• ஏதோ நினைவுகள்!!
  (பகுதி 5)

  என் தந்தை திரு ஏ.ஆர்.ராமனாதன் செட்டியார் அவர்கள் பெ.மு.வீட்டில் பிறந்தவர், பிறந்த நாள் நவம்பர் 23-ஆம் தேதி, வருடம் 1916. என் தகப்பனாரின் பெற்றோர் திரு பெ.மு.முத்தையா செட்டியார் மற்றும் திருமதி விசாலாட்சி ஆச்சி அவர்கள். இவர்கள் வாழ்ந்த புரசைவாக்கத்தில் M.Ct. முத்தையா செட்டியார் உயர்நிலப் பள்ளியின் அருகில் இருந்த பிரின்ஸ் அண்ட் கம்பெனி (Prince and Company) எனும் கட்டிடம். இங்குதான் என் தகப்பானர் பிறந்தார். தற்போது இந்தக் கட்டிடம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தி வரும் ஹெரிடேஜ் ரெஸ்டாரெண்ட் ஆகும்!!. இத்தனை அழகாக இன்னும் அந்தக் கட்டிடத்தைப் பராமரித்து வருகிறார்களே என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாகத்தின்பால் எனக்கு நிரம்ப மதிப்பும் மரியாதையும் உண்டு. என் பாட்டனார் திரு முத்தையா செட்டியாருக்கு முதல் மனைவி திருமதி மீனாட்சி ஆச்சி அவர்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையென்று என் அப்பத்தாள் (பாட்டி) திருமதி விசாலாட்சி ஆச்சியை அவர் மறுமணம் செய்து கொண்டார். என் அப்பத்தாளுக்கு முதலில் என் அத்தை திருமதி வண்டார்குழலி ஆச்சி அவர்கள், இரண்டாவது என் தந்தையார் அவர்கள், என் பாட்டனார் திரு முத்தையா செட்டியாருக்கு தம்பி திரு அருணாசலம் செட்டியார். இவரது மனைவி திருமதி மீனாட்சி ஆச்சி அவர்கள் என் தாயாரின் அத்தை ஆவார்கள். இவர்களுக்கும் குழந்தைகள் இல்லையென்பதால் என் தந்தையைத் தனது தம்பிக்கும் சுவீகாரப் புத்திரனாக என் பாட்டனார் எழுதி வைத்தார். இந்த உறவு முறையில் என் தாயாரை அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். முன்பே கூறியதுபோல் என் பெற்றோரின் திருமணம் பால்ய விவாஹம். இருவருக்கும் முறையே 9 வயதும் 10 வயதும் ஆகும். என் தந்தைக்கு 6 (ஆறு) வயது இருக்கும்போது அவரது தகப்பனார் (என் பாட்டனார்) மரணம் அடந்ததால் என் தாயாரின் தகப்பனாரும் என் தாயாரின் அண்ணன் திரு எம்.ஸி.டி.சிதம்பரம் செட்டியார் அவர்களும் என் தந்தயாரின் வளர்ப்பு, பராமரிப்பில் பெரும் பங்கு கொண்டனர். என் தந்தை பி.எஸ்.ஹைஸ்கூலிலும் சென்னை மாநிலக் கல்லுரியிலும் படித்தவர். கல்லூரிப் படிப்பு அதிகம் என்று சொல்ல இயலாது. பர்மாவில் கற்றதுதான் அதிகம் என்பார்கள். சிறு வயதிலேயே கொண்டு விற்க பர்மாவிற்குச் சென்றதால் நகரத்தார் பழக்கங்களும் கணக்குகளும் சரளம். வெகு சிறிய எண் உருப்புகளையும் பெருக்கும் முந்திரி, மா என்ற கணக்கு அவருக்கு அத்துப்படி (Multiplication Table of Fractions) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுனைடெட் இந்திய பயர் அண்டு ஜெனரல் (United India Fire and General) நிறுவனம் (தற்போதய LIC கம்பெனியின் தாய் நிறுவனம்) ஆகிய நிறுவனங்களில் பயிற்சி பெற்ற பின் திருவாங்கூர் ரயான்ஸ் (Travancore Rayons) நிறுவனத்தில் பொறுந்தி படிபபடியாக உயர்ந்து அக்கம்பெனியின் சேர்மனாக அமந்தார். அவருக்கு நண்பர், வழிகாட்டி (Friend Philosopher and Guide) அனைத்தும் என் தாயாரின் அண்ணன் திரு எம்.ஸி.டி.சிதம்பரம் செட்டியார் அவர்கள்தான். விதியின் விளையாட்டைப் பாருங்கள். என் தந்தை ஆறு வயதில் தன் தகப்பனார இழந்து என் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார். என் மாமா தனது 46வது வயதில் சிங்கப்பூரில் ஏற்பட்ட விமான விபத்தில் அகால மரணமடைந்தார்கள். அவரது இரண்டு மகன்களான எம்.ஸி.டி.முத்தயா, எம்.ஸி.டி.பெத்தாச்சி ஆகியோருக்கு என் தந்தைதான் கடைசி வரை வழிகாட்டியாக அமைந்தார்கள். நானும் என் தம்பி ஆர்.முத்துவும் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். எதிலும் முதல் என் மாமாவின் புத்திரர்கள்தான். இதைப்பற்றி எனக்கோ என் தம்பிக்கோ எந்தவிதமான காட்டமோ பொறாமையோ கிடையாது. மகிழ்ச்சியும் பெருமையும்தான்!! அவர்களை அத்தனைப் பாதுகாப்பாக வளர்த்தார், என் தந்தை.

