
தேவகி எனும் பெயரில் என்ன இருக்கின்றது?
டாக்டர் திரு.ஏ.சி. முத்தையாவிற்கும், தேவகியான
எனக்கும் 1965-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி
எங்கள் திருமணம் நடந்தது. 1966-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி எங்கள் மகன் அஸ்வின் பிறந்தான். பிறந்தது எங்கள் குடும்பத்தின் முதல் பேரக் குழந்தை. ஜனவரி முதல் தேதி, நட்சத்திரமும் முதலாவது நட்சத்திரமான அஸ்வினி. கேட்க வேண்டுமா?
என் மாமனார் திரு.எம்.ஏ. சிதம்பரம் செட்டியாரும், மாமியார் திருமதி.அபிராமி
ஆச்சியும் அவனைத் தங்கள் உயிரினும் மேலாகக் கொண்டாடினர். என் கணவர்
பம்பாயில் எக்ஸெல்லோ கார்ப்பரேஷன் (XLO Corporation) எனும் கம்பெனியில் பணி செய்து கொண்டிருந்தார். அதே கம்பெனியின் பிரதான தாய் நிறுவனம் (Mother Company) அமெரிக்காவில் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் டிட்ராய்ட் (Detroit) நகரில் இருந்தது.
அதற்கு அவரை அனுப்ப பம்பாய்க் கம்பெனி ஏற்பாடுகள் செய்தது. 1966-ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம் பயணத்திற்கு ஏற்பாடுகள் துரிதமாக நடந்தேறின. நானும் அவருடன் செல்ல இருந்தேன். "குழந்தையையும் அழைத்துக் கொண்டு முன்பின் தெரியாத ஊருக்குச் சென்று சிரமப்பட வேண்டாம். குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். நீங்கள் சென்று வாருங்கள்” என்றனர் எங்கள் பெற்றோர்கள். "இரண்டாண்டுகள் பிரிந்து திரும்பவும் வரும்போது என் மகனுக்கு என்னைத் தெரியாதே” என்று கூறி அழுதேன்.
என் தாயார் கூறியது இன்னும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கின்றது. "உன் மகன் உன்னைவிட்டு எங்கே போகப் போகிறான். திரும்பி வந்தவுடன் ஒரு மாதமோ இரண்டு மாதமோ அதன்பின் அவன் உன்னைத் தெரிந்து கொள்ளாமலா போவான்? மாப்பிள்ளைக்குச் சின்ன வயது. அவருக்குத் தான் நீ அருகில் இருக்க வேண்டும். உன் மகனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்” என்றார்.
டிட்ராய்ட் நகரில் எல்லாம் புதுமையாகத்தான் இருந்தது. அந்தப் புதுமையிலும் என் மனதில் ஒரு பாறாங்கல்லைக் கட்டியது போன்ற சுமை, எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. அஸ்வினைப் பார்க்க வேண்டும் போல் இருக்கும். அவன் வயதை ஒத்த குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது அழுவேன். என் தாயாருக்குக் கடிதம் எழுதும் போதெல்லாம் நான் கேட்பேன் “எனக்கு தேவகி என்று ஏன் பெயர் வைத்தீர்கள. அதனால்தான்
என்னவோ என் மகனைப் பிரிந்து வாழ நேரிட்டிருக்கின்றது” என்பேன். அவர்கள் மனம் துன்பப்படும் என்று நான் நினைக்கவே இல்லை. என் துயரம் தான் எனக்குப் பெரிதாக இருந்தது. மகனைப் பிரிந்திருந்ததின் காரணம் என் பெயர் அல்ல, எனது கர்மா என்று நான் அப்பொழுது உணரவில்லை.
