திருக்கடவூர்
திருக்கடவூர் எனும் தலம் தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்குத் தென்கிழக்கே 22 கி.மீ. தொலைவிலும், காவிரிப்பூம்பட்டினத்திற்கு 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அட்ட வீரட்டங்களில் முதலாவது, தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட 27 திருக்கோவில்களுள் சிறப்பு மிக்க ஒன்று. மார்க்கண்டேய முனிவரைக் காக்கும் பொருட்டு, கால
சம்காரம் நிகழ்ந்த தலம். இறைவனது திருநாமம் அமிர்தகடேசர். இறைவியின் திருநாமம் அபிராமவல்லி.
தலச்சிறப்பு
பிரமன் ஞானோபதேசம் பெற விரும்பி, சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தான். தவத்திற்கு இரங்கிய இறைவன், தன் ஞானத்தினையே வில்வ விதையாக்கி
அவ்வில்வ விதையினைப் பிரமனிடம் கொடுத்து இவ்விதை எத்தலத்தில் ஒரு
முகூர்த்த காலத்தில் (1.30 மணி நேரம்) முளைக்கின்றதோ, அத்தலமே உனக்கு ஞானோபதேசம் கிடைக்குமிடம் என்று அருள, பிரமனும் அவ்வாறே பல
இடங்களில், இட்டுப் பார்த்து அது முளைக்கவில்லை. இத்தலத்தில் இட்டதும்
குறித்த காலத்தில் முளைத்தது. பிரமனும் இறைவனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்றான். இதனால் வில்வவனம் என்றும் வில்வ மரம் தல விருட்சமாகவும்
விளங்குகின்றது. பிரமன் பூசித்த சிவலிங்கம் வில்வவனேசுவர் என்ற பெயரோடு மேற்கு நோக்கிய சந்நிதியாக சுவாமி கோவில் வடக்குப் பிரகாரத்தில் பிச்சாடன மூர்த்தி சபைக்குக் கீழ்ப்பால் அமைந்துள்ளது.
மார்க்கண்டேயர் வரவழைத்த கங்கையில் சாதிமுல்லைக் கொடியும் வந்தமையால் அதுவும் இங்கு தல விருட்சமாகவும் திகழ்கின்றது. தலத்திற்குப் பிஞ்சிலவனம்
(பிஞ்சிலம் - சாதி முல்லை) எனும் பெயரும் உண்டு.
திருக்கடவூர் பெயர்க் காரணம்
அசுரர்களும், தேவர்களும் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தனர்.
அமிர்தம் என்றென்றும் இளமையையும், இறவாத் தன்மையையும் தரவல்ல தெய்வீக திரவியம். இத்திரவியத்தைப் பெற மந்திர மலையை மத்தாகவும், வாசுகி எனும்
சர்ப்பத்தைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். கடையக் கடைய, வாசுகிப் பாம்பின் விஷமூச்சு கருத்த ஹாலஹாலம் என்ற கொடிய நஞ்சாக வெளிவந்து சூழ்ந்து கொண்டது. ஹாலஹாலம் அண்ட சராசரத்தையும் அழிக்கவல்ல கொடிய விஷமானதால், அனைவரும் கலங்கி நின்றனர்.
உலகனைத்தையும் காக்கும் பொருட்டு சிவபெருமான் அதைத் தான் உண்டார்.
இறைவன் விஷத்தை உட்கொண்டால் அவனுள் இருக்கும் அத்தனை கோடி ஜீவராசிகளும் அழிந்து படும் என்று இறைவி அவ்விஷத்தைக் கண்டத்திலேயே
தங்கச் செய்தாள். இறைவன் திருநீலகண்டர், காலகண்டர் என்று பெயர் பெற்றார். பின்பு பாற்கடலைக் கடைய ஐராவதம் என்ற வெள்ளை யானை, உச்சிரவம் என்ற குதிரை, கற்பக விருக்ஷம், காமதேனு, ஆறு கோடி அப்ஸர பெண்டிர் தோன்ற,
அவற்றை இந்திரன் ஏற்றுக் கொணடார். மஹாலட்சுமி தோன்ற ஸ்ரீமன் நாராயணன் அவளை வரித்து ஸ்ரீலட்சுமி நாராயணன் ஆனார். கௌஸ்துபத்தையும் அவரே
ஏற்றார். பின்பு தோன்றியது அமிர்தம். அவ்வமிர்தத்தைத் தேவர்களும் அசுரர்களும் பகையின்றி பகிர்ந்துண்ண விரும்பி அதற்கான தகுந்த இடத்தைப் பிரம்மனிடம் கேட்க, பிரம்மாவும் புலியும் மானும் பகைமை நீங்கி ஒரே தீர்த்தக்கரையில் நீர்
குடிக்கும் தலமொன்று உண்டு. அங்கு அமிர்தத்தை உண்டால், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் உள்ள பகைமை நீங்கும். அத்தகைய இடம் வில்வ வனம் என்று கூறினார். அசுரர்களும், தேவர்களும் அமிர்தமடங்கிய கடத்தை வில்வ வனத்தில் வைத்துவிட்டு குளித்து விட்டு வரச்சென்றபோது, அமிர்தம் கொண்ட கடம்
சிவலிங்க உருவெடுத்து அமிர்தகடேசர் என்று பெயர் வந்தமைந்தது. தலம் திருகடவூர் என வழங்கப்பெற்றது.
