• கை கொடுக்கும் கை

    இம்மாத அபிராமி இதழுக்கு என்ன எழுதுவது என்று என் தலையை போட்டுக் குடைந்து கொண்டிருக்கும் போது தலையைப் பற்றி சென்ற இதழில் எழுதி விட்டீர்களே, அதை எழுதியதும் இப்போது எழுதியும் கொண்டிருக்கும் என்னும் எழுதப்போகும் என்னைப் பற்றி எழுதக்கூடாதா? என்று என் கை கேட்க, இதோ உங்கள் முன் “கை கொடுக்கும் கை” என்ற கட்டுரை.

    மனித உடம்பில் தலை என்ற சிரசை மற்ற பகுதியுடன் இணைக்கும் கழுத்திலிருந்து இரு பக்கமும் பரந்து நிற்பது தோள் என்ற பகுதி.  தோளிலிருந்து துவங்கி முழங்கை மூட்டு (Elbow) வரை ஒரு பகுதியும், முழங்கையிலிருந்து கணுக்கை (Wrist) வரை ஒரு பகுதியும் கணுக்கையுடன் இணைந்த கரத்தையும் கொண்டது கை. கரத்தில் ரேகைகள் கூடிய உள்ளங்கையும், பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுட்டு விரல் என்று அதனதன் தொழில் குறித்த பெயர்களுடன் கூடிய ஐந்து விரல்களையும் கொண்டது கரம்.  விரல்களின் மேல் நுனியில் அமைந்த நகம். தலைமுடியைப் போல் நகமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும்.  வளரும் நகத்தில் ரத்த ஓட்டம் கிடையாது என்பது விசேஷேச் செய்தி.

    ஐம்புலன்களில் கண் முதலில் பார்த்தாலும் காது முதலில் கேட்டாலும் நா முதலில் ருசித்தாலும் மூக்கு முதலில் நுகர்ந்தாலும் முதல் ஸ்பரிசம் என்று உண்டாவது கை எனும் உறுப்பின் வழியாகத்தான்.  அதன் காரணமாகவே அவர்கள் கை பட்டுவிட்டது. கையால் தொட்டுவிட்டார் என்று கூறுவார்கள்.  “அவர்கள் கை ராசியான கை” என்றால் அவர்கள் எடுத்து நடத்தும் காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும்.  கை வண்ணம் என்றால் ஒருவரது கலைப்படைப்புக்களில் மிளிரும் அழகுதனைக் குறிப்பது.  கைப் பக்குவம், கை வாகு என்றால் அவர்கள் செய்யும் வேலையில் முக்கியமாகச் சமையலில் அதிக ருசியைக் குறிக்கும். விஞ்ஞானம் கூறுவது என்னவென்றால் ஒவ்வொருவரின் கரங்களிலிருந்து சுரக்கும் (Enzymes) வேறுபடுவதால் அதற்கேற்ப அவர்கள் சமையலும் மாறுபடுகின்றது என்று.

    தடுமாறும் ஒருவரைக் கீழே விழாமல் பிடிப்பது கை என்பதால் அவருக்குக் கைத்தாங்கல் ஆகிறோம்.  கை தூக்கி விட்டது என்பதும் இதைத்தான்.  இதன் காரணமாகவே நடக்கக் கையில் ஊன்றும் கோல் கைத்தடி ஆகின்றது. ஒரு காரியத்திற்குத் தனக்கு இனிமேல் சம்பந்தம் இல்லை என்பதற்கு “கை கழுவி விட்டேன்” என்கின்றார்கள்.  ஒருவரின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கை இல்லை என்பதற்கு “கை விட்டு விட்டார்” (முக்கியமாக மருத்துவர்கள் பற்றிய வாக்கு) என்கின்றோம். அவர்கள் வீட்டில் “கை நனைக்கவே மாட்டேன்” என்றால் ஒருவர் விட்டில் உணவு அருந்தவே மாட்டேன் என்பதாகும்.  அந்த காரியத்தில் “அவருக்கும் ஒரு கை” என்றால் அவருக்கும் பங்கு உண்டு என்பதாகும்.

