• ஏதோ நினைவுகள்!!
  (பகுதி 6)

  என் எண்ண அலைகள் இம்முறை கரை சேர்த்திருப்பது ஒரு உண்மையான முத்து. அதுதான் என் தம்பி ஆர்.முத்து!! என் பெற்றோரின் ஆறாவது பிள்ளை. ஆனால் எனக்கென்று எஞ்சியிருக்கும் ஒரே சகோதரன் இந்த முத்து. அவன் பிறந்தது 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ம் தேதி அன்று. ஆம்!! அது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் வருஷம் (Leap year) பிப்ரவரி கூடுதல் நாட்கள் கொண்ட மாதம். சிறுவனாக இருக்கும் போது தம்பி அழுவான். “அவளுக்கு மட்டும் (அதாவ எனக்கு) வருஷா வருஷம் பிறந்த நாள் வருகிறதே. எனக்கு மட்டும் ஏன் நான்கு வருஷத்திற்கு ஒரு முறை மட்டும் என்பான். நான் சொல்வேன் “இங்கு பார். இது எத்தனை விசேஷமான பிறந்த நாள். நம் நாட்டின் பெரிய பெரிய தலைவரான மொரார்ஜி தேசாய். கலாக்ஷத்திரத்தை நிறுவிய திருமதி ருக்மணி அருண்டேல் அனைவரும் பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்தவர்கள்தானே. அதுபோல் நீயும் இந்த நாடே போற்றும் தலைவனாவாய். பிறந்த நாளுக்கென்ன. ஃ மார்ச் மாதம் 1ஆம் தேதி பள்ளியில் கொண்டாடலாமே என்பேன். சிரித்துக் கொண்டு சிட்டாய் ஓடி விடுவான். எப்பொழுதும் ஓட்டம்தான். காலை ஊன்றி சிறு வயதில் நடந்ததே இல்லை. டாக்டர் அழகப்ப செட்டியார் ரோடில் இருக்கும் எங்கள் வீடு சன்னி ஸைடிலிருந்து (Sunny Side) இராஜா அண்ணாமலை செட்டியார் ரோடில் இருக்கும் எம்.ஸி.டி.எம் ஸ்கூல் வரைக்கும் ஒரு நாளில் பத்து முறையாவது ஓடிச் சென்று விட்டு வருதுவான் இந்த “மிட்டாய் முத்து" _ அப்படித்தான் என் மாமா திரு.எம்.ஸி.டி.எம்.சிதம்பரம் செட்டியாரை அவனை அழைப்பார்கள். சாக்லேட், மிட்டாய் என்றால் அவ்வளவு இஷ்டம். குணத்திலும் மிட்டாய் போல் ரொம்ப ரொம்ப ஸ்வீட்!!

