ஏதோ நினைவுகள்!!
(பகுதி 8)

மனம் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைக்கும்போது அதில் மோதுவது நினைவலைகள் சற்று வருத்தமும் தொய்வும் அதனை அழுத்தும்போதும் மனதில் வந்து மோதுவது நினைவலைகள். நம் முன்னோர்கள் சொல்லில், செயலில் உயர்ந்தவர்களாக இருந்த காரணத்தால் அதன் நல்ல பலன்களை அனுபவிப்பர்கள் நாம்தான். அந்த வகையில் பார்க்கப் போனால் கல்விக்கும் தொழில் மேம்பாட்டிற்கும் அயராது உழைத்த குடும்பம் M.Ct.M. குடும்பம். புரசைவாக்கம் தொகுதியில் பெயர் பெற்ற கல்வி நிறுவனங்கள் எம்.ஸி.டி.எம்.முத்தையா செட்டியார் ஆண்கள் பள்ளி, லேடி எம்.ஸி.டி.எம். தெய்வானை ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்.ஸி.டி.சிதம்பரம் செட்டியார் பிரபரேட்டடரி பள்ளி போன்றவை. இவை அனைத்தையும் நிறுவி, வளர்த்த குடும்பத்தில் பிறந்த எம்.ஸி.டி.எம். முத்தையா அவர்களது திருவுருவச் சிலையைப் பள்ளியில் நிறுவி உள்ளார்கள். அந்தக் குடும்பத்தில் பிறந்த திருமதி வள்ளியம்மை ஆச்சி என் தாயார் என்பதனைப் பெருமையுடன் நினைத்துக் கொள்கின்றேன். அந்தச் சிலைத் திறப்பு விழாவில் நான் ஆற்றிய உரையே இம்மாத ‘அபிராமி’ வாசகர்களுக்கு என் நினைவு அலைகளின் ஒரு பகுதி!!

மேதகு ஆளுநர் திரு.சுர்ஜித் பர்னாலா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள், திருமதி. கமலா முத்தையா அவர்களுக்கும், திரு.எம்.ஸிடி பெத்தாச்சி அவர்களுக்கும் என் மரியாதைக்குரிய வணக்கங்கள். திருமதி.ஆர்த்தி தருண் அவர்களுக்கும், செல்வி நந்தினி முத்தையா அவர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள். மற்றும் எம்.ஸிடி குடும்பத்தினர், விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள், எம்.ஸிடி.எம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெரியோர்கள், தாய்மார்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள்.

தெய்வத்திரு எம்.ஸிடி.எம் முத்தையா அவர்களது திருஉருவச் சிலையை மேதகு ஆளுநர் அவர்கள் திறந்து, எம்.ஸிடி முத்தையா தொழில் பயிற்சிப் பள்ளியை துவக்க இருக்கும் இந்நன்னாளில் என்னை திரு.முத்தையா அவர்களைப் பற்றிய செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள திருமதி.கமலா முத்தையா அழைப்பு விடுத்ததை பெருமயாகக் கருதுகின்றேன்.

