• அம்மன் தரிசனம்

    “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
    நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்
    நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு
    தந்தாய் என்ன பேறு பெற்றேன் தாயே
    மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே!”

    அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அம்பிகை. அணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை. மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை. முதலும் முடிவும் இல்லாதவளைப் பற்றிய நூலிற்கு எனது அணிந்துரையா? ப.முத்க்குமாரசாமி அவர்கள் பஞ்ச பூதத் தலங்கள், அட்ட வீரட்டத் திருத்தலங்கள், நவக்கிரகத் திருத்தலங்கள், முக்தி தரும் தலங்கள் 13, செந்தமிழ் முருகன் என்று பல தெய்வீக நூல்களை எழுதியிருப்பினும் எந்த ஒரு நூலிற்கும் அணிந்துரை யாரையும் எழுதப் பணிக்கவில்ல. அப்படியிருக்க “அம்மன் தரிசனம்" என்ற அன்னையின் நூலிற்கு மட்டும் ஒருவரை அதுவும் இப்பணியில் இரண்டாம் வகுப்பு மாணவியான என்னைப் போய் அணிந்துரை எழுத சகோதரர் செல்லப்பன் (பழநியப்பா பிரதர்ஸ்) பணித்திருக்கின்றாரே!! திருக்கடவூர் அபிராமியின் கருணை இல்லாது இதனை வேறு என்னவென்று கூறுவ!!

    அம்மன் தரிசனம் நூலைப் படிக்க ஆரம்பித்த நாள் மே 13-ஆம் தேதி 2006. அம்பிகைக்கு உரிய பௌர்ணமி நாள். அதுவும் சித்ரா பௌர்ணமி தினம்!! இடம் -நீலகிரி. உதகையில் உள்ள எங்கள் இல்லத் தோட்டம். சுற்றிலும் குளிர்ந்த மலைச்சாரல்கள். தோட்டத்தில் பல வண்ணப் பூக்கள், பறவைகளின் இனிமையான கீத ஒலிகள், மலைமகளுக்கே ஏற்ற சூழ்நிலையில் நூலைப் படிக்கப் படிக்க ஆசிரியர் படிப்போரை அவளது மிக அருகில் அழைத்துச்செல்வதை உணர்ந்தேன். அவளது அருகாமையில் மலர்ந்த இந்த அணிந்துரை அவளைப் பற்றிய நூலிற்கு எனது மலர்க் காணிக்கை.

    ஆசிரியர் அம்மன் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும் வாயில்கள் பதிமூன்று. சக்தி வழிபாட்டின் தொன்மயில் ஆரம்பித்து சிவ சக்தி தத்துவம் அம்பிகை தலயலங்காரம், அம்பிகை திருக்கர அமைப்பு, அம்பிகையின் திருக்கரங்களின் அபிநயங்கள், முத்திரகள், ஆயுதங்கள்,அவளது வாகனங்கள், அம்பிகை திருமூர்த்ததங்கள், சக்தி பீடங்கள் சக்தி வழிபாட்டில் ஸ்ரீசக்ரம், கலைமகளின் கலை வடிவம் தத்துவம் திருக்கோயில்களில் அம்பிகையின் திருமேனி, அம்மன் தரிசனம், ஆதி சங்கரரின் ஸ்ரீசாரதாபுஜங்க ப்ரயாதஷ்டகம், என்பன அவை, இப்பதிமூன்று வாயில்களையும் கடக்க அவருக்குப் பயன் தந்த நூல்கள் பட்டியல் பதினான்காவது இயலாக அமந்திருக்கின்றது.

    சக்தி வழிபாட்டின் தொன்மையையும் சிவசக்தி தத்துவத்தையும் வேதங்கள் மற்றும் சங்க இலக்கியங்கள் கொண்டு விளக்கியிருக்கும் ஆசிரியர் “சக்தியும் சிவனும் ஒன்றே, சிவனின்றி சக்தி இல்லை. சக்தியின்றி சிவன் இல்லை தத்துவார்த்த உயர்ந்த நிலையில் இரண்டும் பிரிவற்ற ஒருமையாகவே உள்ளது என்கின்றார். மலரும் மணமும் போல், நெருப்பும் சூடும்போல், சொல்லும் பொருளும் போல் பிரிவற்ற சிவசக்தியின் தன்மையைப் பல அரிய மேற்கோள்களுடன் விளக்கியுள்ளார் ஆசிரியர். 11-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பரமேஸ்வரனுக்கும் ஈஸ்வரிக்கும் தனித்தனி ஆலயங்கள் நிறுவப் பெற்றன என்றும் குறிப்பிடுகின்றார்.

