• அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

  சூரியன் உதித்தால் மட்டுமே மலரும் தாமரை, சந்திர கிரணங்களில் மட்டுமே மலரும் அல்லி, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும் குறிஞ்சிப்பூ என்று ஒரு கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிக்கும் மலர்களின் கற்பு நெறி என்னை எப்பொழுதுமே வியப்பில் ஆழ்த்தும்.

  2007 பிப்ரவரி, 19ம் தேதி அன்று கூந்தகுளம் எனும் பறவைகள் சரணாலயத்திற்குச் செல்லும் பொன்னான வாய்ப்பு ஏற்பட்டது. அன்றுதான் அன்றில் பறவைகள் மற்றும் மணிப் புறாக்களின் கற்பு நெறி பற்றியும் அறிந்தேன். அன்றில் பறவை (Ibis) ஜோடி இணைந்த பின் ஆண் பறவையோ, பெண் பறவையோ இறந்து விட்டால் மற்றையது இரை தேடாதாம். நீர் அருந்தாதாம். வேறு பறவையுடனும் இணையாதாம். இறக்ககளை விரித்துக் கூவிக் கூவி ஓலமிட்டு இறந்து விடுமாம். மாடப் புறா தனது ஜோடி மடிந்து விட்டால், சிறு சிறு கற்களை முழுங்கி விட்டு பறக்குமாம். வயிற்றில் உள்ள கற்களின் பாரத்தால் தரையில் விழுந்து மடிந்து விடுமாம். வாழ்ந்தால் தாமரை, அல்லி, குறிஞ்சி போன்றோ, அன்றில் மற்றும் மாடப் புறா போல்தான் வாழ வேண்டும்!! இறைவனின் படைப்பில் மலர்களும், பறவைகளும், விலங்குகளும் நமக்கு எடுத்துக் கூறும் பாடங்கள் பல.

  கூந்தகுளம் சரணாலயம், தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுக்காவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ தொலைவிலும், நாங்குநேரியிலிருந்து 14 கி.மீ தொலைவிலும் 129 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக, 45 வகைகளுக்கும் மேலாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. இச் சரணாலயம் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களால் பாதுகாக்கப்பட்டு வருவது இதன் சிறப்பு. இங்கு வரும் பறவைகள் கூந்தகுளம் மற்றும் காடங்குளம் நீர்நிலைகளிலும், கூந்தகுளம் கிராமத்தில் உள்ள மரங்களிலும் அச்சம் சிறிமின்றி வசித்து வருகின்றன. இங்கு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பறவைகள் வரத் தொடங்கி, பின்பு கூடு கட்டி குஞ்சு பொரித்துப் பின் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் திரும்பிச் செல்கின்றன. இந்தச் சரணாலயத்தில் பறவைகளுக்கும் மனிதர்களுக்குமிடையே உள்ள ஒரு நெருக்கமான உறவை உணர முடிகின்றது. கிராமத்து மக்கள் பறவைகளையோ, கூடுகளையோ சேதம் செய்வதில்லை. ஏன் தீபாவளியின்போது பட்டாசுகள் கூட வெடிப்பதில்லையாம். மத்தாப்பு மட்டும்தானாம்!! மீறிப் பறவைகளைக் கொன்றாலோ, சுட்டாலோ அவர்களை கிராமத்தை விட்டு நீக்கி வத்து விடுவார்களாம். பறவைகளின் எச்சம் வயல்களுக்கு நல்ல உரம் என்று இக்கிராமத்து விவசாயிகள் கூறுகின்றனர். பறவைகளை இத்தனை நேசிக்கும் கிராமத்தில் ஒரு அபூர்வ மனிதர் வாழ்கின்றார். பெயர் பால் பாண்டி. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று இவரது ஆய்வினை மெச்சி “பறவை மனிதன் என்ற பட்டமும் கொடுத்திருக்கின்றது. இக்கட்டுரையில் நான் பறவைகள் பற்றிக் கூறியிருக்கும் அத்தனை விவரங்களும் பால் பாண்டி எங்களுக்குக் கூறியவைதான்!!

  இங்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் பெரும்பாலும் சைபீரியா மற்றும் ஜெர்மனி நாட்டிலிருந்தே வருகின்றன. பார்ªஉறட்டட் கூஸ், பின்டெயில் என்ற வாத்து வகைகள், ஸ்பாட்டட் ஸாண்டு பைப்பர், க்ரீன் ஸாண்டு பைப்பர், காமன் ஸாண்டு பைப்பர் என்ற கௌதாரி வகைகள், காமன் டீல், ப்ளூவிங்ட்டு டீல் என்ற வாத்து வகைகள் வெளிநாட்டுப் பறவைகள் ஆவன. இங்கு வரும் உள்நாட்டுப் பறவைகள் லிட்டில் இக்ரெட், லார்ஜ் இக்ரெட், கேட்ல் இக்ரெட் போன்ற கொக்குகள், பெயின்டட் ஸ்டார்க் என்ற செங்கால் நாரை, ஓப்பன்பில் ஸ்டார்க் என்ற நாரை வகைகள் போன்றவையாம். இதில் ஒரு அதிசய வகைப் பறவை பிராமினி கைட் என்ற பருந்து வகை. இது நவதானியங்களைத் தவிர எந்த மாமிசத்தையோ, பூச்சிப் புழு போன்றவகளையோ உண்ணாதாம். (Strictly Vegetarian) முற்றிலும் சைவப் பறவையாகும்.