  முதலில் என்னோடு ஈவார்ட் பள்ளியில்தான் படித்தான். பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நேரம்தான் - நடந்து வந்தால். முத்து இரண்டு நிமிடத்தில் ஓடி வந்து சாப்பிட்டு விட்டு நான் வீட்டிற்குள் நுழைவதற்குள் திரும்பப் பள்ளிக்கு ஓடி விடுவான். சாப்பிடுவதும் அத்தனை அவசரமாக. இதில் என்ன வேடிக்கை என்றால் அவர் இன்றும் மாறவில்லை. (கவனிக்க வேண்டும். சிறுவன் முத்துவைப் பற்றிக் குறிப்பிடும் போது அவன் என்பேன். தற்போதுள்ள ஆர்.முத்துவைக் குறிப்பிடும் போது அவர் என்பேன்). இப்பொழுதும் டேபிளில்
  உட்கார்ந்து ஐந்து நிமிடத்திற்குள் எழுந்து விடுவார். பிடித்தமான சாப்பாடு தயிர் சாதம், உருளைக்கிழங்கு சிப்ஸ்!! சிறு வயதில் எங்கள் தாயார் செய்து வைத்திருந்து குலோப் ஜாமூன சாப்பிட்டு விட்டு, குலோப் ஜாமூனை விடஅந்த ஜீராவைக் குடித்துவிட்டு பாவம் பிள்ளை வயிற்று வலியால் அவதிப்பட்ட. அதன் பிறகு வெகு நாட்களுக்கு “ஜீரா" என்று சொன்னால் போதும் என்னை அடிக்க வருவான். ஈவார்ட் ஸ்கூலில் ஐந்தாவது வரைப் படித்து விட்டு அதற்கு மேல் அப்பள்ளியில் ஆண் பிள்ளைகளை வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் “டாமினிக் ஸேவியோ" பள்ளியில் சேர்ந்தான். அதுதான் டான் பாஸ்கோ பள்ளியின் ஆரம்பம். அவன்தான் முதலாவது செட். அப்பொழுது அந்தப் பள்ளி சாந்தோமில் சாந்தோம் சர்ச்சிற்கு எதிரில் இருந்தது. பின்புதான் எக்மோர் மியூசியம் அருகில் வந்தது. அங்கு இரண்டு ஆண்டுகள் படித்த பின்பு டேராடூனில் உள்ள டூன் ஸ்கூலிற்கு அவனை என் பெற்றோர் அனுப்பி வைத்தார்கள். சென்னையிலிருந்து கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் சென்று, டெல்லியிலிருந்து டேராடூன் செல்ல வேண்டும். முதன் முதலில் அவனைப் பள்ளியில் விடுவதற்கு நானும் என் பெற்றோரும் சென்றிருந்தோம். அவனைப் பள்ளியில் சேர்த்துவிட்டு நாங்கள் வரும் பொழுது, நான் அழுது அழுது என் கண்கள் வீங்கி விட்டன. தம்பி ஊரில் இருக்கும் போது “ஆத்தா!! தம்பி என்னை அடிக்கிறான் என்று கத்தும் நான் அவன் இல்லாத போது அந்த அடி, உதையை ரொம்பவும் மிஸ் பண்ணினேன் போலும். பள்ளி விடுமுறையில் வந்தவுடன், ரொம்பவும் அன்பாகப் பழகிவிட்டு, மூன்றாவது நாள் திரும்பவும் என்னை அடிக்க ஆரம்பிப்பான். நானும் ஆத்தா தம்பி என்னை அடிக்கிறான் என்ற கூச்சல்தான். இப்படி அடித்த தம்பிதான் இப்போது இத்தனை அன்பா? வயதும், வளர்ச்சியும் அவரை எப்படிப் பக்குவப்படுத்தியுள்ளது!!

  பள்ளி நாட்களில் நாங்கள் ஆடாத ஆட்டமேயில்லை. அப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டரோ, டி.வியோ ஏன் டிரான்ஸிஸ்டர் கூடக் கிடையாது. விளையாட்டெல்லாம் தோட்டத்தில்தான். கண்ணாமூச்சி ஆட்டம் (Hide and seek) பந்தை வைத்துக் கொண்டு ஹோலி கோலி (Holly Colly) என்று பந்தால் அடித்து விளையாடுவோம். எங்கள் மாமாவின் ரிலயன்ஸ் மோட்டார் கம்பெனியிலிருந்து பாடி பில்டிங்கிற்காக டிரக்குகள் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்கள். அதில் ஒளிந்து விளையாடுவோம். பக்கத்து வீடு, எதிர் வீடு என்று அந்த வீதியில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் விளையாடுவோம். ஒரு முறை என் அத்தை மகளின் நாத்தனார அலமாரியில் வைத்துப் பூட்டியம் அவள் “மூச்சு விடமுடியவில்லை" என்று கத்தியபோது கதவைத் திறந்து விட்டு அவளைத் திட்டியது இப்பொழும் நினைத்தால் உடம்பெல்லாம் நடுங்குகிறது!!