அனுட்டானம் முடித்துத் திரும்பிய அசுரர்களும் தேவர்களும், மீண்டும் அமிர்தம் வேண்டுமெனப் பிரார்த்திக்க பிரம்மன் இறைவனுடன் இறைவியையும் சேர்த்துப் பிரார்த்திக்கக் கூற பிரார்த்தனைக்காகவே விஸ்வகர்மா அழகே உருவான அம்பாளை சிருஷ்டி செய்தார். அவ்வம்பாளே “அபிராமீஸ்வரி”. அம்மையப்பருக்கு உரிய
பிரார்த்தனைக்குப் பின்பு, அமிர்தத்தை அம்ருதபுஷ்கரணீ தீர்த்தத்தின் நடுவில் வைக்க, மீண்டும் அமிர்தம் மறைந்து விட்டது. இம்முறை அதனை எடுத்து
மறைத்தது சிவபெருமானின் மகனான மஹாகணபதி. விக்னேசுவரனை மறந்து காரியங்களைத் தொடங்கினால், தடை உண்டாகும். அவனைத் துதித்துத்
தொடங்கினால் வெற்றி உண்டாகுமெனக் கூற, தேவர்களும் அவனை வணங்கினர். அமிர்தம் பெற்று இறைவனின் அருளையும் பெற்றனர். அமிருதத்தை விளையாட்டாக மறைத்த காரணத்தால், சோர விக்னேச்வரர் என்றும் கள்ள வாரணர் என்றும் அழைக்கப் பெறுகின்றார்.
அட்ட வீரட்டம்
சிவபெருமான் பக்தர்களின் இடர் கழைவதற்கெனவே தோன்றி வீரச்செயல் புரிந்த தலங்கள் எட்டு. வீர அட்ட தானம் எனவும் வீரம் ஸ்தானம் எனவும் பிரித்துப் பொருள் கூறுவர். எட்டு வீரட்டானங்களைக் குறிக்கும் பழைய பாடல்:-
“பூமன் கிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி மா வழுவூர்
காமன் குறுக்கை, யமன் கடவூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் குடிதன் சேவகமே”
என்பதாகும். அட்ட வீரட்டங்களில் திருக்கண்டியூர் - பிரமன் தலையைக்
கொய்தது, திருக்கோயிலூர - அந்தகாசுரனைக் கொன்றது. திருவதிகை -
திரிபுரத்தை எரித்தது. திருப்பறியலூர் - தக்கன் தலையைக் கொய்தது. திருவிற்குடி - சலந்தராசுரனைக் கொன்றது. வழுவூர்- யானையை உரித்தது. திருக்குறுக்கை - காமனை எரித்தது. திருக்கடவூர் - எமனை உதைத்த தலமாகும்.
ம்ருகண்டு முனிவர் பல வருடங்கள் பிள்ளைக்காகத் தவமிருக்க, இறைவனும் 16 ஆண்டுகளே வாழக்கூடிய மதி நிறைந்த பிள்ளை வேண்டுமா? 100 ஆண்டுகள் வாழக்கூடிய மதியற்ற பிள்ளை வேண்டுமா? என்று கேட்டார். ம்ருகண்டு முனிவரும் 16 ஆண்டுகள் வாழக்கூடிய மதிநிறைந்த பிள்ளையே வேண்டுமென்றார் -
அப்பிள்ளைத் தன் மதியால் விதியை வென்று ஆயுளை விருத்தி செய்து கொள்வான் என்ற நம்பிக்கையால். அவ்வாறே அவருக்கு மார்க்கண்டேயரும் வந்து பிறந்தார். அவர் அனுதினமும் அமிர்தகடேசுவரரை வணங்கி வந்தார். 16 ஆண்டுகள் நிறைவு பெற்றவுடன், காலன் மார்க்கண்டேயரைக் கொண்டு செல்ல வந்தான்.
