• பக்தியின் ஆழ்நிலை!

  ஆதிசங்கரர் தனது சிவானந்த லஹரி எனும் நூலில் பக்தியின் லக்ஷணம் பற்றிக் கூறும் பாடலில்.

  அங்கோலம்
  நிஜபீஜஸந்ததி -
  ரயஸ்காந்தோபலம் ஸசிகா
  ஸஸுத்வீ நைஜலிபும் லதா
  க்ஷிதிருஉறம் ஸிந்தஸ் -
  ஸரித்வல்லபம்
  ப்ராப்னோதிஉற யதா ததா பசுபதே;
  பாதாரவிந்த - த்வயம்
  சேதோவ்ருத்தி - ரூபேத்ய திஷ்டதி
  ஸதா ஸா பக்திரித் - யுச்யதே

  (சிவானந்தலஉறரி : 61)

  என்கிறார். அதாவது ஏரழிஞ்சில் எனப் பெயர் கொண்ட மரத்தை அதன் விதைகளில் விசேடமானவைகளும், இரும்புக் காந்தக் கல்லை ஊசியும், தன்னுடையப் பதியினைப் பதிவிரதையான பெண்ணின் மனமும் பொதுவாக மரத்தைக் கொடியும், கடலினை நதியும் எவ்வாறு விடாமல் நாடி நாடிச் சென்று அடைகின்றனவோ அவ்வாறு மனமானது பரமசிவனுடைய இரு தாமரைத் திருவடிகளையும் ஒரு இமைப் பொழுதும் மறவாமல் மீண்டும் மீண்டும் சென்றடைய எண்ணினால் அதுதான் உண்மையான பக்திலயம் எனப்படும் என்கின்றார்.

  இங்கு சங்கரர் உண்மையான பக்திக்குக் குறிப்பிட்டிருக்கும் உதாரணங்களான ஊசி காந்தத்தை நாடுவதும், பத்தினிப் பெண்ணின் மனம் தன் கணவனை நாடுவதும், கொடி கொழுகொம்பான மரத்தை நாடுவதும், நதி கடலை நாடுவதும் நாம் அன்றாட வாழ்க்கையில் அறிந்த, தெரிந்த விஷயங்கள்; ஆனால் அவர் குறிப்பிடும் அங்கோலம் என்ற ஏரழிஞ்சில் மரமானது விசித்திரமானது. அங்கோல மரம் மிகவும் அரிதான விருட்சமுமாகும். இம்மரம் பங்குனி, சித்திரை மாதங்களில் மலர்கின்றது. (அதாவது மார்ச் 15 தொடங்கி மே 15 வரை) மலரானது பழுப்பு நிறத்தில் ஊசி போன்ற இதழ்களுடன் அமைந்திருக்கின்றது; மெல்லிய நறுமணம் கொண்டதாக உள்ளது. ஆனி மாதம் (சுமார் ஜூன் மாதம் 3-வது வாரம்) பழம் பழுக்கின்றது. இம்மரத்தின் பழம் நாவல் பழத்தினைப் போல நீல நிறமும் அமைப்பும் கொண்டுள்ளது, உண்பதற்குச் சுவையாகவும் உள்ளது. பழங்கள் தரையில்உதிர்ந்து வதங்கிய பின், அவற்றின் விதைகளில் பெரும்பாலானவை தரையிலேயே அழிந்து விடுகின்றன. அபூர்வமாகச் சில விதைகள் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே விதைக்கப்பட்டு முளைப்பதுண்டு. ஆனால் மிகவும் சில விதைகள் மட்டுமே விசேடமான ஒரு வகை உந்துதல் சக்தியால் ஊர்ந்து சென்றோ அல்லது காற்றால் வீசப்பட்டோ தாய் மரத்தின் அடிப்புறம் வந்து ஒட்டிக் கொண்டு விடுகின்றன.

   

  நாளடைவில் இந்த விசேட விதைகள் அடிமரத்தினின்று பிரிக்க இயலாத வகையில் தாய் மரப்பட்டையோடு ஐக்கியமாகி விடுகின்றன. இந்த அற்புதத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். சீராகச் சிந்தித்தால் அரும்பெருந் தத்துவம் ஒன்று புலப்படும். உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கலாம். ஆனாலும் அவர்களில் சில ஆத்மாக்கள் மட்டும் தான் இறைவனிடம் மாறாத பக்தி கொண்டு அவனது திருவடிகளைச் சென்றடைய முடியும். தாய் அடித்தாலும் சேயானது அவள் மடியிலேயே சென்று விழுந்து பற்றிக் கொள்வது போல், எத்தனை சோதனைகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் அந்த இறைவனையே நாடும் ஆன்மாக்களே உயர்ந்த ஆன்மாக்கள். இந்த உன்னதமான கருத்தை உணர்த்துவதே அங்கோல மரத்தின் உயரிய தத்துவம்.

  இவ்வகையில் நல்விதைகள் தாய் மரத்திடம் ஐக்கியமாகி விடுகின்றபடியாலும், பெரும்பாலான விதைகள் விழுந்த இடத்தி«லேயே அழிந்து விடுவதாலும், வெளியிடங்களில் விளைகின்றவைகளின் எண்ணிக்கை குறைவு. அதனால் இம்மரத்தைக் காண்பதும் அரிதாகின்றது. தமிழ்நாட்டில்அங்கோலம் மரம் சில இடங்களில்தான் உள்ளது என்கிறார்கள். அம்மரம் இருக்கும் ஓர் இடம் பொன்னேரிக்கு அருகில் சின்னக்காவணம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அஷ்டோத்திரவல்லி சமேத நூற்றெட்டீஸ்வர் திருக்கோயில் என்பதாகும். இத்திருக்கோயில், சென்னைக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் பொன்னேரிக்கு அடுத்த பழவேற்காடு சாலை அருகில் ரேணிகுண்டா செல்லும் புகைவண்டி மார்க்கத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் தான் ஏர் அழிஞ்சில் எனப்படும் அங்கோலம்.

