• ஏதோ நினைவுகள்!!
  (பகுதி 7)

  ‘ஏதோ நினைவுகள்" என்ற தலைப்பில் என் சகோதரர் ஆர்.முத்து அவர்களைப் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அதன் முடிவில் என் கணவரின் தங்கை திருமதி.சீத்தா சிதம்பரம் அவர்களைப் பற்றி எழுத எண்ணியதைக் குறிப்பிட்டிருந்தேன். ஏதோ என் நினைவுகளில் ஒரு சிறு தடங்கல். மெண்டல் பிளாக் (Mental Block) என்று சொல்வார்களே. இந்த நிலையில் புதிதாக எதுவும் எழுத இயலவில்லை. அதன் காரணமாகவே முன்பு எழுதிய கட்டுர ஒன்றயே அபிராமி வாசகர்களுக்குக் கொடுக்க நேரிட்டது. அந்தத் தடை இப்போது நீங்கி விட்டது. எழுத முயன்று எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

  மார்ச் மாத ‘அபிராமி" இதழில் சீத்தாவைப் பற்றி எழுதுவம் பொருத்தமே. நான் முன்பே கூறியிருந்தேன் அல்லவா. என் தம்பி ஆர்.முத்து பிறந்த பிப்ரவரி 29ம் தேதி. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் இயர். அப்படி அல்லாத ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி அவரது பிறந்த தேதியாகும். சீத்தாவின் பிறந்த தினம் மார்ச் 3ம் தேதி. இருவரும் ஸ்வாதி நட்சத்திரமானதால் இருவர் பிறந்த நாளும் மாசி ஸ்வாதி அன்றுதான். நீங்கள் இந்தக் கட்டுரையைவர்கள் இருவரும் தங்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

  என் கணவர் டாக்டர்.ஏ.சி.முத்தையாவின் ஒரே தங்கை சீதா. ராஜா சர்.அண்ணாமலை செட்டியாரின் பெயர்த்தி. டாக்டர்.எம்.ஏ. சிதம்பரம் செட்டியார், அபிராமி ஆச்சியின் ஒரே செல்ல மகள் சீதா. பிறப்பாலும், வளர்ப்பாலும் இளவரசி. படித்த ரோஸரி மெட்ரிகுலேஷன் பள்ளி-அந்தக் காலத்தில் அது செயின்ட் தாமஸ் கான்வென்ட் (St.Thomas Convent) என்று அழைக்கப் பெற்ற கான்வென்ட் பள்ளி. ப்ரீ யூனிவர்சிட்டி படிப்பு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், பி.ஏ., ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் இராணி மேரி கல்லூரியிலும் படித்தவர். சீதாவும், நானும் ஒரே ஆண்டில் (1961ஆம் ஆண்டு) வெலிங்டன் சீமாட்டி கல்லூரியில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதினோம். அவர் ப்ரீ யூனிவர்சிட்டி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்றார். ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் இராணி மேரிக் கல்லூரியில் பயின்றார். ஆனால் நான் நான்கு ஆண்டுகளும் அதாவது P.U.C மற்றும் இளங்கலைப் பட்டம் இரண்டையும் இராணி மேரி கல்லூரியில்தான் பயின்றேன். நாங்கள் கல்லூரித் தோழிகள் (College mates) என்றும் கூடச் சொல்லலாம்!!