    கொடுப்பதும் வாங்வதும் கை என்பதால் கொடையில் கைக்கு முக்கியப் பங்குண்டு. “கொடுக்கும் கக மேலே, வாங்கும் கை கீழே” என்பதால் கொடையின் உயர்வு வெளிப்படை. கொடுத்துக் கொடுத்துச் சிவந்தது கர்ணனின் கை எண்பதும் கொடையின் சிறப்பினைக் குறிக்கும்.  இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியாது என்றால் யாருக்குமே தெரியாது விளம்பரம் இல்லமாலே செய்யும் கொடையின் சிறப்பினைக் குறிக்கும். கொடையின் சிறப்பால் பெயர் பெற்றவன் “பொற்கைப் பாண்டியன்”.  ஒருவர் எடுத்த காரியெமெல்லாம் வெற்றி அடைவதால் அவர்கள் தொட்டால் துலங்கும், பொன்னான கை என்கின்றோம். ஒருவருக்கு “கை சுத்தமில்லை” என்றால் அவர்கள் செயலில் நேர்மை இல்லை என்று பொருள். யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் தானே உழைத்துச் சம்பாதிக்கும் ஒருவரும் “அவன் கையே அவனுக்கு உதவி” என்கிறோம். ஒரு இடத்துக்குச் செல்ல வழியைக் காட்டுவது கை…. இதன் காரணமாகவே வழிகாட்டும் மரங்களுக்கு கை காட்டி மரம் என்கின்றோம். புகை வண்டிக்குப் போக மற்றும் நிற்க உத்தரவிடும் கருவி கை காட்டி மரம்.  கையை ஓங்குவது கெட்டப் பழக்கம் என்றால் மற்ற ஒருவரை அடிப்பது தவறு என்பதாகும்.  கை ஏந்தக் கூடாது என்று இருக்கின்றேன் என்றால் யாசிக்கக்கூடாது என்று இருக்கின்றேன் என்று பொருள்.  “கை நீளம்” என்பது அத்தனை உயர்ந்த செய்தியன்று.!!

    அளவிற்கு உண்டானது கை.  பெருவிரலில் இருந்து சுட்டு விரல் வரை உள்ள அளவு ஒரு ஜான்.  ஒருவரது உடல் அவரது விரல்களால் எட்டு அளவை உள்ளதால் எண்ஜான் உடம்பு என்கின்றோம். நடுவிரல் நுனியிலிருந்து தோள் வரை அமைந்த அளவு ஒரு பாகம்.  சாதாரணமாக ஒருவரது கை அவர்களின் முழங்காலுக்கு மேல் வரைதான் அமையும்.  முழங்காலுக்குக் கீழே வரை அமைந்திருந்தால் அது ராஜ அம்சம், அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று கூறுவார்கள்.  விரல்கள் நீளமாக அமைந்தவர்கள் கலை அம்சம் மிகுந்தவர்கள் என்று கூறுவார்கள்.

