் அவற்றைக் கொடுக்கின்றார். அவர் பணிபுரியும் டிபார்ட்மெண்ட் பணப்புழக்கம் அதிகம் உள்ள வியாபார விரிவாக்கப் பகுதி!! (Marketing Department). அன்று எடுக்கப் பெறும் புகைப்படங்கள் எல்லாம் நிறுவனத்தின் நியூஸ்லெட்டர் எனும் மாத வெளியீட்டிலும் வரும். அவரது முகத்தை ஆள் உயர விளக்கு மறைத்தது. இதற்காக விழாவினை அமைத்தவர் ஜாடை செய்ய நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டாம் படி பணியாளர்கள் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளானால் வேலை போய் விடுமே என்ற பயத்தில் ஆள் உயர விளக்க இங்கும் அங்குமாக நகற்றினர். விளக்கை நகற்றியதில் எண்ணெய் அனைத்தும் அவர் தலையில் கொட்டிக் கடைசியில் தலைவரின் கார் ஓட்டுநரை வைத்தே ஏற்றிய விளக்க ஏற்றியவாறே உள்ளே எடுத்ச் செல்ல வைத்து வெற்றி கண்டார் விழா அமைப்பாளர். சில கேள்விகளைக் கேட்க நான் விரும்புகின்றேன். கிராமத்தில் அதுவும் வெட்ட வெளியில் தற்காலிக மேடையில் கட்டாயமாக விளக்கு ஏற்ற வேண்டுமா? அப்படியே ஏற்றினாலும் சின்ன விளக்காக மார்க்கெட்டிங் அதிகாரியின் முகத்தை மறைக்காதவாறு ஏற்றக்கூடாதா?

  தீபம் என்பது இருளைப் போக்குவது. புற இருளை மட்டுமின்றி அக இருளையும் சேர்த்துப் போக்க வேண்டி ஏற்றப்படுவது. அதற்குத் தக்க மரியாதைத் தர வேண்டாமா? விளக்கை ஏற்றியவர் முன்னிலயிலேயே அவர் ஏற்றிய விளக்கை அகற்றுகின்றீர்களே - அது ஏற்றியவருக்கு மரியாதை இல்லை என்பது வேறு விஷயம். தீபத்திற்கு நீங்கள் தரும் மரியாதை என்ன? ஏற்றிய விளக்கின் எண்ணெய் தரையிலோ அல்லது தலையிலோ கொட்டுவது அபசகுணம் இல்லையா? இந்த சம்பவத்திற்குப் பிறகே அந்த நிறுவனம் பல துர்அதிர்ஷ்டங்களைக் கண்டது இத்தகைய அபச குணங்களால ஏற்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறதல்லவா? இதே அமைப்பாளர் வீட்டு விழாவில் விளக்கை அவரது மகளும் தமக்கையும் வீட்டிற்குள் ஏற்றி அணைத்து விடாமல் எண்ணெய் விட்டு பாதுகாத்தது தெரியும் - அது அவரது இல்லத்து விழா, குடும்ப நல விழா என்பதால்தானே? இந்த கரிசனம் சம்பளம் கொடுக்கும் நிர்வாகத்தின் பாலும் ஏன் இருக்கக் கூடாது?

   

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com