மார்க்கண்டேயர் மிரண்டு சிவலிங்கமான அமிர்தகடேசுவரரைக் கட்டிக் கொண்டார். காலன் பாசக்கயிற்றை வீச, அக்கயிறு மார்க்கண்டேயருடன் அமிர்தகடேசரையும் பிணைத்தது. சிவலிங்கம் பிளவுபட்டு, அதனின்று அம்மையப்பர் தோன்றிக் காலனை இடது காலால் உதைத்து சம்காரம் செய்து மார்க்கண்டேயருக்கு “என்றும் 16 வயது” (சிரஞ்சீவீ) எனும் பேற்றையும் அளித்தார். பாலனுக்காக இடது காலால் காலனை உதைத்ததால் பாலாம்பிகை ஸமேத காலசம்காரமூர்த்தியானார்.
காலசம்காரமூர்த்தி ஸந்நிதி அமிர்தகடேசுவரர் ஸந்நிதிக்கு அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள மஹாம்ருத்யுஞ்சய யந்திரம் அகால மரணத்தைப்
போக்கவல்ல சக்திவாய்ந்த பீஜாக்ஷரங்களைக் கொண்டது. இறைவனை அமிர்தகட வடிவான காரணத்தாலும், மார்க்கண்டேயர் பூஜித்த அகால மரணத்தைப்
போக்கவல்ல மஹாம்ருத்யுஞ்சய யந்திரம் அமையப் பெற்றதாலும், காலனை அமிர்தகடேசுவரர் சம்கரித்த காரணத்தாலும், இங்கு பக்தர்களின் தீர்க்கமான ஆயுளை வேண்டி மணிவிழாக்களும், சஷ்டியப்த பூர்த்திகளும் நிறையவே
கொண்டாடப்படுகின்றன.
கோவில் அமைப்பு
மேற்கு நோக்கிய ஆலயம் பஞ்சப் பிரகாரங்கள் கொண்டது. மேற்புறமும்,
கீழ்ப்புறமும் ராஜகோபுர வாயில்கள் உள்ளன. கோவிலின் மூலஸ்தான ஸந்நிதானம், மேற்கு நோக்கிய அமிர்தகடேசுவரர் ஸந்நிதி. அந்த ஸந்நிதியின் வலப்பக்கம் தெற்கு நோக்கி காலசம்கார மூர்த்தி ஸந்நிதி. அர்த்த மண்டபத்தின் இடப்பக்கம் கிழக்கு நோக்கி கள்ள வாரணப்பிள்ளையார் ஸந்நிதி அமைந்துள்ளன.
உட்பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேதகராக ஷண்முகநாதர் ஸந்நிதி, மஹாலஷ்மி ஸந்நிதி, சிவகாமி அம்பாள் ஸமேதகராக ஸ்ரீமன் ஆனந்த நடராஜ
மூர்த்தி ஸந்நிதி, பிச்சாடனர் ஸந்நிதி, வில்வவனேஸ்வரர் ஸந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. அபிராமி அம்பாளுக்குத் தனி ஸந்நிதி. வெளிப்பிரகாரத்தில் கிழக்குப் பார்த்து அம்மன் ஸந்நிதியின் வெளிப்பிரகாரத்தில் ஸரஸ்வதி ஸந்நிதி அமையப் பெற்றிருக்கின்றது.
கோவிலின் விழாக்கள்
அன்றாடப் பூஜைகள் தவிர, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு
சோம வாரத்தன்றும் அமிர்தகடேசுவரருக்கு 1008 சங்காபிஷேகமும் பஞ்ச மூர்த்தி புறப்பாடும் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் காலசம்கார மூர்த்தி திருவிழா நடைபெறுகின்றது. அபிஷேகம், திருக்கல்யாணம், காலசம்கார விழா, சுவாமி வீர நடனம் அனைத்தும் இத்திருவிழாக் காலத்தில் இடம் பெறுகின்றன.
அபிராமி அம்மனுக்குப் பிரதான வைபவம் ஆடிப்பூரம. பிரதி ஆடி வெள்ளி, தை வெள்ளி, வஸந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி விழாக்கள் உண்டு. இது தவிர, "அமாவாசை அன்று என்ன திதி" என்று சரபோஜி மன்னன் வினவியபோது,
"பௌர்ணமி" என்று தன்னையறியாது கூறிய பக்தர் அபிராமி பட்டரின் உயிரைக்
காக்கத் தனது தாடங்கத்தை வானில் வீசி பௌர்ணமி நிலவினைத் தோன்றச்
செய்தாள் என்று வரலாறு. இதனைக் குறிப்பிட்டுக் கொண்டாட தை அமாவாசை விழாவும் கோலாகலமாகக் கொண்டாடப் பெறுகின்றது. திருக்கடவூர்
பக்தர்களுக்காக இறைவனும் இறைவியும் அருள்புரியும் விசேஷம் பொருந்திய
புண்ணியத் தலமாகிறது. இத்தலத்தை அனைவரும் சென்று தரிசித்து சகல
செல்வங்களையும் பெறவேண்டுமாறு அன்னை அபிராமியை வேண்டுவோம்.
