• ஏதோ நினைவுகள்!!
  (பகுதி 3)

  சென்ற இதழில் என் அருமைத் தோழி சிவசங்கரி பற்றிக் கூற ஆரம்பித்தேன். என் நல்ல நேரம் அவருக்கு “அவிஸ்திதா" (Avisthitha) எனும் கலைக்கான விருது கிடத்திருக்கின்றது. விருது வழங்கும் குழுவின் உறுப்பினர்கள் யாவரும் வட இந்தியர்கள். ராஜஸ்ரீ பிர்லா, வீணா கோத்தாரி (அம்பானியின் மகள்) போன்றவர்கள். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்தது சிவசங்கரி என்ற தென்னாட்டுப் படைப்பாளியை!! நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை தரக்கூடிய சங்கதி.

  சிவசங்கரியைப் பாராட்ட தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். "தேவகி சென்ற இதழில் உதயமூர்த்தியைப் பற்றி எழுதிவிட்டு என்னைப் பற்றி அடுத்து வரும் என்று கூறியிருக்கிறீர்களே. எனக்கு அடுத்த இதழில் என்ன வருமோ என்று திக்திக்கென்று இருக்கிறது" என்றார்களே பார்க்கலாம்!! இத்தனை பெரிய எழுத்தாளர் என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து நான் என்ன எழுதப் போகிறேனோ என்று கூறினார்கள் என்றால் அது அவர்களது பெரிய மனதையே பறை சாற்றுகின்றது. நாம் எழுதும் எழுத்து என்றும் நிலையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் நான். அது நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அது உண்மையாக மட்டுமே இருக்க வேண்டும். சிவசங்கரி பற்றி நான் எழுதப் போவது எல்லாம் உண்மைதான். உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை.

  சிவசங்கரி ஒரு மிக அற்புதமான பெண்மணி!! உயர்ந்த எண்ணங்கள், நேர் கொண்ட பார்வை. பிறரை மதிக்கும் பண்பு. கல்வி, கலை பற்றிய ரசனை, ஈடுபாடு, பெண்மயின் உயர்விற்குப் பாடுபடும் எண்ணம், எழுத்து, உள்ளம், உடல், சுற்றுப்புறம் என்று எப்பொழுதுமே தூய்மையைக் கடைப்பிடிக்கும் பாங்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பால் கொண்ட அன்பு, மனிதர்கள் மட்டுமல்ல பிராணிகளிடமும் கொண்ட பாசம் என்று எண்ணில் அடங்காத நற்பண்புகளைக் கொண்டவர் சிவசங்கரி!! அவர் அடிக்கடி கூறும் சில வாக்கியங்களைக் கூறுகிறேன். அதிலிருந்து நீங்களே அவர்களைப் பற்றி எடைபோட்டுக் கொள்ளுங்கள். 1. மனதை எப்பொழும் காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். மன இறுக்கம்தான் பல விரும்பத்தகாத செயல்களுக்குக் காரணம். 2. என் வளர்ப்பு நாயான “ஷியாமாவை "அவள்" என்றுதான் குறிப்பிட விரும்புகிறேன். அது என்று சொல்ல மாட்டேன். 3. நம் நாட்டில் பெண்கள் ரொம்பவும் பாதிக்கப் பட்டிருக்காங்க தேவகி. அவர்களுடைய முன்னேற்றம்தான் என் முக்கிய குறிக்கோள். அவர்களது உயர்வை எண்ணித்தான் நான் எழுகிறேன். இப்படிப் பலப் பல.

