
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
இசைக் கருவிகளில் துளைக்கருவி ஒரு வகை. அதில் சிறப்பான ஒன்று புல்லாங்குழல். காடுகளில் உள்ள மூங்களில்களில் வண்டுகள் உண்டாக்கிய துளையின் வழியாக காற்றுப் புகுந்து எழுப்பிய ஓசையே புல்லாங்குழல் எனும் இசைக் கருவியைப் பிறக்கச் செய்தது. புல்லாங்குழலின் இசைக்கு மயங்காதவரே இல்லை எனலாம். கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கு ஆறறிவு கொண்ட மனிதர்கள் மட்டுமல்ல, ஐந்தறிவே கொண்ட விலங்கினங்களான பசுக்களும், கன்றுகளும் கூட வயப்பட்டன என்பர். இராகங்களில் உறரி காம்போதி என்பது மிகவும் பழமையான இராகம் என்றும் உறரி (கண்ணன்) புல்லாங்குழலில் இசைத்த இராகமே உறரி காம்போதி என்று ஆனது என்றும் இசை ஆய்வாளர்கள் கூறுவர். அந்தப் புல்லாங்குழலைப் பற்றிய சுவாரஸ்யமான பாடல் ஒன்று பாகவதத்தில் உளது. அதன் பொருள் பின்வருமாறு:-
கோகுலத்துக் கோபியருக்கு கண்ணனது புல்லாங்குழல் மீது பொறாமை அதிகமானதாம். புல்லாங்குழலை எடுத்து மறைத்து வைத்து விட்டார்களாம். மறைத்தது மட்டுமல்லாமல் “நீ என்ன பெரிதாக சாதித்து விட்டாயென்று கண்ணன் சதா சர்வ காலமும் உன்னைக் கையில் வத்திருக்கின்றான். நீயும் அவன் அதரங்களுடன் உரிமை கொண்டாடுகின்றாய்? என்று கேட்டனராம். அதற்குப் புல்லாங்குழல் கூறியதாம்: “நீங்கள் எல்லோரும் வந்து வந்து கோபாலனுடன் கொஞ்சிவிட்டுப் பிறகு உங்கள் குடும்பங்களுக்குத் திரும்பச் சென்று விடுகிறீர்கள். நானோ என் வனம், சுற்றார், உற்றார், உறவினர் அனைவரையும் விட்டு விட்டுக் கண்ணனிடம் ‘அவனே சரணம் என்று வந்து விட்டேன். பல விரதங்களையும், நோன்புகளையும் நோற்று உடல் இளைத்து அவனிடம் வந்திருக்கின்றேன். என்னுள் இருக்கும் ‘நான் எனும் திமிரை (அகங்காரம், மமகாரம்) நீக்கி விட்டார்கள். நான் வெறும் கூடுதான். என் பற்றுக்கள் அகற்றப்பட்டு, முடிச்சுக்கள் நீக்கப்பட்டு (பிரம்மக் கிரந்தி, விஷ்ணு கிரந்தி, ருத்ர கிரந்தி என்ற மூன்று முடிச்சுக்களைக் குறிக்கும்) வந்திருக்கின்றேன். இதெல்லாம் பெரிதல்ல. என்னிடம் இருந்து வரும் கீதம், இசை எனதல்ல. கண்ணன் என்னை இசைக்கின்றானோ அந்தக் கீதத்தைத்தான் நான் வெளிப்படுத்துகின்றேன். இப்பொழுது சொல்லுங்கள் அவன் அதரத்துடன் என்றைக்கும் உறவு கொள்ள எனக்கு உரிமை இருக்கின்றதா இல்லையா? என்று கேட்டதாம். கோபியரும் வெட்கித் தலை குனிந்து புல்லலாங்குழலைக் கண்ணனிடம் சேர்த்தனராம்.
இது பாகவதத்தில் உள்ள ஒரு பாட்டு. இதனை எனக்குக் கூறிய வசிஷ்ட குகா ஸ்வாமி சாந்தானந்தபுரி.
இக்கட்டுரைக்கு நான் ஏன் இந்தத் தலைப்பினைக் கொடுத்தேன் என்று நீங்கள் யோசிப்பது எனக்குப் புரிகின்றது. அந்த யோசனைக்கு இதோ பதில். “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே அந்த புருஷோத்தமன் புகழ் பாடுங்களே என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள். இதற்கு இசை அமைத்த இசைப் பேரறிஞர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும் எம்.எஸ்.வி அவர்கள் கவிஞர் கண்ணதாசன கண்ணீர் மல்க நினைவு கூறுவார்கள். கவிஞர் அவர்கள் எம்.எஸ்.வி அவர்களிடம் “நான் உயிருடன் இல்லையென்றாலும் எந்தக் கச்சேரியில் நீ இந்தப் பாடலை - புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எனும் பாடலை பாடினாலும் என் ஆத்மா அங்கு வந்து பாடலைக் கேட்டு மகிழும் என்று கூறுவாராம். இதனைக் குறிப்பிட்டு விட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் “இறக்கும் மனிதரின் இறவாப் பாடல்கள் இவை என்று கூறி கண்ணீர் மல்க இப்பாடலைப் பாடியபடி கவிஞரைக் கூட்டத்தினிடையே தேடுவார்!! புல்லாங்குழல் என்ற உடனேயே இந்தப் பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசனும், பாடலைப் பாடிய எம்.எஸ்.வி. அவர்களும் என் மனதில் தோன்றுவர்.
இக்கட்டுரை சில ஆண்டுகளுக்கு முன்பு பால ஜோதிடத்தில் இடம் பெற்றது என்பதனை அபிராமி வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். கவிஞர் அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்பெறும் இம்மாதத்தில் அவரது நினைவினை அபிராமி வாசகர்கள் அனைவரின் மனதிலும் கொணர்வதற்காக மீண்டும் இதனை எழுதுவதில் மிகுந்த திருப்தியையும், மகிழ்ச்சியையும் அடைகின்றேன்.
|