  என் தந்தை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் என்று மூன்று மொழிகளிலும் மிகச் சரளமாகப் பேசுவார்கள். சென்னையில் இருந்ததைவிட திருவாங்கூர் ரயான்ஸ் ஆலை இருந்த இடமான பெரும்பாவூரில்தான் (Kerala) அதிகம் வாழ்ந்தார்கள். கோட்டு சூட் போட்டுக் கொண்டு தொப்பியுடன் கையில் குடையுடன் அவர்கள் நடந்து செல்லும்போது வெள்ளைக்காரன் என்றுதான் பலரும் நினப்பார்கள். நல்ல உயரம், நல்ல நிறம், எடுப்பான நாஸி. மொத்தத்தில் He was a handsome man!! அவரைப்போல்தான் என் தம்பி ஆர்.முத்துவும். காரம்ஸ், டென்னிஸ். கால்ப், வெயிட் லிப்டிங் (weight lifting) என்று பல ஆர்வங்கள். அவர் வெகு சிறப்பாக ஹார்மோனியம் வாசிப்பார்களாம். இது என் தாயார் சொல்லக் கேள்வி. என் பேத்திகள் விலாஸிநியும் நிரஞ்சனாவும் ஹார்மோனியம் வாசிக்கும்போது என் தந்தையைத்தான் நான் நினைத்துக் கொள்வேன். ப்ரிட்ஜ் (Bridge) எனும் சீட்டாட்டத்தில் அவர் வல்லவர். தக்காளி சூப், காரட் கூட்டு, சப்பாத்தி, சோளம் சீஸ் பேக், பிடித்த உணவு வகைகள். மேல்நாட்டு இசைத் தட்டுகளைக் கேட்பது பிடித்தமான பொழுதுபோக்கு.

  வெளிநாட்டுப் பயணம், அதிலும் ஸ்விட்சர்லாந்து நாட்டுப் பயணம் என்றால் அவருக்குக் கட்டிக் கரும்புதான். எனக்கும் டாக்டர் ஏ.ஸி.எம். அவர்களுக்கும் திருமணமானவுடன் எங்களை ஸ்விட்சர்லாந்துக்கு வரவழைத்து சுற்றிக் காட்டியது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். 1966-ஆம் ஆண்டு அவர்கள் எனக்கு வாங்கித் தந்த சிறிய டேபிள் அலாரம் கெடிகாரம் இன்றும் இனிமையாக ஒலித்து அவர்களது நினைவுகளை என் மனதில் மோத வைக்கின்ற.

  என் தந்தையார் மிகவும் அன்பானவர். அவருக்கு நண்பர்கள் ஏராளம். இன்றும் அவரைப் பற்றி நினைவு கூறி மகிழ்வார்கள். வருடா வருடம் ஊட்டிக்கு வருவார்கள். என் மாமனார் திரு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் அவர்களும் என் தந்தயாரும் சிறந்த நண்பர்கள். இருவரும் ஏதோ பேசிப் பேசி சிரித்துக் கொள்வார்கள். “ராஜா ராஜா" என்று அவர்கள் என் தந்தையை அழைப்பார்கள். பெரும்பான்மையோருக்கு அவர் “ராமய்யா". அவர் திருவாங்கூர் ரயான்ஸ் ஆலையில் நடக்கும் தொழிலாளர்கள் பிரச்சனைகளை வெகு சாமர்த்தியமாக அணுகித் தீர்த்து வைப்பார்கள். ஒரு முறை எனக்கு நன்றாக நினைவு இருக்கின்றது. ஆலையில் தொழிலாளர்கள் பேராட்டம் காரணமாக யாரும் வேலைக்கு வரவில்லை. அங்கு பணி செய்த திரு மேத்தா என்பவரும் என் தந்தையாரும் ஆலைக்குச் சென்று இரவு முழும் அதனை இயக்கினார்கள். வேகமாகக் கார் ஓட்டும் பழக்கம் அவருக்குக் கடைசி வரை இருந்தது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டில் மலையில் விழுந்ததனால் தோள் பட்டை முறிவு ஏற்பட்ட பின்பும் கூட அவர் கார் ஓட்டுவார்!!,

