• கனகாபிஷேகம்

  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குறிஞ்சிப்பூ மலரும் என்பார்கள். நூறு ஆண்டுகள் வாழ்ந்த காஞ்சிப் பெரியவர் மஉறாஸ்வாமிகளுக்குக் கனகாபிஷேகம் நிறைவு பெற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் பூர்த்தி பெற்று பதின்மூன்றாம் ஆண்டு இது. ஏனோ அவரது கனகாபிஷேகத்தின் போது நான் எழுதிய “மலரே பொன் மலரே" எனும் கவிதையை ‘அபிராமி" வாசகர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவே உங்களுக்காக இன்று அதே கவிதை !!

  மலரே !! பொன்மலரே !!

  மலரே!! பொன் மலரே!! சற்று நேரம் நீ நிற்பாயா?
  நான் கேட்கப் போகும் கேள்விகளுக்கு உடனே பதில் உரைப்பாயா?
  உன் பூரிப்பையும் பெருமையையும் நன்றாய் நானும் உணர்வேன்;
  தக்கவாறே உனக்கு இந்நாளும் நான் தந்திடாத மதிப்பைத் தருவேன்.

  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலயில் மலரும் குறிஞ்சிப்பூ;
  மலர்ந்து மணம் வீசியபின் சருகாய்க் காய்ந்திடும் அந்தப் பூ;
  நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையல்லவா மலரப் போகின்றது சொர்ணப் பூ;
  மலர்ந்து என்றும் மறையா மணம் வீசப் போவதல்லவா இந்தப் பூ.

  உன் பெருமையின் காரணம் அறியாதவளா, நான், இல்லை, புரியாதவளா?
  காமேஸ்வரி அமர்ந்தே உலாவரும் சிம்மவாகனமாகப் போகின்றாய்;
  என் அன்னை உறையும் ஆலயத்தின் கூரையாய் மின்னப் போகின்றாய்;
  காமகோடி பீடம் அமைந்த சங்கரரின் ஆலய விமானமாகப் போகின்றாய்.

  தெரியாமல்தான் கேட்கின்றேன்; இயல்பாய் உனக்கும் இவ்விந்திர பதவி
                                                                                                                               கிடைத்திடுமா?
  எண்ணிப் பார்க்க இயலா உயர்வு தானாய் வந்தே அமைந்திடுமா?
  நூறாண்டுகள் வாழந்த தவமுனிவர் திருமேனி தீண்டியபின்னல்லவா
  சாமானிய உருவம் மறைந்து நிலைத்த உயர்வு நீ பெற்றிட்டாய்!

  “பொன்மலர் நாற்றமுடைத்து" என்று பெரியவர் அன்றொருநாள் உரைத்தாராம்
  உனக்கு மணம் வந்து சேர்ந்த அதிசயம், ரகசியம் எனக்கு இப்போது புரிந்தது;
  தாமரைத் திருவடி மலர்களை, பவளமல்லிப் பாதங்களைத்
  தீண்டிய பின்பல்லவா உனக்கு மணம் வந்தே அமைந்தது!

  எனக்கென வரம் ஒன்று உன்னிடம் கேட்பேன்
  தவப்பெரியவரிடம் நீ தூது செல்வாயா?
  நீ பெற்ற பெருமையை நான் பெறவே
  வணங்கி வேண்டுகின்றேன்; வாங்கித் தருவாயா?

  நூறாண்டுகள் நடந்த அப்பிஞ்சுப் பாதங்களைத் தீண்டியே நானும் வணங்கிட,
  அகிலாண்டகோடி நாயகியின் அழகிய உருவைத் தாங்கிட,
  சங்கரர் அமர்ந்த ஆலயத்தின் பொற்கூரையாய்ப் பொலிவுடன் மின்னிட
  எனக்கும் அளவிலா ஆசையுண்டு என்பதை நீ அறிவாயா?

  இவ்வாசைகளை நான் அடைந்திட இம்மானிடப் பிறவியில் இயலாது;
  எலும்பும் சதையும் உடன்கொண்ட உடம்புடன் என்னால் முடியாது;
  மானிட உருவை உதறியே, உன் போல் மலராய் மாறியே
  உன்னுடன் வர விழைகின்றேன்; என்னையும் அழைத்துச் செல்வாயா?

  காஞ்சித் தவமுனிவர் திருவடிகளுக்கு
  ஓர் எளிய மலர்
  தேவகி முத்தையா

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com