  தம்பியும் அவன் தோழன் பிருத்வி தம்புசாமியும் கேட்டில் நின்று கொள்வார்கள். போகும் கார்களை எல்லாம் நிறுத்தி கார் ஓட்டுநரிடம், “ஸார் கார் ஓடும்போது டயர் சுத்கிறது என்பார்கள். சிறு குழந்தைகள் என்று சிரித்துவிட்டுச் செல்வோரும் உண்டு. கோபமாக அடிக்க வருபவர்களும் உண்டு. நான் தூரத்தில் நின்றுதான் இதையெல்லாம் பார்ப்பேன். எங்கள் தந்தை பணி புரியும் பெரம்பாவூர் (Kerala) சென்றால் பெரியாரில் போட்டில் போக வேண்டும் என்பான். ஒரு முறை கூட்டிச் சென்று விட்டு இரண்டாவது முறை கேட்ட போது என் தந்தையின் உதவியாளர் திரு.வள்ளியப்பன் அவர்கள் என் தாயாரிடம் தேவகியை வேண்டுமானால் அழைத்துச் செல்கிறேன், ஆச்சி. முத்துவை என்னால் “மேனேஜ்" செய்ய முடியவில்லை. போட்டில் குதிக்கிறான்” என்று அவர் சொல்லப்போக “ஏன் நீயும் என்னைப் போல் ஆட்டம் போடாமல் சமர்த்தாக இருந்தாய் என்று அடி வாங்கியது நான்தான்.

  1965ஆம் ஆண்டு டாக்டர்.ஏ.சி.எம் அவர்களுக்கும் எனக்கும் திருமணம் முடிந்த சமயம் முத்து டூன் ஸ்கூலில் படிப்பை முடித்து விட்டு இலண்டனில் உள்ள “மிஸ்ஃபீல்டு” பள்ளிக்குச் சென்றார். இலண்டனில் மூன்று ஆண்டுகள் படித்த போதுதான் நாங்களும் அமெரிக்காவில் இரண்டாண்டுகள் தங்கிவிட்டு இலண்டனுக்கு வந்தோம். எங்களுடன் ஆறு மாதம் போல் முத்து இருந்தார். படிப்பு முடிந்த பின்பு இரவு வேளையில் என் தந்தைக்குத் தெரிந்த ஒருவர ஹோட்டலில் வேலை பார்ப்பார். அதில் வரும் பணத்தில் எங்களுக்குப் பரிசுகள் வாங்கி வருவார். எனக்குப் பெருமையாக இருக்கும்!!

  1969ஆம் ஆண்டு என் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது நோயின் கடுமையை உணர்ந்த உறவினர்கள் “முத்துவின் திருமணத்தை முடித்து விடுங்கள்” என்று கூறினார்கள். முத்துவின் அழகுக்கு ஏற்ற அழகுதான் அவர் மனைவி அழகு!! நிறத்தில், உயரத்தில், பழக்க வழக்கங்களில் எல்லாவற்றிலும் அது ஒரு தேர்ந்தெடுத்த தம்பதி - Made for Each other couple. அவர்கள் திருமணம் ஜூன் மாதம் 7ஆம் தேதி 1970ம் ஆண்டு கோட்டையூரில் நடந்தது. திருமண வரவேற்பு எங்கள் திருமணம் நடந்த ஆபட்ஸ்பரியில் (அண்ணா அறிவாலயத்திற்கு அருகில்) நடந்தது. அன்று நாங்கள் எடுத்துக் கொண்ட குடும்ப போட்டோ அத்தனை அழகாக அமைந்தது. என் தாயாரின் கடைசிப் படமும் அதுவே!!