  சீதா பள்ளியில் படிக்கும் போதும் சரி. கல்லூரியில் படிக்கும் போதும் சரி. அவர்களுக்கென்று தனிக் கார் வரும். அதில் அவர்கள தாயார் அல்லது உறவினர் பெண்கள் அல்லது ஒரு பெண் பணியாளர் வருவார்கள். சீதாவின் இணை பிரியா பள்ளித் தோழிகள் சிவபாக்கியம், பத்மா, தயா போன்றவர்கள். கல்லூரித் தோழிகள் கீதா பத்பன், தாஜ் பேகம், பகவந்தி, சூஸன் ஜான், விசாலாக்ஷ¤ என்றவர்கள். வரலட்சுமி, அலமேலு போன்றவர்கள் அவர்களுக்குப் பள்ளிக்கு வெளியே என்றுமே நெருக்கமான தோழிகள். அனைவரையும் அழைத்துக் கொண்டு பிக்னிக் போவார்கள். பொம்மைக்கு பர்த்டே பார்ட்டி கொண்டாடுவார்கள். முன்பே சொன்னேனே செட்டிநாடு அரண்மனக்கே அவர்கள் செல்லப் பெண்!! ராஜா சர் அண்ணாமல செட்டியாரின் மகன்களான மூன்று சகோதரர்களுக்கும் ஒரே பெண் குழந்தை. அவர்கள் நிலாவையே கேட்டாலும் கூட கொண்டு வந்த்து தர அவர்களது தகப்பனாரும், பெரிய தகப்பனாரும், அண்ணன்களும் எப்பொழும் தயார்!! இத்தனை செல்லத் தங்கைக்குத் திருமணமாகி அவர்கள் சொந்த அத்தை வீட்டிற்கு (ஆம். திரு.சீதாவின் கணவர் திரு.வி.சிதம்பரம் அவர்கள் அவரது அத்தை மகன்தான்.) செல்லும்போது அப்படி வருத்தப்பட்டனர். நானும் தோழிகள் கூட்டத்தில் ஒருத்தியாக அவர்கள் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். எனக்கும் ஒரு தாம்பூலக் கூடையைத் தம் கையாலேயே டாக்டர்.ஏ.சி.எம் அவர்கள் தந்தார்கள்!! சீத்தாவின் அத்தை அவர்களது திருமணத்திற்கு சில மாதங்கள் முன்பு காலமாகி விட்டார்கள். ஆகையால் பதினேழு வயதிலேயே குடும்பப் பொறுப்புகள் சீத்தாவிற்கு அதிகம்தான். குடும்பப் பொறுப்புகளுக்கிடையே படிப்பை மிகவும் திறம்படத் தொடர்ந்தார்.

  நாங்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, எனக்கும் டாக்டர் ஏ.சி.எம் அவர்களுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பெற்றது. அந்த ஆண்டு கல்லூரியிலிருந்து நாங்கள் ஹைதராபாத், ஒளரங்கபாத், பம்பாய் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா சென்றோம். அங்கு எனக்கு டெங்கு காய்ச்சல் வந்து விட்டது. சீத்தா சுற்றுலாவை விடுத்து என்னை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டது இன்றும் என் மனதில் பசுமையாக படர்ந்திருக்கின்றது. 1989ஆம் ஆண்டு என் கணவருக்கு உடல்நிலை பாதிக்கப் பெற்ற சமயம் சீத்தா அவரைப் பார்த்துக் கொண்டதும் என் நினைவில் இன்றும் உள்ளது. சீத்தா ஒரு அருமையான செவிலியராகவோ, உயர்ந்த மருத்துவராகவோ இருந்திருக்கக் கூடியவர். அவரது கண்காணிப்பும், கவனிப்பும் அத்தனைத் தரம் வாய்ந்தது!!

