• ஏதோ நினைவுகள்!!
  (பகுதி 2)

  பூமியில் வாழும் சில உயிர்கள் ஓர் அறிவு மட்டுமே கொண்டவை. புல், பூண்டு, தாவரங்கள் போன்ற உயிரினங்களைச் சொல்லலாம். இவற்றிற்கு தொடுதலால் உணரும் அறிவு (ஸ்பரிசம்) என்ற ஓர் அறிவு மட்டுமே உண்டு. கடல்வாழ் பிராணிகளான சிப்பி, நத்தை, கிளிஞ்சல் போன்ற உயிரினங்களுக்கு தொட்டால் உணரும் அறிவோடு நாக்கு என்ற சுவை அறிவுமாக இரண்டு அறிவுகள் உண்டு. இவ்விரண்டு அறிவுகளுடன் நுகரும் அறிவு உடைய உயிரினங்கள் ஈசல், எறும்பு, செல் போன்றவை. மூன்றறிவுடன் கண் என்ற பார்வை அறிவும் உடையன நான்கு அறிவு கொண்டவையான நண்டு, தும்பி, வண்டு போன்ற உயிரினங்கள். நான்கறிவுகளுடன் கேட்கும் அறிவும் கொண்டவை ஐந்தறிவு கொண்ட வெளவால், ஆமை மற்றும் விலங்கினங்கள் போன்றவை. ஆறாவது அறிவான சிந்திக்கும் மனத்தைக் கொண்டவன் மனிதன் மட்டுமே. இதுதான் ஆராய்ந்தறியும் அறிவு. மனம் என்பது எங்கே இருக்கிறது? பலர் இருதய ஸ்தானத்தைக் காட்டுவார்கள்!! மனம் அங்கு இல்லை. மனம் என்பது சிந்திக்கும் சக்தி!! அது உறுப்பு வடிவில் இருப்பதன்று. அலை வடிவத்தில் அமைந்ததே மனம். உருவம் இல்லாத மனத்திற்கு மகிழ்ச்சி உண்டு. துக்கம் உண்டு. தெம்பு உண்டு. சோர்வு உண்டு. காதல் உண்டு. மோதலும் உண்டு!! கனிவு உண்டு. காழ்ப்பு உண்டு. அன்பு உண்டு. அகங்காரங்களும் உண்டு. நினவுகள் உண்டு. மறதியும் உண்டு. உணர்ச்சிகளின் பிறப்பிடம் மனம். உணர்ச்சிகள் பாஸிடிவ், நெகடிவ் (Positive and Negative) என்பதால் மனம் அதற்கேற்றவாறு செயல்படுகின்றது. உடலைப் பிறர் கட்டுப்படுத்த இயலும். ஆனால் மனதை கட்டுப்படுத்த இயலாது ஒருவரைப் பார்க்கச் செல்லக்கூடாது. அவருடன் பேசக்கூடாது என்று உடற்கூறுகளைக் கட்டுப்படுத்த இயலும். அவர்களைப் பற்றி நினக்காதே என்று ஒருவரது மனதைக் கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தவே இயலாது. இதன் காரணமாகவே மனதைத் தூய்மயாகவும், கட்டுப்பாடுடனும் வைத்திருத்தல் அவசியம்.

  என் மகள் அபிராமி சிறு வயதில் கேட்பாள். “இலையில் எல்லா சாப்பாட்டையும் வைத்து சாதமும் வைத்தாகிவிட்டது. இதற்கு மேலும் என்ன வைத்தால் சாப்பிடலாம்?" என்பாள். எனக்குத் தெரியாது என்பேன் நான். “மனசு வைத்தால் சாப்பிடலாம்" என்பாள் அவள். வேடிக்கயான விஷயம்தான். ஆனால் எத்தனை அர்த்தமுள்ள சங்கதி.

  சிந்தனைச் செல்வர் டாக்டர்.எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள் கூறுவார்கள். “உங்களுக்குத் தெரியும். சோளம் விதைத்தால் சோளம் முளைக்குமென்று. நெல் விதைத்தால் நெல் முளைக்குமென்று. அப்படியிருக்க ஏன் வேண்டாத நெருஞ்சி முள் போன்ற எண்ணங்கள் மனதில் விதத்க் கொள்கின்றீர்கள?". எத்தனை சத்தான சங்கதி.

  டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பற்றிய நினைவுகள் என் மனதில் மோகின்றன. என் கணவர் டாக்டர் ஏ.சி.முத்தையா அவர்கள் இப்போதைய அண்ணா பல்கலைக்கழகமும் அன்றைய கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியுமான கலைக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு வேதியியல் (Chemistry) ஆசிரியராக இருந்தவர். ஏ.சி.எம். அவர்கள் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது எங்களுக்குத் திருமணம் நடந்தது. எங்கள் திருமணத்திற்கு பிறகு எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள் அமெரிக்கா புறப்பட்டுச் செனறார். இரண்டாண்டுகள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு தமது மனைவி சீத்தா அம்மாவையும் மகன்கள் சித்தார்த், அசோக் ஆகியோரையும் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் குடும்பத்தில் அவர் கடைசியாக அழைத்துக் கொண்டது அவர்கள் மகள் கமலாவை. டாக்டர் ஏ.சி.எம் அவர்களும் நானும் 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்றோம். ஏ.சி.எம் அவர்கள் எக்ஸெல்லோ கார்ப்பரேஷனில் Apprentice Trainee ஆக அப்பொழுது பணியில் இருந்தார்கள். வாழ்க்கை ரோஜா படுக்கையாக ஒன்றும் இல்லை! (Life was not a bed of roses). கடுமையான உழைப்புதான் மாதச் சம்பளத்தையே ஈட்டித் தரும். எங்களது அன்றைய நிலையை டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் நன்கு அறிவார்கள். அவரது நிலைமையை நாங்கள் நன்று அறிவோம். ஏ.சி.எம் அவர்களும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களும் சிறுகச் சிறுக சேமித்துப் பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள். எக்ஸெல்லோ கம்பெனி ஏ.சி.எம் அவர்களை அமெரிக்காவிலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டார்கள். எங்களுக்கு இந்திய நாடும் அங்குள்ளவர்களின் வளர்ச்சியும்தான் முக்கியம் என்று கூறி வந்து விட்டோம். வராது அங்கேயே இருந்திருந்தால் இத்தனை உயர்ந்திருக்க இயலுமா என்று உயர்ந்த சமயங்களிலும், சிரமங்கள் சுட்டெறித்த சமயம் அங்கேயே இருந்திருந்தால் எத்தனயோ உயர்வாக இருந்திருக்கலாமே என்றும் தோன்றும்!! உதயமூர்த்தி குடும்பத்தினர் மாடிஸன் விஸ்காஸின் எனும் ஊரில் ஒரு சிறிய வீட்டில் பேஸ்மெண்டில் வாழ்ந்து வந்தார்கள். அங்கு கிரே உறவுண்டு பஸ்ஸில் சென்ற எங்களை உபசரித்த அருமையைச் சொல்லி முடியாது. அவர்கள் குடும்பத்துடன் டெட்ராய்ட், மிச்சிகன் வந்து எங்களது சிறிய அபார்ட்மெண்ட்டில் தங்கியதும் என்னால் மறக்க இயலாது. முதியோர் இல்லத்தில் பணி புரிந்து வந்த சீத்தா அம்மா அவர்களை நினத்தால் இன்றும் என் கண் கலங்கும். நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் அதிகம் இராத அமெரிக்காவில் ஆங்கிலமே சரியாகத் தெரியாத அவர் எத்தனை சிரமங்களிடையே தானும் கற்றுணர்ந்து குழந்தைகளையும் கற்பித்து வளர்த்ததை இன்றும் நினைவு கொள்வேன். டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி விஸ்கான்ஸின் பல்கலக்கழகத்தில டாக்டர் பட்டம் பெற்று எத்தனையோ நூல்கள் அறிவு வளர்ச்சிக்கென தந்திருக்கின்றார். எத்தனையோ ஆயிரம் பேர்கள் அவர் எடுத்துக் கொடுத்த நல்வழியைப் பின்பற்றி இன்று நடந்து செல்கின்றனர். அவர் ஓர் உயர்ந்த ஆசிரியர். He is a super teacher.

  டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள்தான் எங்கள் குடும்பத்திற்கு இயக்குநர். கே.பாலசந்தர் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அன்று மாலை பாலசந்தர் அவர்களின் “அவள் ஒரு தொடர்கதை" படத்தின் வெள்ளோட்டம். “தனது படம் ரிலீஸ் ஆகும் சமயம் அவர் அதிக டென்ஷன் ஆகி விடுவார். ஆகையால் உங்கள் வீட்டிற்கு அவரை அழைத்து வருகிறேன். உங்களுடன் பேசிக் கொண்டிருந்தால் அவருக்குச் சற்று டென்ஷன் குறையும்" என்று கூறி பாலசந்தரை எங்கள் இல்லத்திற்கு எம்.எஸ்.உதயமூர்த்தி அழைத்து வந்தார். அன்று முதல் என் கணவருக்கு கே.பாலசந்தர் அவர்கள் ஒரு நல்ல நண்பர் ஆயினார். டாக்டர்.எம்.எஸ். உதயமூர்த்திக்கு எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளையின் இலக்கியப் பரிசு 1997 ஆம் ஆண்டு அவரது “நம்மால் முடியும் தம்பி" என்ற நூலிற்காக அளிக்கப் பெற்றது. அவருக்கு அப்பரிசினை அளிப்பதற்கு கே.பாலசந்தர் அவர்களை அழைத்தோம். அந்த இனிய நினைவுகள் என்றும் என் மனதில் மல்லிகைப் பூவாக மணம் வீசிக் கொண்டிருக்கும்.

  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்த தேன் அருவி எழுத்தாளர் திருமதி.சிவசங்கரி அவர்கள். சிவசங்கரியை எனக்கு நெருங்கிய இனியத் தோழியாகத் தந்தமைக்கு நான் என்றும் அன்னை அபிராமியிடம் நன்றி கூறும்போது டாகடர்.எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களையும் நினைத்துக் கொள்வேன். சிவசங்கரி பற்றிய நினைவுகள்.............

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com