• கடைக்கண்களே

    "தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
    இனம் தரும்; நல்லனஎல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே"

    என்று பாடுகின்றார் அபிராமி பட்டர். பூவுலக வாழ்விற்குத் தேவையான குறைவில்லாத செல்வத்தையும், நல்லது - கெட்டதென தரம் பிரிப்பதற்குத் தேவையான கல்வி அறிவையும், உயர்விலும், தாழ்விலும் கலங்காத மனத்தையும், தெய்வீகத் தோற்றத்தையும், கள்ளங்கபடம் இல்லாத சுற்றத்தையும், மற்றும் நல்லதென
    என்னவெல்லாம் உள்ளதோ அத்துணை நல்லனவற்றையும் அன்பர் என்பவர்களுக்குப் பூங்குழலாள் அபிராமியின் கடைக்கண்கள் கொடுக்க வல்லன என்பதே பாடலின் பொருள்.

    அபிராமியின் உருவம் முழுமையானது. அவளது அபயஹஸ்தமோ, திருவடிகளோ, இதயமோ, அந்த அருளைத் தர இயலும். இருப்பினும், அவளது கடைக்கண்களே நல்லன எல்லாம் தர வல்லன என்று கூறுவதால் கண்களின் கருணைக்கு எத்துணை முக்கியத்துவம் என்று பட்டர் தெளிவுபடுத்துகின்றார் என்பது புலனாகின்றது.

    உயிரினங்களில் பல, ஸ்பரிசத்தால் தாம் இட்ட அண்டங்களைப் (முட்டைகளை) பொரிக்க வல்லன. உதாரணத்திற்குப் பறவைகள், பாம்பு, பல்லி போன்றவை. ஆமைகள் வெகு தூரத்தில் இருந்து நினைத்த மாததிரததில் முட்டைகளைப் பொரிக்க கூடியவை. ஆனால் மீன்கள் நயனத் தீட்சையால் கண்களின் கருணைப் பார்வையால் மட்டுமே தான் ஈன்ற முட்டைகளைப் பொரிக்க வல்லவையாம். அந்தக் கண்களுக்கு எத்துணை அருள், கருணை இருக்க வேண்டும். இதனால் தான் மீனைப் போன்ற கருணை மிகுந்த கண்களை உடையவள் என்பதனால் அம்பிகையை மீனாக்ஷி என்று அழைப்பர். அன்னையின் பல நாமங்களில் கண்களைப் பிரதானமாகக் கொண்டு அழைக்கப் பெறும் பெயர்கள் மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி என்பனவாகும்.

     

    மீனாக்ஷி மதுரையை ஆளும் அம்பிகையின் பெயர். மீன் தான் ஈன்ற முட்டையினின்று தன் கண்களின் கருணைப் பார்வையால், மீன் குஞ்சுகளைப் பிறப்பிக்க இயலும். அதேபோல், தனது கருணைப் பார்வையால் தான் படைத்த, தன்னை நாடி வரும் ஆன்மாக்களைப் பிறவி எனும் பிடியிலிருந்து விடுவிக்கக் கூடியவள் அன்னை. அன்னையின் ஆயிரம் நாமாக்களில் ‘லலிதா ஸஹஸ்ரநாமம்’ எனும் நூலில் மற்ற இரு நாமங்கள் அதாவது விசாலாக்ஷி, காமாக்ஷி என்பன இடம் பெற்ற போதும், ‘மீனாக்ஷி’ எனும் நாமம் இடம் பெறவில்லை என்பது வியப்பே!

    மதுரை மீனாக்ஷியைப் போலவே காசியில் விசாலாக்ஷியும் காஞ்சியில் காமாக்ஷியும் கருணைக் கண்களுடன் கூடியவர்கள். பாவங்களனைத்தையும் போக்கி மோக்ஷத்தைத் தரக்கூடிய கங்கை நதியின் கரைதனில் அமைந்தது காசி எனும் வாரணாசி தலம். இங்கு விஸ்வநாதரின் தேவியாக ஆட்சி செய்பவள் விசாலாக்ஷி. விசாலம் என்றால் அகலமான என்று பொருள். சிறிதும் குறுகாமல் கருணையால் விரிந்து ஒவ்வொரு ஆன்மாவின் வாழ்க்கையையும் தீர்க்கமாக நிர்ணயிக்கக் கூடியவள், விசாலமான கண்களையுடையவள் தேவி விசாலாக்ஷி.
    அவளது கருணா விலாஸம் அளவிடற்கரியது.