  என் தாயார் 1970-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்கள். அப்பொழுதெல்லாம் “நான் தம்பி சிறியவன். புதிதாகத் திருமணம் ஆனவன். நம் பழக்கங்கள் அதிகம் தெரியாதே..நாம் என்ன செய்யப் போகிறோம். தந்தையார் ஊரிலேயே அதிகம் இருக்கமாட்டார்களே என்று நினைத்தண்டு. ஆனால் நடந்ததே வேறு. என் தாயார் இருக்கும்போது எங்கள் வளர்ப்பில் அதிகம் ஈடுபாடு செலுத்தாவிடினும் என் தாயாரின் மரணத்திற்குப் பிறகு அவர் எங்கள் நலனில் இத்தனை ஆர்வம் கொண்டார் என்பதனைக் கண்டு நான் வியந்தண்டு. வீட்டில் என்ன பொருள் வந்தாலும் வெள்ளரி பிஞ்சிலிருந்து வேர்க்கடலை வரை எதுவானாலும் எனக்கு அனுப்பி வைப்பார்கள!!

  சரித்திரத்தில் நான் படித்தண்டு. பேர் அரசர் பாபர் தன் மகன் ஹுமாயூன் நோயுற்றபோது மகனைத் தோளில் கிடத்தி கோட்டைச் சுவர்மீது நடந்து நடந்து இறைவனிடம் தன் ம்கனைக் காத்து தன் உயிரை வேண்டுமாயின் எடுத்துச் செல்ல வேண்டினாராம். என் தந்தை வாழ்வில் சிறு மாற்றம், மகன் என்பது மருமகன் என்று மாறியது. 1989-ஆம் ஆண்டு டாக்டர் ஏ.ஸ்.எம். அவர்களுக்குச் சிறி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரது உடல் பரிசோதனக்காக நாங்கள் இங்கிலாந்து சென்றோம். செல்லுமுன் என் தந்தை சொன்ன வார்த்தகள் “நீங்கள் (குழந்தைகள்) எல்லாம் நலமாக இருக்கும்போதே நான் போய்விடவேண்டும் என்ப்தான் என் ஆசை..!! “இங்கிலாந்து நாட்டிற்கு நாங்கள் சென்று ஏ.ஸி.எம். அவர்கள் உடல் நிலை பூரண ஆரோக்கியத்துடன் உள்ளது. எந்தக் கவலையும் வேண்டாம் என்று என் சகோதரருக்கு நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறிய சமயம் “நான் என்ன சொல்லடடும். நீ திரும்பி வரும் வரை தந்தையாரை உயிருடன் வைத்து இருக்க இயலுமோ என்னவோ தெரியவில்ல. Father is slowly slipping away” என்றார். முத்து கூறியது போல் நான் திரும்ப வந்த சமயம் அவரால் என்ன அடையாளம் கூடக் கண்டு கொள்ள இயலாத கோமா நிலையில் இருந்தார். 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி என் மகள் அபிராமிக்கும் ஜவஹருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்பொழுதெல்லாம் தந்தையார் மிகவும் மோசமான நிலைமையில் வெலிங்டன் மருத்வமனையில் இருந்தார்கள். இந்த சுபகாரியம் நடைபெறக் காத்திருந்ததுபோல் செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்!!. என் கணவரின் உயிரையும் காப்பாற்றி விட்டார்கள். என் அருமை மகளின் திருமண நிச்சயதார்த்தத்தையும் கெடுக்காமல் நடத்தி வத்து விட்டார்கள். மரணத்தின்போதும் கூட மகளுக்கு நன்மை செய்து சென்ற தந்தை இவரைப்போல் எத்தனை பேர் இருந்திருப்பார்கள், சொல்லுங்கள். பேத்தியின் திருமணத்தை இருந்து பார்க்கவில்லையே என்று நான் ஏக்கத்துடன் ஒரு புறம் நினைத்தாலும் இருபது ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த என் தாயாருடன் இணந்து விட்டார்கள் என்று என் மனம் அமைதி கொண்டது.

  ‘அபிராமி மாத இதழில் என் போன்று எழுதி வரும் அன்பர் எம்.ஆர்.ராமசாமி. அவர் தனது கடிதத்தில் “தங்கள் நினைவலைகள் வணக்கத்திற்குரிய அன்னை அவர்களின் பாச அலைகள். அவை எங்கள் நெஞ்சங்களைச் கனக்க வைத்த உணர்வலகள். எங்கள ஆச்சியின் பசுமையான நினைவுகள் சோக ரேக ஓடிய சுவ அலைகள் என்று சொல்லும்பொழுது கண்கள் பனிக்கின்றன. நெஞ்சம் தொட்ட நினைவலைகள் அடுத்து கொண்டு வரும் முத்துக்காகக் காத்திருக்கின்றேன் என்று எழுதி இருந்தார்.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com