நாங்கள் இந்தியா திரும்பி வந்த பல ஆண்டுகள் கழித்து வித்வான்
திரு.லட்சுமணனிடம் கூட ஒரு முறை கூறினேன். “எனக்கு என் பெயரைப்
பிடிக்கவில்லை ஐயா, தேவகி என்ற பெயர்கொண்டதால்தான் எனக்குச் சோதனைகள் அதிகம்” என்றேன். அதற்கு அவர்”என்னம்மா இது? இதைவிட
உயர்ந்த பெயர் உண்டா? அந்தப் பரம்பொருளை ஈன்ற தாயின் பெயரல்லவா? அந்தப் பெயரை இப்படிக் கூறலாமா?” என்றார்.
பல ஆண்டுகள் உருண்டோடி 1994-ல் அஸ்வினுக்கும் என் சகோதரர் திரு.ஆர்.முத்து அவரின் மகள் வள்ளிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு என் பெயரான “தேவகி” எனும் பெயரை வைத்தார்கள். நான் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தேன். வேறு பெயர்
சொல்லி அழையுங்கள் என்று. அவர்கள் மாற்றவே மாட்டோம் என்று “தேவகி”
என்றுதான் இன்றும் அன்புடன் அழைக்கின்றார்கள்.
அவர்கள் ஒரு முறை லண்டன் சென்று வந்தார்கள், அங்கு ஹாம்லிஸ் (Hamleys) என்று ஒரு கடையுள்ளது. குழந்தைகளுக்காக விளையாட்டுப்பொருள்கள்
அனைத்தும் கிடைக்கும். அங்கு கம்ப்யூட்டர் ஒன்றில் ஏதாவது பெயரைக் குறித்து பொருத்தினால் அந்தப் பெயரின் பொருள், குணங்கள், தன்மைகள் ஆகியவை வருமாம். அதில் “தேவகி” எனும் பெயரைக் குறித்துக் கொடுத்திருக்கின்றார்கள்.
அப்பெயரின் விவரம் அனைத்தும் அழகான ஆர்ட் பேப்பரில் வந்திருக்கின்றது. அதனைப் பரிசாக ஃப்ரேம் செய்து எனக்கும் கொடுத்தார்கள். அதைப் படித்துப்
பார்த்து என் மனம் பூரித்தது. "தேவகி” எனும் பெயரில் இத்தனை அர்த்தமா
!! இத்தனைப் பெருமைகளா!! இத்தனைக் குணங்களா!! என் பெற்றோர் இட்ட போது பெருமை தெரியாது இருந்த பெயரின் பெருமையை என் மகன் எனக்குக் காட்டிக்
கொடுத்திருக்கின்றான். நெஞ்சம் என் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டது; எனக்குத் தெளிவு உண்டாக்கிய குழந்தைகளுக்கு நன்றி கூறியது. என் போன்று “தேவகி” எனும் பெயர் கொண்ட அத்தனைப் பேருக்கும் இதனைக் காணிக்கையாக்குகிறேன்.
தேவகி
தேவகி எனும் இந்துப் பெயரிலிருந்து வருவது:-
பொருள்: தாய்.
சௌகரியமாகவும், பாங்குடனும்
உடை உடுத்துபவள்
பிறரது நிழலில் நடக்கமாட்டாள்
இவள் செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சி
பின் தொடரும்
தன்னலம் சிறிதும் இல்லாதவள்
மனதைச் செலுத்தும் எந்தக் காரியத்தையும்
எடுத்து முடிக்கக் கூடியவள்
பொறுமை எனும் குணமே இவளிடம்
மேலோங்கி நிற்கும்
எந்தப் புயலையும் சமாளிக்கக் கூடிய
திறமையுடையவள்
வாழ்வில் உயர்ந்ததையே நாடுபவள்
இக்குணங்களெல்லாம் என்னிடம் முன்பு இருந்தனவோ இல்லையோ? இந்தப்
பெயர்த் தன்மை இதழ் என் கைக்கு வந்தபின் நாம் இப்பெயருக்கேற்ற குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் எனக்கு வந்தது. சிறிது சிறிதாக
என்னை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து, இன்னும் முதல் படியைக்கூடத்
தாண்டவில்லை. கடைத்தேற அந்தக் கிருஷ்ணபரமாத்மா அருள வேண்டும்.