  பறவைகளின் இனப் பெருக்கத்தில் கூடு கட்டுவது என்பது எத்தனை முக்கியப் பங்கு வகிக்கின்ற என்பதனை ஆராய்ந்தறிய வேண்டும். கூடு கட்டிய பின்புதான் பறவைகள் இணைகின்றன. செங்கால் நாரைகள் போன்ற பறவைகளின் கூடுகள் முள் செடிகளின் கிளைகளாலும், மரக்கிளைகள் மற்றும் குச்சிகளால் மட்டுமே கட்டப்படுகின்றன. தாய்ப் பறவை மற்றும் முட்டைகளின் எடையைத் தாங்கிக் கொள்ளும் வலுவிற்குக் கட்டப்படுகின்றன. ஆனால் தேன்சிட்டு (Honey Suckle) எனும் சிறிய வகைச் சிட்டு ஒட்டடை எனும் சிலந்திப் பூச்சியின் நூலாம்படையில் இருந்துதான் கூட்டினைக் கட்டுகின்றது. தேன் சிட்டு மலர்களில் உள்ள தேனை உண்டு வாழும் பறவை. நூலாம்படையில் கட்டிய கூட்டிற்கு மிருதுவான இறகுகளைக் கொண்டு மெத்தை போன்ற உட்புறத்தை வேய்கின்றது. பின்பு அதில் முட்டைகளை இட்டு அடைகாக்கின்றது. தேன் சிட்டு ஒன்றின் கூட்டினை பால்பாண்டி எங்களுக்குக் காட்டினார். அதில் பெட்டைக் குருவி அமர்ந்து அடைகாத்துக் கொண்டிருந்தது. அதன் மூக்கு மட்டும் லேசாக வெளியில் தெரிந்தது. மரத்தை ஆட்டிக் காண்பித்தார் பால் பாண்டி. உடனே அருகில் இருந்த மற்றொரு மரத்திலிருந்து ஆண் குருவி சீட்டி அடித்து பெண் குருவிக்கு சேதி சொல்லிவிட்டது. உடனே பெண் குருவி விசுக்கென்று தனது மூக்கையும் கூட்டிற்குள் இழுத்துக் கொண்டு விட்டது. இத்தனை சிறிய சிட்டிற்கு உள்ள அறிவைப் பாருங்கள்!!

  தூக்கணாங்குருவி எனும் குருவி (Tailor Bird) பாறை மீது களிமண்ணை ஒட்டி அதில் கோரைப் புற்களைக் கொண்டு கூடு கட்டுமாம். அடிப்பாகத்தில் ஓட்டை வைத்து அதன் வழியாகத்தான் உள்ளே செல்லுமாம். கூட்டில் இருட்டைப் போக்குவதற்காக மின்மினிப் பூச்சியை கூண்டின் சுவற்றில் ஒட்ட வைத்து இரவு வேளைகளில் அதன் ஒளியை விளக்காகப் பாவிக்குமாம். இதில் கூடு கட்டுவது ஆண் குருவிதான்!! தூக்கணாங்குருவி கட்டி வாழ்ந்த காலிக் கூடுகளை வீட்டில் கொண்டு வந்து வைத்தால் அதில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டும் என்கின்றார் பால்பாண்டி.

  செங்கால் நாரை தை அமாவாசை, தைப் பூசம் போன்ற தினங்களில் மட்டுமே கூடு கட்டத் தொடங்குமாம். கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சுகளைப் பொரித்து விட்டால் அவற்றைக் காப்பது ஜோடியில் ஒரு பறவை. இரை தேடிச் செல்வது மற்றொன்று. அந்தப் பறவை திரும்பியவுடன்தான் மற்றது இரை தேடச் செல்லும். பெலிகன் என்னும் பறவை- இதன் அலகு பை போல் தொங்கும். அதன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவது கல்நெஞ்சுக்காரர்களையும் உருக வைக்கக்கூடிய காட்சி என்கின்றார் பால் பாண்டி. அதன் குஞ்சுகள் குரங்குக் குட்டிகள் போல் இருக்கும். அதன் உடம்பில் ஓடும் இரத்தம் கூட கண்களுக்குத் தெரியுமாறு இருக்கும். அந்தக் குஞ்சுகளுக்கு மேல் படுத்துக் கொண்டு தனது தாடையில் இருக்கும் மீனை தாய்ப் பறவை ஊட்டுவது கண்கொள்ளாக் காட்சி என்கின்றார் பால்பாண்டி. தாய்ப் பறவை குஞ்சுகளை சூரிய வெளிச்சத்திலிருந்து காக்கக் காலை வேளைகளில் கிழக்கு நோக்கி தனது இறக்ககளை விரித்து தட்டி போல் காக்கும். மாலை வேளைகளில் மேற்கு நோக்கிச் இறக்கைகளை விரித்துக் காக்கும்.