  முதன் முதல் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் அறிமுகத்துடன்தான் சிவசங்கரியின் நட்பு எனக்குக் கிட்டியது. ஆண்டு சரியாக நினைவில் இல்லை. சிவசங்கரியும் அவரது கணவர் சந்திரசேகரும் எங்கள் இல்லத்திற்கு வந்தார்கள். பேச ஆரம்பித்தப் பின்புதான் அவரது தகப்பனார் திரு.சூர்யநாராயணன் அவர்கள் சூரி அண்டு ஸன்ஸ் எனும் ஆடிட் நிறுவனத்தின் நிறுவனர் என்றும் அவர்களது நிறுவனம்தான் என் பெற்றோருக்கும், என் தாய் வழி மாமன் M.CT.சிதம்பரம் செட்டியார் அவர்களின் அலுவலகங்களுக்கும் ஆடிட் செய்கின்றவர்கள் என்று அறிந்தேன். மகிழ்ந்தேன். கலகல என பேசிச் சிரித்த சிவசங்கரியை எனக்கு ரொம்பவே பிடித்துப் போயிற்று. அவர்கள் அப்பொழு வழுதுரெட்டி என்று விழுப்புரத்தின் அருகில் உள்ள ஒரு சிறிய ஊரில் சிமெண்ட் பைப்புகள் செய்யும் ஆலை ஒன்றினை நடத்தி வந்தார்கள். அங்கு வருமாறு என்னை அழைத்தார்கள். நான் சென்றிருந்தேன். சிவசங்கரி என்னைப் பார்த்து “தேவகி நாம் இப்பொழுது தோழிகள். என்னை “ஜிபு" என்றே அழைக்கலாம்" என்று கூறிய முதல் அவர்கள் எனக்கு ஜிபு ஆனார்கள். நானும் ஜிபுவும் மதிய உணவு அருந்தினோம். அவர்களே சமைத்திருந்தார்கள். அத்தனை ருசியான உணவு. சாப்பிட்டுக் கொண்டே அவர்கள் சிட்டி பாங்கில் (Citibank) வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே எழுவதில் எப்படி ஆர்வம் கொண்டார் என்றும் அது எப்படி வளர்ந்ததென்றெல்லாம் கூறிக் கொண்டு வந்தார். அப்பொழு நறுக்நறுக்கென்று ஏதோ சப்தம் கேட்ட. திரும்பிப் பார்த்தால் அவர்களது சியாமா எனது கைப்பையை வெகு ருசிகரமாக கடித்து மென்று கொண்டிருந்தது. “தேவகி, ஐயோ இங்க பாருங்க. உங்களது அழகானப் பையை சியாமா எப்படிக் கொதறிவிட்டாள். நான் என்ன செய்வேன். இது மாதிரி வேறு பை என்னால் வாங்க முடியுமா?" என்றெல்லாம் புலம்பினார். நான் உடனே, “சியாமா உங்கள் வளர்ப்பு மகள்தானே. உங்கள் மகள் இப்படி செய்திருந்தால் நான் அவளை கண்டித்திருப்பேனா? விடுங்கள். பைதானே! இன்னொன்று வாங்கினால் போயிற்று" என்றேன். வழுதுரெட்டியிலிருந்து திரும்பும் போது காரில் சியாமாவின் குறும்புதனை எண்ணி நானே சிரித்துக் கொண்டேன். இன்றும் நாங்கள் இந்த சுவையான நிகழ்ச்சி பற்றிக் கூறி சிரிப்போம். எங்கள் நட்பு இனிதே தொடர்ந்தது.

  அவர்கள் எழுதிய, எழுதும் அத்தனை நூல்களையும் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைப்பார். வாரம் ஒரு முறையோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அந்தப் பழக்கம் இன்று வரை உண்டு. எங்கள் இருவரில் யாராவது ஒருவர் ஊரில் இல்லையென்றால் தவிர மாதம் ஒன்றிற்கு இரண்டு முறையாவது பேசிக் கொள்வோம். ஏதாவது ஜோக் அடிப்பார்கள். நான் சிரிப்பது கேட்டு என் கணவர், “யார் அந்தப் பக்கம் சிவசங்கரியா?" என்பார். அவரது பிறந்த நாள் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதியாகும். அன்றும் நவராத்திரியின் போதும் கட்டாயமாக நான் அவரைச் சென்று பார்ப்பேன். பல விஷயங்கள் பேசுவோம். ஒன்று அவர்கள் வீட்டில் இல்லையென்றால் எங்கள் வீட்டில். அவருடன் சினிமா, நாடகம் என்று சென்றால், விசிறிகள் கூட்டம் எனக்கு சான்ஸே (chance) கொடுக்க மாட்டார்கள்!!

  அவரது கருணக் கொலை எனும் நூலினை நான் எம்.ஃபில் பட்டத்திற்காக ஒரு ஆய்வுக் கட்டுரக்காக எடுத்துக் கொண்டேன். அதனை ஜிபு ரொம்பவும் பாராட்டினார்கள். எனக்கு அது பெருமை. அவரது “ஒரு மனிதனின் கதை" எனும் நூல் MAC அறக்கட்டளை நிறுவனத்தின் பரிசிற்காக ஆராயப்பட்டு கடைசிச் சுற்றில் இரண்டாம் இடத்திற்கு இலக்கானது. எனக்கு அவர்களை விட அதிக ஏமாற்றம். குறை. என்ன செய்வது? ஆய்வுக் குழுவின் முடிவல்லவா? ஆனால் அந்தக் குறை வெகு நாட்கள் இருக்கவில்லை. அவரது “ஒரு சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது" எனும் நூல் 1988-ம் ஆண்டு இதே பரிசினைப் பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அன்று அவர்கள் பேசியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அவரது கம்பீரத் தோற்றம், அவரது வெள்ளிமணிக் குரல், அவரது எளிமையான, ஆழமான பேச்சு, அவரது கச்சிதமான உடை பார்ப்போரயும், கேட்போரையும் ரம்மிக்கச் செய்யும். அன்றும் அவ்வாறே செய்தது.

