• ஏதோ நினைவுகள்!!
  (பகுதி 4)

  சென்ற “அபிராமி இதழில் “ஏதோ நினவுகள்" பகுதியில் எழுத்தாளர் சிவசங்கரியின் நினைவுகள் பற்றி எழுதினேன். அபிராமி இதழ் படித்த பின்பு சிவசங்கரி என்னுடன் தொடர்பு கொள்ள முயன்றிருக்கின்றார். நானோ வெளியே சென்றிருந்தபடியால் எங்கள் இல்லத்தில் பணிபுரியும் திரு சுவாமிநாதனிடம் “ஆச்சி வந்தால் அவர்களை ஒரு இன்பர்மேஷன் கேட்டிருந்தார்கள். அதைச் சொல்ல வேண்டும். திரும்பி தொலைபேசியில் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கின்றார்கள். நான் என்ன இன்பர்மேஷனாக இருக்கும் என்று யோசித்தபடி அவர்கலளைத் தொடர்பு கொண்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டே “கண்ணா, என்னைத் தோழி என்பதா, சகோதரி என்பதா, அண்ணி என்பதா, மகள் என்பதா என்று கேட்டிருந்தீர்கள். நான் உங்களுக்குத் தாயார் என்று அன்புடன் கூறினார்கள். என்ன பொருத்தம் பார்த்தீர்களா? இந்த மாதம் என் தாயாரைப் பற்றிய நினைவலைகளை அன்பு சிவசங்கரி இயங்க வத்திருக்கின்றார்கள்.

  என் தாயார் திருமதி வள்ளியம்மை ஆச்சி அவர்கள் கானாடுகாத்தான் சர்.எம்.ஸி.டி.முத்தையா செட்டியார், லேடி தெய்வானை ஆச்சி தம்பதியருக்கு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி 1917-ஆம் ஆண்டு ஆசை மகளாகப் பிறந்தார். என் தாயாரது அண்ணன் எம்.ஸி.டி.சிதம்பரம் செட்டியார் அவர்கள். மூத்த சகோதரி பள்ளத்தூர் O.A.OK.RM. அருணாசலம் செட்டியார் அவர்களின் மனைவியான திருமதி உமையாள் ஆச்சி அவர்கள். தாயாரின் இளைய சகோதரர் திரு முத்தையா என்பவர். என் தாயாரின் இளைய சகோதரர் பிறந்து சில நாட்களில் விசுவின் காரணமாக (connulsions) பேச்சு, மற்றும் கால்கள் கைகளின் பயன் மூன்றையும் இழந்தவர். எப்பொழுதுமே கைக்குழந்தைபோல்தான் யாராவது அவருக்கு எல்லாம் செய்ய வேண்டும். 64 ஆண்டுகள் வாழந்த இவர் சொன்ன ஒரே வார்த்த “அக்கா என்று என் தாயாரைப் பார்த்துதான்.

  என் தாயாருக்கும் என் தந்தை திரு AR.ராமனாதன் செட்டியார் அவர்களுக்கும் பால்ய விவாஹம் நடந்தேறியது. என் தாயாருக்கு அப்போது 9 வயது. என் தந்தைக்கு 10 வயது. புரசைவாக்கம் ஈலார்ட் பள்ளியில் படித்க் கொண்டிருந்தார்கள். என் தந்தையார் “கொண்டு விற்க" என்று எங்கள் நகரத்தார் வழக்கப்படி வட்டி வியாபாரம் கற்றுக் கொள்ள பர்மா சென்று அங்கு பல ஆண்டுகள் இருந்தார்கள். பதினெட்டு வயதில் தனது மைத்துனர் எம்.ஸி.டி.சிதம்பரம் செட்டியாரின் அரவணைப்பில் தொழில் பயின்று முதலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் பின்னர் திருவாங்கூர் ரெயான்ஸ் நிறுவனத்திலும் பணி புரிந்தார்கள்.