    அடிப்பது கை, அணைப்பது கை!!  கொடுப்பது கை, தடுப்பது கை!! வாங்குவது கை, வீசுவது கை!! வருடுவது கை, கிள்ளுவது கை!! எழுதுவது கை, அழிப்பது கை!! தூக்கி விடுவது கை, இறக்கி விடுவதும் கை!! தாங்குவது கை, தள்ளி விடுவதும் கை!! உண்பது கை, உடுப்பது கை!! சுட்டுவது (சுட்டிக் காட்டுவது) கை, சூட்டினை உணர்த்துவது கை!! அளப்பது கை, அழுகையைத் துடைப்பது கை!! அசைப்பது கை, அசையாமல் நிறுத்துவதும் கை!!  பிடிப்பது கை, பிடியைத் தளர்த்துவதும் கை!! தொட்டிலை ஆட்டுவது கை,  வாளைப் பிடிப்பதும் கை!!  சேர்ப்பது கை, பிரிப்பதும் கை!! விதை விதைப்பது கை.  நாற்று நடுவது கை. அறுவடை செய்வது கை. போர் அடிப்பது கை.  உமி புடைப்பது கை. அரிசி அளப்பது கை, பொதியைக் கட்டுவதும் கை.  அரிசியைக் களைவதும் கை.  சாதம் வடிப்பதும் கை.  ஊட்டுவதும் கை, உண்பதும் கை.  வேதங்களும், மேளங்களும் முழங்கப் பலர் முன்பு கணவன் பற்றுவது மனைவியின் கையை. நட்பினை உணர்த்த மேற்கத்தியர் குலுக்குவது கை.  நமது அத்தனைச் செயல்களுக்கும் கை முதன்மை!!

    விநாயகரின் கையில் மோதகம், முருகனின் கையில் வேல், மஹாவிஷ்ணுவின் கைகளில் சங்கும் சக்கரமும், சிவபெருமானின் கைகளில் டமருகம், அக்னி மான், மழு.  அம்பிகையின் கைகளில் “பாசம் அங்குசம் கரும்பு வில் புழ்ப பானங்கள், கலைவாணியின் கையில் வீணை, மஹாலட்சுமியின் கையில் தாமரை, மஹிஷாஸூரமர்த்தனியின் கைகளில் ஆயுதங்கள்… அத்தனைத் தெய்வ உருவங்களுக்கும் கால் இரண்டு மட்டுமே.  கரங்கள் மட்டும் பன் மடங்கு.  இதுவே கைகளின் மகத்துவத்தையும் பலத்தையும் காக்கும் குணத்தையும் குறிப்பதாகும்.  ஆயுதங்கள் எதுவுமின்றி அருள்பாலிக்கும் இறைவனின் கை “அபய ஹஸ்தம்”.

    கை விரல்களில் அணியும் ஆபரணம் மோதிரம்.  கணுக்கையில் அணிவது காப்பு, கை கட்டு, மற்றும் கைக்கடிகாரம், முழங்கைக்கு மேலே அணிவது வங்க்கி, முகலாயர்களின் கை ஆபரணங்கள் உலகப் பிரசித்தி வாய்ந்தவையாகும்.  ஆதிவாசிகளின் தந்தக் காப்புகளும் கை வளையல்களும் கலை நயம் வாய்ந்தவை.

    நகங்களின் நிறத்திலிருந்து உடம்பின் ரத்த ஓட்டம், ரத்ததின் தரம் போன்றவை அறியப் பெறுகின்றன.  கரத்தின் புறம் நிறத்தில் மாறுபட்டாலும் உள்ளங்கை மட்டும் வெளுப்பாகவே இருக்கின்றது.

    கரத்தில் அமைந்த உள்ளங்கையில் உள்ள ரேகைகளைக் கொண்டுதான் ஆருடமே கணிக்கப்படுகின்றது. இத்தனைக் கோடி மனிதர்கள் இருந்தாலும் ஒருவரது ரேகை போல் மற்றொருவரது ரேகை அமைவதில்லை என்பது சிறப்பு.  அதுபோன்றே ஒருவரது கை எழுத்தைப் போன்று மற்றொருவரது அமைவது கடினம்.  அதைக் காப்பியடிக்க நேரிட்டால் விளைவு விபரீதம்!! விபரீதம் அனைத்தையும் தவிர்த்து நல்ல காரியங்கள் நடக்கும் இடத்தில் மட்டும் கர ஒலி எழுப்பிப் பிறரையும் அங்கு செல்லக் கை காட்டி, துன்பத்தில் இருப்போரைக் கைத்தூக்கி விட்டு நல்லவர்களோடு என்றும் கை கோர்த்து வாழத் திருக்கடவூர் தாய் அபிராமியைக் கை கூப்பித் தொழுவோமாக!!

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com