  நான் அவருக்கு கொடுத்திருப்பதைவிட அவர் எனக்கு அளித்திருக்கும் புடவைகளும், பரிசுகளும் என் அலமாரியில் நிறயவே இருக்கின்றன. ஒவ்வொரு புடவையும் ஒரு கதை சொல்லும் - அவரைப் போலவே!!

  அவரது கணவர் சந்திரசேகரின் மறைவிற்குப் பிறகு அவர் அதிகம் தாக்கப்பட்டிருந்தார். சகோதரர் சந்திரசேகருக்கு எவ்வளவோ மருத்துவமும், பணிவிடையும் அவர் செய்தது எனக்குத் தெரியும். அவரது மறைவிற்குப் பிறகு அப்படியே துவண்டு போன ஜிபு, வெகு விரைவில் சுதாரித்துக் கொண்டு மற்றவர்களுக்காக வாழ ஆரம்பித்ததும் எனக்குத் தெரியும். தனக்கு இல்லையே. பிறருக்கு இருக்கின்றதே என்ற எண்ணம் ஜிபுவிற்கு எப்பொழும் எதற்கும் வந்து எனக்குத் தெரியாது. தானும் நன்றாக உடுத்திக் கொள்வார். பிறரையும் உடுத்திக் கொள்ளச் சொல்வார். தான் பெறாத மகளை லலிதா எனும் தனது செயலரிடம் அவர் கண்டதனை நான் அறிவேன். லலிதாவிற்கு நல்லன எல்லாம் செய்த அம்மா ஜிபுதான் என்பது எனக்குத் தெரியும். என் பேரன் பேத்திகளை ஜிபு அழகாகக் கொஞ்சுவார்கள். என் பெயர்த்தி நிரந்தராவினை “பட்டாணி பட்டாணி" என்று அழைப்பார்கள். அவர்கள பார்வையோ, சொற்களோ எந்த திருஷ்டியயும் உண்டாக்கவே செய்யாது என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

  எத்தனையோ வெளி நாடுகளுக்கு அவர் சென்று வந்தவுடன் அந்த நாடுகளைப் பற்றி விவரமாகக் கூறுவார். அவர் சொல்லித்தான் நாங்கள் சைனா, சௌத் ஆப்பிரிக்கா என்று பல நாடுகளைப் பார்த்விட்டு இப்பொழுது எகிப்து நாட்டின் நைல் நதிப் பயணத்தின் மூலம் (Nile Cruise) பார்க்கச் செல்கின்றோம்.

  டெல்லி, பம்பாய் போன்ற இடங்களுக்குச் சென்றால் எங்கள் விருந்தினர் மாளிகையில் இருந்து கொள்ளலாமா என்று கேட்பார். “உங்கள் நிர்வாகத்தில் தஙகினால் தனிப் பெண்ணான எனக்கு பயமே இல்ல" என்று அவர் சொல்வது எங்கள் மீது அவர் கொண்ட நம்பிக்கைக்கு அடையாளம். செட்டியார் வீட்டு உணவுகளான பணியாரமாகட்டும், ஆடிக்கூழாகட்டும். எங்கள் தோட்டத்து சாமந்திப் பூச் செடிகளாகட்டும் கூச்சப்படாமல் என்னிடம் கேட்டு வாங்கிச் செல்லும் ஜிபுவை தோழி என்பேனா? சகோதரி என்பேனா? அன்புச் சகோதரர் சந்திரசேகரின் மனைவியான என் அண்ணி என்பேனா? மகள் என்பேனா? அவரைப் பற்றி எல்லாம் தெரிந்த எனக்கு இது மட்டும் தெரியவில்லை.

  அடுத்து என் நினைவலைகள் ஒங்கப் போவது என் தாய் திருமதி.வள்ளியம்மை ஆச்சி எனும் கலங்கரை விளக்கத்திடம்.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com