    இதேபோல் ஏழு மோட்சபுரிகளான அயோத்யா, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி. அவந்திகா (உஜ்ஜயினி), துவாரகா ஆகியவற்றில் ஒன்றான காஞ்சியில் அமர்ந்திருக்கும் தேவி மஹா திரிபுரசுந்தரியின் பெயர் காமாக்ஷி. ‘கா’ என்றால் கல்வியின் அதிதெய்வமான ஸரஸ்வதி என்று பொருள். ‘மா’ என்றால் செல்வத்தின் தெய்வமான மஹாலட்சுமி என்று பொருள். ஸரஸ்வதியையும் லக்ஷ்மியையும் தனது இரண்டு கண்களாகக் கொண்டு, தன்னைச் சரணடையும் பக்தர்களை உய்விக்கும் தாய் காமாக்ஷி. தனது தவத்தைக் கலைத்த காமனைத் தன் பார்வையால் எரித்தார் சிவபெருமான். அதில் அவனது உடல் தான் எரிந்தது. அவனது ஆன்மாவைத் தனது கண்களில் வாங்கிக் கொண்டாள் அன்னை பார்வதி.

    காமனைத் தனது கணகளால் கிரகித்துக் கொண்டு காமாக்ஷி ஆகிறாள் அன்னை (காமஹ+அக்ஷி). இதன் காரணமாகவே தனது பாதாரவிந்தங்களைச் சரணடையும் உயிர்களைப் புவி உலகப் பாவங்களிலிருந்து விடுவித்து, காமம் கடந்த எல்லைக்குக் கொண்டு சேர்த்து முக்தி அடையச் செய்கின்றாள்.

    அம்பிகைக்கு முக்கண்ணி என்றும் பெயர் உண்டு. லலிதா ஸஹஸ்ரநாமம் அவளை ‘த்ரிநயனா’, ‘த்ரிலோசனா’ என்றும் அழைக்கின்றது. ஆதிசங்கரர் இயற்றிய ‘சௌந்தர்யலஹரி’ எனும் நூல் அம்பிகையின் அழகு வெள்ளமும் வர்ணனையும் ஆகும். அதில் அம்பிகையின் கண்களை வர்ணிக்கும் சங்கரர்,

     

    பவித்ரீகர்தும் ந: பசுபதி பராத்ன ஹ்ருதயே
    தயாமித்ரைர் நேத்ரை: அருணதவலச்யாமருசிபி
    நத: சோணோ கங்கா தபந தநயேதி த்ருவமும்
    த்ராயாணம் தீர்த்தானாம் உபநயஸி சம்பேத மநகம

    என்று கூறுகின்றார்.

    பரிவும் கருணையும் நிறைந்த ஹ்ருதயத்தால் பசுபதியை ஒத்த அமபிகையின் கண்கள் சிவப்பு, வெளுப்பு, கருப்பு என்று மூன்று வர்ணரேகைகள் கூடியனவாக இருக்கின்றன. வெண்மை நிறம் கிழக்கு திக்கை நோக்கிப் பாயும் கங்கையை நினைவூட்டும். கருப்பு நிறம் கிழக்கு நோக்கிப் பாயும் யமுனையைக் குறிக்கும். ஆனால் கண்களில் தோன்றும் சிவப்பு நிறரேகைகளோ மேற்கு நோக்கிப் போகும் புருஷரூபமான புண்ய நதி சோனபத்ரா எனும் நதியைப் போன்று உள்ளது. கங்கையும், யமுனையும் பெண்மைக் குணங்கள் வாய்ந்த நதிகளான போதிலும் சோனபத்ரா புருஷ குணங்கள் வாய்ந்தது. குணங்களால் மாறுபட்டுப் பாயும் திக்குகளும் எதிர்ப்பட்ட நதிகள் எவ்வாறு சங்கமிக்க இயலும்? ஆனால் தேவியின் கண்களில் இம்மூன்று புண்ணிய நதிகளும் சங்கமித்து, பக்தர்களின் பாவங்களைக் களைகின்றனவாம். இதுவே தேவியின் கண்களின் மேன்மை.

    அன்னை தனது கண்களை இமைக்கும் ஒவ்வொரு முறையும் பூவுலகங்களை ஸ்ருஷ்டிசெய்கினறாள் என்பதனை லலிதா சஹஸ்ரநாமம் ‘உன்மேஷ நிமோஷித்தோத்பன்னவிபன புவுனாவளி’ என்று கூறுகின்றது.

    இதே சஹஸ்ரநாமத்தில் அன்னைக்கு ‘ஸஹஸ்ராக்ஷி’ என்று ஒரு பெயர் உள்ளது. அதாவது ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்று பொருள். சாதாரணமாக மாரியம்மனை ஆயிரம் கண்ணுடையாள் என்று கூறுவதுன்டு. தென்னிந்தியாவில் அம்மை நோயினை நோயென்று கருதாது, மாரியம்மனே நோய் தாக்கப் பெற்றவரைக்குடி கொண்டு இருக்கின்றாள் என்று கூறும் வழக்கம் உண்டு. வைசூரி மற்றும் அம்மை வகைகள் உடல் முழுவதும் கண் வடிவத்தில் தோன்றுவதாலும், மாரியம்மனுக்கு இப்பெயர் கூறுவர் என்றும் கொள்ளலாம்.