  என் பெற்றோருக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். இதில் பிழைத்து நலமாக வாழ்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நானும் என் இளைய சகோதரர் R.முத்து அவர்களும். என் தாயார் வாழந்தது ஐம்பத் மூன்று ஆண்டுகள்தான். ஆனால் அந்தக் கால கட்டத்திற்குள் அவர்கள் அமைதியாக நிதானமாகப் புரிந்திருக்கும் தர்மங்கள் எத்தனையோ!! என் அத்தையின் பிள்ளைகள், என் மாமாவின் பிள்ளைகள், என் பெரிய தாயாரின் பிள்ளைகள், மற்றும் என் உறவினர்களின் பிள்ளைகள் என்று எத்தனையோ பிள்ளைகளை அவர்கள் வீட்டில் தங்க வைத்துத் தனது கண்காணிப்பில் பேணிக் காத்திருக்கின்றார்கள். இதில் பலர் என் தாயாரை அன்புடன் நினைவு கூறும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். இன்னின்னார் என் தாயாரிடம் வளர்ந்தார்கள் என்று கூறியபோது உறவினர் பெண்மணி ஒருவர் என்னிடம் “உங்கள் தாயார் என்ன பெண்கள் ஹாஸ்டலா நடத்தினார்கள்? “ என்று கேட்டது என் மனதை சுரீர் என்று சுட்டது. என் தாயாருக்கு அவ்வளவு சாமர்த்தியமெல்லாம் கிடையாது. இப்பொழுதெல்லாம் எல்லோரும் சம்பாதிப்பதுபோல் அவர்களுக்கு அந்தக் காலத்தில் ஹாஸ்டல் நடத்தி சம்பாதிக்கவெல்லாம் தெரியாது. அவர்கள் எதைச் செய்தாலும் அன்பிற்காகத்தான் செய்தார்கள். அவர்கள் பிறந்தது பிரபலமான பெரிய குடும்பம். அவர்கள் செல்லமாக தாயாரின் அரவணைப்பிலும் அன்புச் சகோதரர் அவர்கள் அரவணைப்பிலும் வளர்ந்தவர்கள். அவர்களுக்குப் பிறருக்காக சிலவு செய்யத் தெரிந்ததேயன்றி தனக்கென்று சேர்த்து வைத்துக் கொள்ளத் தெரியவில்ல.!!

  எடுப்பான தோற்றம், தரமான ஆடைகள், சிரித்த முகம். பெரிய மூக்குத்தி மின்னும் உயர்ந்த நாசி, மெரூன் கலர் குங்குமம், பளிச்சிடும் நெற்றி, என்றும் பூச்சூட்டிய சிகை அலங்காரம். இதான் எனக்கு ஞாபகம் தெரிந்த காலத்திலிருந்து என் தாயாரின் தோற்றம். எப்பொழுதும் நல்ல தரமான உணவு உண்ண வேண்டும், வீட்டிற்கு வருவோருக்கும் கொடுக்க வேண்டும். அதுவும் எனக்கும் என் தம்பிக்கும் எல்லாமே “Always the Best” ஆகத்தான் இருக்க வேண்டும். இப்பொழுது எல்லோரும் வெளியில் ரெஸ்டாரெண்டில் உணவு சாப்பிடுகிறார்களே!! என் தாயார் அந்தக் காலத்திலேயே எங்களை மவுண்ட் ரோடில் (தற்போதய அண்ணா சாலை) எல்பின்ஸ்டன் பார்லரின் “பீச் மெல்மா ஐஸ்க்ரீமும் (Salted Biscuit) உப்பு ரொட்டியும் வாங்கித் தருவார்கள். குவாலிடி ரெஸ்ட்டாரெண்டிற்கு அழைத்துச் செல்வார்கள். சினிமா பார்க்க ரொம்பப் பிடிக்கும். எல்லா உறவினர்க் குழந்தைகளையும் உடன் அழைத்துக் கொண்டு போவார்கள். அப்பொழுதுதெல்லாம் “சிவாஜி நாடக மன்றம்" அருமையான நாடகங்கள நடத்தும். பராசக்தி, கட்டபொம்மன், TKS சகோதரர்களின் ரத்தபாசம் இராஜராஜ சோழன் ஆகிய நாடகங்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார்கள். ஒரு ரகசியத்தை இப்பொழுது உங்களுக்கெல்லாம் சொல்கிறேன். இதைப் போன்ற சந்தர்ப்பத்தில் இராஜ ராஜ சோழன் நாடகத்தின்போது ராஜா அண்ணாமலை மன்றத்தில்தான் உயர்திரு டாக்டர் A.C.M. அவர்கள் என்ன முதன் முதலாகப் பார்த்தது!!.