  இத்தல விருட்சமான அழிஞ்சில் மரத்தைப் பற்றிய தாவர இயல் வல்லுநர்களின் மதிப்பின்படி ஆயுர்வேத மூலிகைகளில் விசேடமானதாக இது கருதப்படுகின்றது. இம்மரத்தின் பட்டை வெறிநாய்க் கடிக்கு ஒரே மருந்து என்றும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் கடிக்கு மருந்தென்றும் பித்தம், மலச்சிக்கல் மற்றும் குஷ்டம் போன்ற தோல் வியாதிகளுக்கு மருந்தாகும் என்றும் கூறப்பெறுகின்றது. சில இடங்களில் இவ்விதையினின்று மாந்திரீகச் சக்தியுடைய மையும் செய்வதாகக் கூறுகின்றனர். இதன் தாவர இயற்பெயர் அலாஞ்சியம் ஸால்வி ஃபோலியம். இந்தியா, ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, இந்தோசைனா மற்றும் சைனாவிலும் காணப்பெறுகின்றது என்கின்றனர்.

  அகத்திய முனிவர் காசி யாத்திரை மேற்கொண்டு அவ்வழியே செல்லும்போது இவ்வூரில் நான்கு வேதங்களையும் நன்கு கற்றுணர்ந்த வேத விற்பன்னர்கள் இருப்பதை அறிந்து, இங்கு ஓய்வெடுக்கத் தங்கினார் என்று வரலாறு கூறுகின்றது. அவ்வாறு தங்கிய போது இரவு சிவபெருமான் அகத்திய முனிவரின் கனவில் தோன்றி, “நீ காசிக்குச் செல்ல வேண்டாம். இங்கேயே தங்கி நூற்றெட்டு நாட்கள் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வருவாயானால் அதுவே காசிக்கு வந்து என்னைத் தரிசித்தமைக்குச் சமம்” என்று கூறியதாகவும், அகத்திய முனிவரும் அவ்வாறு அருகில் உள்ள ஆரண்ய நதியில் நீராடித் தினமும் ஒரு பிடி மணல் கொண்டு மேற்கூறிய அழிஞ்சில் மரத்தடியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து 108 நாட்கள் வணங்கியதாகவும் வரலாற்றுச் செய்தி கூறுகின்றது. வேதங்களுக்கெல்லாம் அதிபதியாகிய விநாயகக் கடவுளைப் பிரதிஷ்டை செய்ய அவர் மறந்துவிட்டதால் அந்த முக்கட்பெருமானை நினைவுறுத்தும் பொருட்டு 108 விநாயகர் வடிவம் கொண்டதாகவும், வரலாறு கூறுகின்றது. இப்பொழுதும் இம்மரத்தடியில் விநாயகரைக் காணலாம். உறயக்ரீவர் போல் குதிரை முகம் கொண்டிருக்கும் விநாயகரின் துதிக்கையை, அவர் வயிற்றுடன் ஒட்டியிருக்கும் அபூர்வ கோலத்தோடு இங்கே காணலாம். நந்திவர்மனால் கட்டப்பெற்ற ஆலயம் தற்போது உள்ளது.

  வேத விற்பன்னர்கள் வாழ்ந்த ஊர் எனும் காரணத்தால் சதுர்வேதபுரம் என்றும் இவ்வூருக்குப் பெயர் உண்டு. இங்கு கோவில் கொண்டிருக்கும் சிவலிங்கத்தின் பெயர் சதுர்வேதபுரீஸ்வரர். இச்சிவலிங்கமும், 108 ஈஸ்வரர் அல்லது அஷ்டோத்திர ஈஸ்வரர் என்றும் மற்றொரு சிவலிங்கமும் உண்டு. கிழக்கு நோக்கிய அம்மன் பெயர் அஷ்டோத்திர வல்லி. விநாயகர், முருகர், பரிவார தேவதைகள், நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகளுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உண்டு, உற்சவ மூர்த்தியான நடராஜர். சிவகாமி அம்மன். மாணிக்க வாசகர் ஆகிய மூர்த்திகள் பஞ்சலோகத்தில் அமையப் பெற்றுள்ளன.

  கொடி மரமும் பலிபீடமும் சரிந்த நிலையில் மதிற்சுவர்கள் சிதிலமடைந்த நிலையில் இருந்தன. கோவிலில் இரு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவை தெளிவுபடுத்துவாரின்றிச் சுவரில் பொறிக்கப் பெற்றுள்ளன.

  நந்திவர்மனால் கட்டப் பெற்ற கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது என்கின்றனர்.சுமார் 45ஆண்டுகளுக்கு முன்னால் பெரு நிலக்கிழார் பெரியதம்பி முதலியார் என்பவரின் பெருமுயற்சியால் திருப்பணி செய்விக்கப் பெற்று இத்திருக்கோவில் மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஒரு கால பூஜைக்குரிய கோவில்களில் ஒன்றானது.

  கிராம மக்களின் இடையறாத முயற்சியினால் 21-03-2003 தேதியன்று இத்திருக்கோவிலுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. திருக்கோவில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. சுற்றுப்புறங்கள் தோறும் கோயிலின் பெருமையை உணர்ந்து பக்தர்கள் திரளாக வந்து செல்கின்றனர். பிரதோஷம், பௌர்ணமி ஆகிய தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோவிலின் உயர்வு கண்களுக்கும் மனத்திற்கும் நிறைவினைத் தருகின்றது.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com