    அம்பிகையின் தலயலங்காரம், திருக்கரங்களின் அமைப்பு, திருக்கரங்களின் அபிநயங்கள்,முத்திரகள், ஆயுதங்கள், என்ற இயல்கள் சிற்பக் கலையை நன்குணரும் வகையில் விளக்கப் பாடங்கள் போல் அமைந்திருக்கின்றன. ஓவியக் கலைஞர் அமுதபாரதியின் விளக்ககப் படங்களும் மேலும் விளக்கம் சேர்க்கின்றன.

    அம்பிகையின் திருமூர்த்தங்கள் எனும் இயலில் “அன்னை சக்தியின் அம்சங்கள் மிகப் பலவாகும். அவற்றின் திருமூர்த்தங்கள் திருவுருவங்கள் துவக்கக் காலத்திலிருந்தே போற்றி வழிபட்டு வரப்படுகின்றன. ஆயினும் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறான உருவத்தில் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. ஒவ்வொரு மூர்த்தங்களின் தன்மைக்கும் ஏற்றவாறு உருவமைப்பினைக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது என்று கூறி திரிபுரசுந்தரி, மஉறாலட்சுமி, மாதங்கி, தாரா, காளி, பகளாமுகி, புவனேஸ்வரி, சின்ன மஸ்தா, தூமாவதி, திரிபுர பைரவி, அன்னபூரணி,அசுவாரூடாம்பாள், சண்டி, துர்க்கை என்று ஒவ்வொரு மூர்த்தத்தின் வடிவமைப்பையும் அந்தந்த அமைப்பில் அம்பிகையின் சக்தி வெளிப்பாடுகளையும் திறம்பட விளக்கியிருக்கின்றார்.

    சக்தி பீடங்கள் என்ற இயலில் நாயகி எழுந்தருளிய சக்தி பீடங்கள் 18-51-64-108 என்று கூறப்படுகின்ற நிலையில் பல தொகுப்பு நூல்கள் கலைக்களஞ்சியங்கள் கொண்டு சக்தி பீடங்கள் அமைந்த மாநிலங்கள், நகர்கள், தலங்களின் பெயர்கள் அங்கெழுந்தருளி இருக்கும் அம்பிகையின் பெயர்கள் மற்றும் அத்தலங்களில் அம்பிகையின் எந்தெந்த பாகங்கள் விழுந்தன என்றும் விரிவாகக் கூறப்பெற்றிருக்கின்றன.

    சக்தி வழிபாட்டில் ஸ்ரீசக்கரம் எனும் இயல் மிக நுணுக்கமாக ஸ்ரீசகரத்தின் வடிவமைப்பையும் அது உணர்த்தும் தத்துவங்களையும் திறம்பட விளக்குகின்றது. “வைரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பட்டை தீட்டினால்தான் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். இப்பட்டைகளை நன்றாகக் கவனித்தால் இவை முக்கோணப் பட்டைகளாக இருக்கும். பக்கங்களிலுள்ள முக்கோணப் பட்டைகள், 8, 16, 32, 64 என்ற கணக்கில் இருக்கும். பட்டைகள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ அவ்வளவுக்குப் பூரிப்பும் அதிகம். மதிப்பும் அதிகம். விலையும் அதிகம். இந்த வைரத்தைப் பதிக்கும் முன் திருப்பிப் பாருங்கள். அடிப்பாகம் கூறாக பர்வதத்தின் சிகரம் போலக் காணப்படும. இதன் உயரம் அதிகமிருந்தால் பூரிப்பும் அதிகம். ஸ்ரீசக்ர தத்துவமே இவ்வைரம். ஸ்ரீசக்ரத்தை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கமாக அமைந்த ரகசியம் இதான் என்று கூறுகின்றார், ஆசிரியர். மிக மிக சூட்சுமமான ஸ்ரீசக்ர விளக்கத்தை இவ்வளவு எளிமயாக விளக்கிக் கூறியிருக்கும் ஆசிரியரின் திறன் வியக்கத்தக்க!!.