    கம்பனை ஆதரித்து, கம்பராமாயணம் படைக்கப் பக்கத் துணையாய் இருந்த சடையப்ப வள்ளல் பிறந்த ஊரான நாட்டரசன் கோட்டையில் தோன்றியிருப்பவள் ‘கண்ணாத்தா’ எனும் ‘நேத்ராக்ஷி’. கண்களுக்கு வரும் குறைகளுக்கெல்லாம் ‘கணணாத்தாளுக்கு’ நேர்ந்து கொண்டு பக்தர்கள் காணிக்கையாக வெள்ளியினால் செய்த கண்மலர்களைச் சாத்துவர்.

    இப்பொழுது சிவபெருமானின் கண்களைப் பற்றி சற்று பார்ப்போம். சிவன் மூன்று கண்களையுடையவன் என்றும், மூன்றாவது கண் அவன் நெற்றியில் உள்ளது என்றும் கூறுவர். அம்மூன்று கண்களும் சூரியன், சந்திரன் மற்றும் அக்கினி என்பர். சிவபெருமான் தவத்தில் இருந்த பொழுது அவரது தவத்தைக் காமன் கலைத்த பொழுது, சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணினாலேயே காமனைச் சுட்டெரித்தான் என்று கூறுவது புராணம். காமன் சிவனைத் தனது மலர் பாணத்தால் தீண்டிவிட்டான். சூரசம்ஹாரத்திற்குக கந்தன் அவதரிக்க வேண்டும். சிவன் தவக்கோலத்தில் இருக்கின்றான். இந்நிலையில் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பிழம்பே சரவணப் பொய்கையில் பாய்ந்து, கார்த்திகேயனாக அதாவது முருகனாக முகிழ்த்தது என்று கூறுவது குமாரசம்பவம். ஆண்மகனான சிவகுமாரன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்தவன்!

     

    இந்த மூன்றாவது கண் நமது புருவங்களுக்குகிடையில் உள்ள ஆக்ஞா சக்கரத்தைக் குறிக்கும். நம்முள் அமையப் பெறும் குண்டலினி சக்தியானது மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி என்ற சக்கரங்களின் வாயிலாக எழுந்து ஆக்ஞா சக்கரத்தின் வழியாக சஹஸ்ராரத்தை அடைந்து பரமாத்மனுடன் கலந்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்குகின்றது. இந்த ஆக்ஞா சக்கரமே, படிப்படியாக மேலெழும் சக்தியைப் பரமாத்மனுடன் கலக்கச் செய்வதால் இதனையே ஞானக்கண் என்றும் கூறுவர்.

    விஷணுவிற்கு ‘புண்டரீகாக்ஷன்’ என்று ஒரு பெயர் உண்டு, சிவனுக்கு சஹஸ்ரநாம வழிபாடு செய்ய விரும்பி அதற்கெனவே ஆயிரம் தாமரைப் பூக்களைச் சேர்த்து வைத்து ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு தாமரைப் பூவினை சிவனது திருவடிகளில் அர்ச்சித்தானாம் திருமால். அவனது பக்தியினை சோதிக்கும் வண்ணம் சிவபெருமான் ஒரு தாமரை மலரை மறைத்து வைத்து விட்டாராம். ஆயிரமாவது நாமத்திற்கு கணக்கான ஆயிரமாவது தாமரை இல்லை என்று ஆனபோது திருமால் தனது கண்களையே மலராக உரித்துச் சிவனின் காலடியில் வைத்தபோது சிவபெருமான் தோன்றி அந்த கண்ணிற்குப் பதிலாகத் தான் ஒளித்துவைத்த தாமரை மலரை திருமாலின் முகத்தில் பொருத்தி அவருக்குப் ‘புண்டரீகாக்ஷன்’ ‘கமலக்கண்ணன’ என்று திருநாமம் சூட்டினாராம்.

    வேடுவராகப் பிறந்த திண்ணன் தனது கண்களைக் குருதி வடியும் சிவபெருமானின் கண்களுக்குப் பதிலாகக் கொடுத்து முக்திப் பெற்று கண்ணப்பராகி 63 நாயன்மார்களில் ஒருவராக ஆனது நாம் யாவரும் அறிந்த வரலாறு.

    கண்கள் இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பாகின்றனவே!
    இறைவன் படைத்த கண்கள் எப்பொழுதும் பாரத்துக் கொண்டே இருக்கலாம். எப்படி என்கின்றீர்களா? நாம் உயிருடன் இருக்கும்போது நாம் பார்க்கத் துணைபுரியும் கண்கள் நாம் இறந்த பினபும் பார்வையற்ற வேறொருவர் பார்க்கத் துணைபுரியலாம்! இக்கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் கண்தானம் செய்ய உறுதி எடுக்கலாமே! நம் உடல் அழிந்த பின்பும் கூட நம் கண்கள் அழியாது பார்த்துக கொண்டே இருக்கலாமே!

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com