  ஃபிளமிங்கோ (Flamengo) எனும் ஒரு வகைக் கொக்கு சூல் கொண்டிருக்கும் போது அதன் இறக்கைகள் ஒருவித ரோஸ் நிறமாக ஆகிவிடுமாம். இதுவே பெண் பறவை முட்டை இடத் தயார் என்பதன் அடையாளமாம். இது முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தவுடன் பல நாட்கள் குஞ்களைத் தனது இறக்கைகளுக்கடியிலேயே பத்திரமாகக் காக்குமாம். அந்த நாட்களில் வாயில் ஊரும் உமிழ்நீரினயே தன் குஞ்சுகளுக்குப் பால் போல் ஊட்டுமாம்.

  சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூந்தகுளம் சரணாலயம் உண்டானது என்கின்றார் பால்பாண்டி. முல்லைப் பெரியார் அணையிலிருந்து வரும் நீர்தான் இங்கு ஏரியாகக் காட்சியளிக்கின்றது. நடுவில் கருவேல மரங்கள். அவற்றில்தான் பறவைகளின் பெரும்பாலானக் கூடுகள். கிராமத்தின் வீட்டு மரங்களிலும், சுவர் பொந்துகளிலும் கூடுகள் இருக்கின்றன. பக்தியால் உண்டான சரணாலயம் என்கின்றார் பால் பாண்டி. கிராம மக்கள் நிறைய மழை பெய்ய வேண்டும். ஏரி ரொம்ப வேண்டும். பறவைகள் வர வேண்டும் என்று ஏரிக்கரையில் இருக்கும் சந்தான கோபால கிருஷ்ணனை வேண்டிக் கொள்வார்களாம். ஏரிக்கரையில் அமைந்திருக்கும் கோபுரத்தில் (Viewing Tower) இருந்து ஏரியையும், பறவைகளயும் நன்றாகப் பார்க்கலாம். சுமார். 4.30 அல்லது 5,00 மணி அளவில் பறவைகள் கூட்டம் கூட்டமாக இரையுடன் கூடு நோக்கிப் பறந்து வருவது மெய் சிலிர்க்க வைத்தது.

  பால் பாண்டி அடிபட்டப் பறவைகளுக்கும் நோய்வாய்ப்பட்ட பறவைகளுக்கும் தானே சிகிச்சை செய்கின்றார். இவரது மனைவிதான் இவருக்கு உறுணயாம். செவிலித்தாய் போல நர்ஸிங் செய்வாராம். “உடைந்த கால்களுக்கு பக்கபலமாக குச்சி வைத்து கட்டுவேன். காயங்களுக்கு மருந்து தடவுவேன். பூரண குணம் அடந்த பின்பும் கூட அவை என்னை விட்டு போகமாட்டேன் என்று என் காலையே சுற்றி சுற்றி குழந்தைகள் போல் வருவன என்று பாசம் பொங்க பால் பாண்டி கூறுகின்றார்.

  “பறவைகளின் இனப் பெருக்கம் மார்ச், ஏப்ரல், மாதங்களில்தான். ஜூன், ஜூலை என்பது பீக் சீசன். ஜூலை மாதக் கடைசியில் தாய்ப் பறவைகள் மெதுவாகக் குஞ்சுகளை கூட்டத்திலிருந்து அழைத்துச் சென்று இரை தேட பழகிக் கொடுத்து அவைப் பழகிய பின்பு பிரித்து விட்டு விடும், சாதாரணமாக ஆடி அமாவாசைக்குப் பிறகுப் பறவைகள் ரொம்ப இராது என்கின்றார் பால் பாண்டி.

  நமக்கு ஒவ்வொரு செயலுக்கும் தொழிலுக்கும் கற்றுக் கொடுக்க ஆள் வேண்டியிருக்கின்றது. ஆனால் யாருமே சொல்லிக் கொடுக்காமல், சிவில் இன்ஜினீயரிங் கல்லூரியில் கற்காமல் கூடு கட்டும் தேன் சிட்டுப் பறவைகள், தூக்கணாங்குருவிப் பறவைகள் செவிலியர் கல்லூரிக்குச் செல்லாமல் ஆயா வைத்துக் கொள்ளாமல் தானே குஞ்சுகளைப் பேணிக் காக்கும் செங்கால் நாரை, டியூசன் வைத்துக் கொள்ளாமல் தானே குஞ்சுகளுக்கு இரை தேடப் பயிற்றுவிக்கும் கொக்குகளைப் பார்க்க வேண்டும் என்றால ஒரே ஒரு முறை கூந்தகுளம் சரணாலயம் சென்று வாருங்கள். ஒரே ஒரு முறை பால் பாண்டியப் பார்த்துப் பேசி விட்டு வாருங்கள். அப்பொழுது நீங்களும் நான் சொன்னதனைத்தும் சரியென்று ஒத்துக் கொண்டு என்னோடு சேர்ந்து “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்" என்று பாடுவீர்கள்!!

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com