    கலைமகளின் தத்துவம் வடிவங்கள் எனும் இயல், இரண்டு கரங்களையுடைய ஸரஸ்வதியின் பெயர்கள். முத்திரகள் ஆயுதங்கள் மற்றும் நான்கு, ஆறு, எட்டு, பத்துக் கரங்களையுடைய ஸரஸ்வதியின் பெயர்கள் கரங்களின் முத்திரகள். ஆயுதங்கள் பற்றி விளக்கம் கொண்டது. இதே இயலில் அம்பிகையின் நவராத்திரி சிறப்பும் அம்பிகைக்கே உகந்த நாட்கள், விழாக்கள், பற்றிக் கூறி கலைமகள் எழுந்தருளியுள்ள சிறப்புத்தலங்களான புஷகரம், கூத்தனூர், பாஸர், திருக்கண்டியூர், ஸ்ரீரங்கம், நாகூர் மற்றும் பவானி ஸாகர் அருகில் உள்ள மாராவிபாளயம், பற்றிய குறிப்புக்களும் உள்ளன. இவ்வியலில் மகாகவி கம்பர் இயற்றியருளிய ஸரஸ்வதி அந்தாதி படிப்பவர்களுக்கு ஒரு சிறப்புப் பரிசு.

    திருக்கோயில்களில் அம்பிகையின் திருமேனி எனும் அடுத்த இயலில் அம்பிகை திருக்கோயில்களில் எழுந்தருளும் இடம், தோற்றம் திருக்காட்சி போன்றவை எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

    அடுத்தது 61 அம்மன் தரிசனங்கள் கொண்ட இயலில் காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாக்ஷ¤ முதல் சிதம்பரம் சிவகாமியம்மன், திருக்கடவூர் அபிராமி, வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகி, திருவண்ணாமலை உண்ணாமுலையம்மன், மாங்காடு காமாட்சி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு கருமாரி அம்மன் என்று பக்தர்கள் பெரிதும் கூடும் 61 திருத்தலங்கள் பற்றிக் கூறுகின்றார். திருத்தலங்களின் மூர்த்தி தீர்த்தம் பற்றி விரிவாகக் கூறிக் கோவிலின் அமைப்பு தலவரலாறு, அக்கோவில்களுக்குச் செல்லும் வழி மார்க்கம் அனைத்தயும் குறித்து ஒரு (Tour Guide) பயணத்துணை நூல்போல் அமைத்திருப்பது பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். விழுத்துனையாவாள் அம்பிகை. அவளை அணுக அம்பிகை தரிசனம் எனும் நூல் நல்ல வழித்துணையாகும். 61 தரிசனங்களைப் படிக்கும்போது 61 கோவில்களுக்குச் சென்று வந்ததுபோல் தோன்றுகின்றது.

    ஆசிரியரின் ஆய்விற்குத் துணை புரிந்திருக்கும் நூல்களின் பட்டியலைப் பார்க்கும்போது அவரது ஆழ்ந்த வடமொழி மற்றும் தமிழ்மொழி நூல்களின் அறிவு புலப்படுகின்றது.

    பழநியப்பா பிரதர்ஸ் (exclusive) தனித்தோங்கும் நூல்கள், தலைசிறந்த நூல்கள் என்றுதான் எப்பொழுமே நமக்குத் தருவார்கள். அந்த வரிசயில் மற்றுமொறு மாணிக்கம் “அம்மன் தரிசனம். அவர்களின அச்சக மற்றும் பிரசுரப் பணிப் பயணம் சிறப்பாகத் தொடர வேண்டுமென அபிராமியை வேண்டுகின்றேன்.

    மொத்தத்தில் நூலைப் படித்து முடிக்கும்போது ஒரு மனநிறவு உண்டாகின்றது. எனது அனுபவம் உங்கள் அனைவருக்கும் கிட்ட வேண்டுமென்று விரும்புகின்றேன். ஆசிரியர் முத்க்குமாரசாமியின் நூல் என்ற அழகுத் தேரில்
    அமர்ந்து அம்மன் தரிசனத்திற்குச் சென்று வாருங்கள். அம்பிகையின் அருளை வென்று வாருங்கள்.

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com