  சீத்தாவின் ஒரே மகன் வெங்கட். அவர்களது திருமணத்திற்கு பதினோரு ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். அவரது வளர்ப்பின் சிறப்பு சொல்லில் அடங்காது. சீத்தா. பெங்களூர் கைலாச ஆசிரமம் மற்றும் திருச்சி சுவாமிகளிடம் அபார ஈடுபாடு கொண்டவர். ராஜேஸ்வரி அம்மன் சீத்தாவின் இல்லத்திற்கு அடிக்கடி வருவாள். ஸ்வாமிகள் அவர்கள் வீட்டில் தங்கும் அந்தப் பத்து நாட்களும் சீத்தா தெய்வப் பணிவிடையில் மூழ்கிவிடுவார்!! அவரது பக்தியும், பணிவிடையும் என்னை வியப்பில் ஆழ்த்தும்!! ஸ்வாமி அறையை சுத்தமாக வைத்துக் கொள்வதில், அழகாகக் கோலமிடுவதில், வீட்டை அலங்காரம் செய்வதில், அழகாய் உடை உடுத்திக் கொள்வதில் அனைத்திலும் முத்திரை பதித்து விடக் கூடியவர் சீத்தா. பிறருக்கு என்ன கொடுத்தாலும் சிறந்தவற்றையே கொடுக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. எந்தப் பொருளுமே அதிகமாக இருந்தாலோ, ஒன்றிற்கு மேற்பட்டு இருந்தாலோ அவருக்குப் பிடிக்காது. “ரொம்ப சாமான்கள் இருந்தால் எனக்குத் தலையை சுற்றுகின்றது என்பார். எங்கள் வீட்டுப் பேப்பர் குப்பையைப் பார்த்தால் அவர்களுக்கு மயக்கமே வந்விடுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்!!

  சீத்தாவிற்கு மிகவும் விருப்பமானவை அவர்கள பெயர்த்தி ஐஸ்வர்யா. நிறங்களில் ரோஸ் நிறம், உணவில் பணியாரம், பழ வகைகள், சாக்லேட். அசைவத்தில் இறால், வீணை வாசிப்பது இவருக்குப் பிடித்த பொழுபோக்கு. புத்தகங்களில் அவரது மிகவும் கவர்ந்தது திருவாசகம். அவர் சமஸ்கிருத மொழியில் புலமை வாய்ந்தவர்.

  நானும் எம் தம்பியும் கரடு முரடான குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள். அதன் காரணத்தால் எங்கள் தாயார் 1970ஆம் ஆண்டு இறந்த போது முதலில் நிலைத் தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டோம். ஆனால் தனது ஐம்பத்தி ஐந்தாவது ஆண்டில் சீத்தா தனது தகப்பனார், தாயார் இருவரையும் இழந்த போது நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். இவ்வளவு செல்லமாக வளர்ந்த மகள் எப்படி இந்தப் பேரிடியைத் தாங்கிக் கொள்ளப் போகிறாரோ என்று. இந்த இழப்புப் போதாதென்று சீத்தாவின் கணவர் திரு.வி.சிதம்பரம் அவர்களும் 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி அகால மரணமடந்தார்கள். இராஜராஜேஸ்வரியயும், நவராத்திரி விழாவையும் தனது இல்லத்தில் பக்தியுடன் ஒவ்வொரு ஆண்டும் வரவேற்று விமரிசையாகக் கொண்டாடும் சீத்தாவிற்கு, அம்பிகை ஏன் இந்த துக்கத்தை நவராத்திரியின் போது கொடுத்தாள்? இதுதான் சென்ற நான்கு ஆண்டுகளாக எனக்கும் நவராத்திரி நாயகிக்குமிடையே நடந்து வரும் வாக்கு வாதம்!!

  சீத்தா கானாடுகாத்தானில் அவர்கள் மாமியார் பெயரில் ஒரு ஆங்கிலப் பள்ளியை நடத்தி வருகின்றார்கள். சீத்தாவின் கான்வென்ட் பள்ளிப் பயிற்சியும், அவர்களது ஆங்கிலப் புலமையும் (Scholar) கிராமத்துக் குழந்தைகளுக்கு ஒரு சிறந்தப் பள்ளியையும், எதிர்காலத்தையும் அமைத்துக் கொடுக்க உதவியிருக்கின்றன. அவர்களதுப் பணி தொடர்ந்து வெற்றிகரமாக வீறுநடைபோட்டுச் செல்ல திருக்கடைவூர் அபிராமித் தாயை வேண்டி நிற்கின்றேன்.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com