  என் தாயார் எனக்கும் என் தம்பிக்கும் போதித்த பல பாடங்கள். பொய் சொல்லக்கூடாது. பிறர் பொருளின் மீது ஆசை வைக்கக்கூடாது. பொறாமை படக்கூடாது. பிறருக்கு நன்மை செய்யாவிட்டால் பரவாயில்லை, கெடுதல் மட்டும் செய்யக்கூடாது. அடக்கமாக நடந்து கொள்ளவேண்டும். கெர்வம் இருக்கவே கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும் .. “பொறுத்தார் பூமி ஆண்டார்” .. இப்படி எத்தனை எத்தனையோ !!

  வெள்ளிக்கிழமை தோறும் திருவான்மியூர் மருந்தீவரர், திரிபுரசுந்தரியைச் சென்று வணங்காமல் இருக்கவேமாட்டார்கள். அப்பொழுதெல்லாம் (எனக்கு ஒன்பது வயதிருக்கும்போது) கோவிலில் விளக்கும் இருக்காது. பாதையெல்லாம் முற்புதர்கள் இருக்கும். வெளவால் கூட்டம் கூட்டமாக ஸன்னதி எங்கும் தொங்கிக் கொண்டிருக்கும். சௌந்தரம் குருக்கள் (அவர் இப்பொழும் இருக்கின்றார்) என்பவர் அவ்வளவு இனிமயாக, ஸ்பஷ்டமாக அஷ்டோத்திர மந்திரத்தை ஜபிப்பார். வெள்ளிக்கிழம வந்தால் எங்களுக்குக் குஷியாகி விடும். ஒரு பிக்னிக் போவதுபோல் புரசவாக்கத்திலிருந்து திருவான்மியூர் சென்று வருவோம்.
  என் திருமணைத்தை என் பெற்றோர் மிக விமரிசையாக நடத்தி வைத்தார்கள். பெரிய இடமாயிற்றே என்று பாவம் என் தாயார் தனது அந்தஸ்திற்கும் மீறித்தான் அத்தனை சீர்களையும் தானே செய்து வத்தார்கள். ஆனால் அவர்கள் அடிக்கடி சொல்வது உண்டு. “நாங்கள் ஏழு ஜென்மத்திற்கு காவடி எடுத்தாலும் இதைப்போல் நல்ல மாப்பிள்ள எங்களுக்குக் கிடக்கமாட்டார் என்பது. என் மகன் அஸ்வினயும் என் மகள் அபிராமியயும் பார்த்துவிட்டார்கள். என் மகள் வள்ளி பிறக்கும் முன்பே அவர்கள் காலமாகிவிட்டார்கள்.

  அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும்போது என் தம்பிக்கும் காரைக்குடி மெ.செ.மெய்யப்ப செட்டியார்-மீனாட்சி ஆச்சி தம்பதியரின் மகளான அழகம்மைக்கும் திருமணம் நடந்தது. தனது அன்பு மகன், மருமகள்,பேத்தி, பேரன் ஆகியோரைப் பார்த்துப் பூரிக்கும் பாக்கியம் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் அவர்கள மகிழ்ச்சிக்கு அளவே இருந்திருக்காது., 1970-ஆம் ஆண்டு அக்டோர் மாதம் 26-ஆம் தேதி என் தாயார் சிவபதவி அடைந்தார்கள். தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு.

  என் தாயார் இல்லையென்று மிகவும் வருந்துவேன். அப்பொழுது என் மகள் வள்ளி சிறிய பெண். 4 வயது இருக்கும். அவள் என்னிடம் கூறுவாள். “நான் இருக்கிறேன் அல்லவா? என்பாள். என் மகளுக்கும் என் தம்பியின் மகளும் என் ம்ருமகளுமான வள்ளிக்கும் என் தாயாரின் பெயர்தான். இந்த இரண்டு வள்ளிகளிலும் நான் என் தாயாரை இன்றும் பார்க்கிறேன்.

  என் தாயார் இல்லத் தோட்டத்தில் செண்டு மல்லி-மல்லிகை வகையிலேயே ரோஸ் போன்ற தோற்றம் கொண்ட மலர்கள்-கூடைகூடையாகப் பூக்கும். அதனைப் பறித்து அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் அனுப்புவார்கள். கோவிலுக்குத் தொடுத்துக் கொண்டு செல்வார்கள். இப்பொழுதுதெல்லாம் அந்த வகை மலலிகையை அதிகம் பார்ப்பதில்ல. அந்தக் காலத்து உயர்ந்த குணங்களையும் அதிகம் பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் உடனே என் மனதில் என் தாயாரின் நினைவலைகள் மோதும்!!

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com