மறைந்த திரு.எம்.ஸிடி முத்தையா அவர்கள் 1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி சர்.எம்.ஸிடி முத்தையா செட்டியார் அவர்களின் பேரனாகவும், திரு.எம்.ஸிடி,எம்.சிதம்பரம் செட்டியார் அவர்களின் மூத்த மகனாகவும் பிறந்தார். இவர் இளமையில் பெயின் ஸ்கூல், கீழ்ப்பாக்கத்திலும், பிற்பாடு டேராடூன் டூன்ஸ் ஸ்கூலிலும் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பள்ளிப் படிப்பினை முடித்தபின் மேற்கொண்டு படிப்பினைத் தொடராமல் தனது தகப்பனாரின் மேற்பார்வயில் குடும்ப வணிகத்தினைப் பல ஆண்டுகள் பயின்றார். பல வருடங்கள் பயிற்சிக்குப் பின்னரே அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் முதல்நிலைப் பட்டத்தையும், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தையும் பெற்றார். எம்.ஸிடி குடும்பம் பல தொழில்களிலும், வணிகத்திலும் முன்னோடியாகத் திகழ்ந்தது. அவற்றில் சில, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுனைடெட் இந்தியா ஃபயர் அண்டு ஜெனரல் இன்சூரன்ஸ் ..பிற்காலத்தில் L.I.C (லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) ஆனது, திருவாங்கூர் ரயான்ஸ், ரிலயன்ஸ் மோட்டார் கம்பெனி போன்ற தொழில் நிறுவனங்கள் பிற்காலத்தில் தேசிய உடமையாக்கப்படபோகின்றன என்று உணராத நிலையில் இக்குடும்பத்தாரால் துவக்கப் பெற்ற தொழில் நிறுவனங்கள் இவை. 1959 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி திரு.எம்.ஸிடி,முத்தையா அவர்களின் தந்தையார் திரு.எம்.ஸிடி.எம் சிதம்பரம் செட்டியார் அவர்கள் விமான விபத்தில் அகால மரணமடைந்தது முதல் குடும்பத்தின் அத்தனை தொழில், வணிகப் பொறுப்புக்களையும் திரு.எம்.ஸிடி.முத்தயா இளம் வயதிலேயே தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டு மிகுந்த அக்கறையுடனும், சீரிய திறனுடனும் நடத்தி வந்தார். சதர்ன் இந்தியா சேம்பர் ஆஃப் காமர்ஸ், பெடரேஷன் ஆப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோஷியேஷன் ஆப் இந்தியா, மெட்ராஸ் ரேஸ் கிளப், ரோட்டரி சங்கம் போன்ற சபைகளுக்குத் தலைவராக இருந்தவர் திரு.எம்.ஸிடி.முத்தையா. ரிலயன்ஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்திற்கு தனது மறைவு வரை தலைவராகப் பணி புரிந்தார். நான் குறிப்பிட்டிருப்பது நான் அறிந்த அவரது தொழில் வர்த்தக ஈடுபாட்டில் ஒரு சிறிய பகுதி மட்டும்தான். அவரது தந்தையாரின் மறைவிற்குப் பின் எனது தந்தயார் திரு.ஏ.ஆர்.ராமநாதன் அவர்கள் திருவாங்கூர் ரயான்ஸ் கம்பெனியின் தலைவராகவும், எம்.ஸிடி முத்தையா, எம்.ஸிடி பெத்தாச்சி அவர்களின் காப்பாளராகவும் அமைந்த போதிலும் எனது தாய் திருமதி.வள்ளியம்மை ஆச்சி அவர்களின் உறவு வழியில்தான் திரு.எம்.ஸிடி முத்தையா அவர்களது மென்மையான குணங்களை நான் அறிய முடிந்தது. எனது தாயார் எம்.ஸிடி.எம் சிதம்பரம் செட்டியார் அவர்களின் இளைய சகோதரி. நானும் எம் தம்பி ஆர்.முத்துவும் குடும்பத்துக் குழந்தைகளில் கடைக்குட்டிகள். இதன் காரணத்தால் எம்.ஸிடி.முத்தையாவிற்கும் எங்களுக்கும் வயது வித்தியாசம் அதிகம். வயதில் அவர்கள் மூத்தவர்கள் என்ற காரணத்தால் அவரிடம் எங்களுக்கு எப்பொழுதும் அச்சம் கலந்த ஒரு மரியாதை. பார்ப்பதற்கு கண்டிப்பானவராகத் தோன்றினாலும் அவரது பேச்சிலும் செயலிலும் எங்கள் மீதுள்ள அக்கறையை நாங்கள் எப்பொழும் உணர முடிந்தது. நானும் முத்துவும் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பெட்ஃபோர்ட் உறவுஸில்தான். அங்கு ஒரு ஊஞ்சல் இருக்கும். அதில் நான் உட்கார்ந்து கொள்ள என் தம்பி அதனை மிக வேகமாகத் தள்ளுவான். ஒரு முறை எம்.ஸிடி முத்தையா இதைப் பார்த் விட்டு எங்களிடம் வந்து, “இந்த முரட்டுத்தனமான விளையாட்டை விடாவிட்டால் நீங்கள் ஊஞ்சலில் விளையாடவே கூடாது” என்று கூறினார். அன்றிலிருந்து நாங்கள் ஊஞ்சலில் மென்மையாகத்தான் விளையாடினோம். எங்கள் பாட்டி தெய்வானை ஆச்சியின் பூஜை அறையும், துளசி மாடமும், தூய்மையும், தெய்வீகமும் கொண்டதாக இருக்கும். அவரது பணியாள் குமாரன் (கேரளாவைச் சேர்ந்தவர்) பூஜைகளைச் செய்வார். பூஜை முடிந்தபின் முந்திரிப் பருப்பு, திராட்சை கலந்த பிரசாதத்தையும், சுண்டலையும் விநியோகிப்பார். நாங்கள் சரியாக அந்த நேரத்தில்தான் போய் அமர்வோம். எம்.ஸிடி முத்தையா அவர்கள், “பூஜைக்கு முதலிலிருந்தே வரவேண்டுமே தவிர பிரசாதம் கொடுக்கும் நேரத்தில் மட்டும் வரக்கூடாது” என்பார்கள். அந்தக் கண்டிப்பும் வழிகாட்டுதலும் இன்னும் என் பக்திக்கு ஒரு முன்னோடி. ஆண்டு தோறும் திருப்பதியில் நடைபெறும் சகஸ்ரகலாபிஷேகத்தையும், திருவொற்றியூரில் நடைபெறும் மாசி மகத்தையும் தரிசிக்க அவர் தவறியதே இல்லை. கானாடுகாத்தானில் அமைந்த சிதம்பரமூர்த்தி விநாயகர் கோயில் அவருக்கு பிடித்தமான கோயிலாகும். 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 - ஆம் தேதி அன்று அங்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாதான் கானாடுகாத்தானில் அவர் மறைவிற்கு முன் கலந்து கொண்ட கடைசி விழாவாகும். எப்பொழுதும் உயர்ந்த, தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்வார். அவரது புன்னகை கவர்ச்சிகரமாக இருக்கும். உறவினர்களது குடும்ப விழாக்களில் அவசியம் கலந்து கொள்வார். நாற்காலி, குறிச்சி இதயெல்லாம் தேடமாட்டார். வயதான உறவினர்களுடன் தரையில் அமர்ந்த வண்ணம் வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார். எங்கள் பாட்டி, அவரது தாயார், அத்தைகள் மற்றும் அனைத்து உறவினர்களிடமும் பாசத்தோடும், மரியாதையோடும் பழகுவார். என் தாயார் தினம் மாலையில் வந்து பார்த்து விட்டு ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருப்பார். அவர் என் மீது கொண்ட பாசமிகு அக்கறையின் உச்சம் என்ன என்று நான் உங்களுக்கு கூறப் போகிறேன். திரு.ஏ.சி.முத்தையா அவர்களின் பெற்றோரிடம் என்னை அவருக்குத் திருமணம் செய்து வைக்கக் கோரி திருமண செய்தியை எடுத்துச் சென்றதே திரு.எம்.ஸிடி முத்தையா அவர்கள்தான். என் மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கையில் அவரை நான் அன்புடன் நினைத்து வணங்காத நாட்களே இல்லை.