  1970ஆம் ஆண்டு முத்துவின் மகள் வள்ளி பிறந்தாள். அதன் பின் ஆறு ஆண்டுகள் கழித்து மகன் ராமநாதன் பிறந்தான். என் தந்தை வழிப் பாட்டனார்தான் “திருவாலங்காடு” கோயில் திருப்பணி செய்தவர்கள். அங்கு விளக்கு இல்லை என்று சொன்னார்கள். நானும் தம்பி முத்துவும் விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்தோம். செலவில் Fifty. Fifty. அதாவது சரிபாதி. அப்பொழுது நான் நினைக்கவேயில்லை. அவனது பாதியும், என் பாதியும் சேர்ந்து மற்றொரு முழுமயாகப் போகிறது என்று!! ஆம். அவன் மகள் வள்ளிக்கும், என் மகன் அஸ்வினுக்கும் 1990ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அன்றிலிருந்து முத்து என் சம்பந்தியானார்!! காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நான் “என் தம்பி" என்று ஏதாவ சொன்னால், “உங்கள் சம்பந்தியா" என்று கேட்பார்கள். அவன் எனக்கு 45 ஆண்டுகள் தம்பி. அதன்பின் தானே சம்பந்தி என்று சொல்வேன். அதற்கு அவர்கள் கலகலவென்று சிரிப்பார்கள். அதானே உண்மையும் கூட?

  என் தாயார் மறைவிற்கு முன்பு என்னிடம், “நீயும், மாப்பிள்ளையும் முத்துவை உங்கள் பிள்ளை போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஒரு தந்தையைப் போல் பாசமாகவும், தாயைப் போல் பரிவுடனும் அவர்தான் என்னைப் பார்த்துக் கொள்கின்றார். எனக்குத் தமக்கை என்ற வகையில் செய்ய வேண்டிய முறைகளையும், சம்பந்தி என்ற வகையில் செய்ய வேண்டிய முறைகளையும் குறையேதும் இல்லாமல் செய்து இருக்கின்றார். செய்து கொண்டும் வருகின்றார். அவரதுப் பாசம் என்னை மிகவும் நெகிழச் செய்யும். ஒரு முறை கொடைக்கானலில் அவர்களது வீட்டு கிரஹப்பிரவேஸம். கோயிலிலிருந்து தீர்த்தம் கொண்டு சென்றோம். நான் காலணி அணியவில்லை. கல் குத்தியது. என் செருப்பைப் போட்டுக் கொள் என்று கொடுத்தது" ஒரு முறை மலேசியாவிற்கு நான் தனியாக சென்ற போது அவர் கொரியா போவதாக இருந்த போதும், என்னை இமிகிரேஷன் வரை அழைத்துச் சென்று விட்டு விட்டுச் சென்றது. நேற்று மாலை உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்த போது நான் தனியாக வருகிறேன் என்பதால் அவர்கள் வீட்டு வாசலிலேயே நின்றிருந்து என்னை உள்ளே அனுப்பி வத்து விட்டு வீட்டிற்குச் சென்றது இவையெல்லாம் சாதாரணமாக ஒரு தம்பி அக்காவிற்குச் செய்யும் செயல்களா? எனக்குத் தெரியவில்லை. ஒரு தந்தை தன் மகளுக்குச் செய்வது போல் அல்லவா இருக்கின்றது!!

  நான் முன்பே கூறியிருக்கின்றேன். என் தந்தைக்கு சுவிட்சர்லாந்து மிகவும் பிடித்த இடம். அதே சுவிட்சர்லாந்திற்கு கான்சலாக (Consul) என் தம்பியை சில ஆண்டுகளுக்கு முன்பு நியமித்திருக்கின்றார்கள். நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். முத்து ஒரு நாள் சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதுவராகவே நியமிக்கப் பெறுவார். அவர் பிறந்த 29ஆம் தேதி பிப்ரவரி ஆயிற்றே!! மொரார்ஜி தேசாய் போல், ருக்மணி அருண்டேல் போல் உலகே வியக்கும் தலைவராக ஆக வேண்டுமல்லவா!!


   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com