அவரது துணைவியார் திருமதி.கமலா, அவரது புதல்விகள் ஆர்த்தி, நந்தினி மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர். தூய்மையும், கண்டிப்பும் அவருக்கு இரு கண்கள் போல். பணியாளர்கள் துடைத்தபின்பு கூட டேபிள், நாற்காலி போன்ற பொருட்களின் அடியில் தூசி இருக்கின்றதா என்று பார்ப்பார். ஒரு முறை பெட்ஃபோர்ட் உறவுஸிற்குப் போன போது சுவரெல்லாம் கலர் பென்சிலில் கிறுக்கி இருப்பதைப் பார்த்து “என்ன இது என்று கேட்க” “இது ஆர்த்தி நந்தினி வேலை. அவர்கள் கொஞ்சம் பெரியவர்களான பின்புதான் திரும்ப பெயிண்ட் அடிக்க வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

எம்.ஸிடி.சிதம்பரம் செட்டியாருக்கு ஒரு சகோதரர் இருந்தார். இவர் உடல் ஊனமுற்றவர். அவரால் பேச முடியாது. நடக்க இயலாது. அவரை எம்.ஸி.டி.முத்தையா அத்துணை அக்கறையுடன் கவனித்து வந்தார். அவருக்குத் தேவையான பணியாட்களையும், வெளியே போக தனி வாகன வசதியையும், மருத்துவ வசதிகளையும் செய்து வந்தார். இவர் 64 வயது வரை வாழ்ந்தார் என்றால் அதற்கு எம்.ஸிடி முத்தயாவின் கண்காணிப்பும் பரிவும்தான் காரணம் என்று கூறலாம். அவர் மறைந்த அன்று கூட பெரியவரின் திதி என்றும் அதற்கு ஏற்பாடுகளை முதல் நாள் மாலையே செய்து வைத்திருந்தார் என்றும் அறிந்தோம். குடும்பத்தின் மீது இத்துணை பாசம் கொண்ட எம்.ஸிடி முத்தையா சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையின் அடையாளம்தான் இந்தப் பள்ளிகள். 100 ஆண்டுகளுக்கும் மேல் இக்குடும்பத்தாரால் ஆரம்பிக்கப் பெற்று அவர்களது பராமரிப்பில் அமைந்த இப்பள்ளி வளாகத்தில் அவரது திரு உருவச்சிலை அமையப் பெற்ற சாலச் சிறந்ததாகும். தொழில் வணிக மேம்பாட்டுடன் சமுதாயப் பணியும் எம்.ஸிடி முத்தையாவிற்கு தலையாய கடமை என்பதை இத்திருவுருவச் சிலை என்றும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும்.

அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது குடும்பத்தினர் மேலும் மேலும் கல்விப் பணியையும், சமுதாயப் பணிகளையும் சிறப்புடன் தொடரவும் திருக்கடவூர் அபிராமியிடம் வேண்டிக் கொள்கின்றேன். எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை அளித்திட்ட திருமதி.கமலா முத்தையா, கண்மணிகள் ஆர்த்தி, நந்தினி அவர்களுக்கும் நன்றி கூறி இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகின்றேன். நன்றி, வணக்கம்.

     
Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com