• முத்துக் குளிப்பதொரு

  நவரத்தினங்களில் ஒன்று!! வெண்மையான நிறம் கொண்டது!! வழுவழுவென்று நிலவின் குளிர்ச்சியையும் ஒளியையும் உடையது அரிய ரத்தினம் - ஆம் அதுதான் முத்து!! கடலிலும் ஆற்றிலும் வாழும் சிப்பியின் வயிற்றில் உதிக்கும் முத்துக்களைப் பற்றிய முத்தான சில செய்திகளே இம்மாதம் அபிராமி வாசகர்களுக்கு எனது கட்டுரையாகும்.

  கடல் நீரில் வாழும் சிப்பிகள்தான் - ஆங்கிலத்தில் இதனை 'ஆய்ஸ்டர்' (Oyster) என்பார்கள் - முத்துக்கள ஈன்றெடுப்பன. மேகமூட்டமான நாட்களில் இச்சிப்பிகள் கடல் அலையின் மேற்பகுதிக்கு வந்து காத்திருப்பனவாம். இரண்டு பக்கங்களிலும் கிளிஞ்சல் என்ற ஓடு போன்ற மூடிக்குள்ளே வளவளப்பான ஆய்ஸ்டர் எனும் உயிருள்ள பூச்சி இருக்கும். கிளிஞ்சல்கள் திறந்த நிலையில் இந்த முத்துச்சிப்பி மழைத்துளிக்காகக் காத்திருக்க அதனுள் மழைத்துளி விழுந்த மாத்திரத்தில் கிளிஞ்சல்கள் மூடிக் கொண்டு கடலின் ஆழமான பகுதிக்குள் சென்று விடும். அங்கு தூய்மையான மழைத்துளியின் நெறுடலினால் பல மாதங்களுக்குப் பின் சிப்பியில் முத்து உண்டாகின்றது. பையப்பைய வளர்ந்த விலை உயர்ந்த இம்மணியினை எடுத்து சேகரிக்கத் தேர்ந்தவர்கள் கடலுக்குள் மூழ்கிச் செல்வார்கள். இதனைத்தான் முத்துக் குளிப்பது என்று தமிழ்நாட்டில் கூறுவார்கள். சேகரித்த முத்துச் சிப்பிகளை வகுத்து அதற்குள் இருக்கும் முத்தை நீக்கிச் சேகரித்து விட்டு அதனுள் இருக்கும் பூச்சி போன்ற ஜந்துவை உண்பதற்கு உபயோகிப்பார்கள். கிளிஞ்சல்தான் விலை உயர்ந்த “மதர் ஆஃப் பெர்ள்" எனும் பொருளாகின்றது. இதனை மர நாற்காலிகள, மேஜைகள், மரப் பெட்டிகள், தட்டுக்கள் ஆகியவற்றில் பொருத்தி அழகிய வேலைப்பாடுடன் கூடிய கைவினைப் பொருள்களாக விற்கின்றார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் மதர் ஆஃப பெர்ள் பதித்த கைவினைப் பொருட்கள் அதிகம். கடலில் சேகரிக்கப் பெறும் முத்துக்கள் இயற்கையானவை. ஜப்பான் நாட்டில் முத்துக்கள் அதிகமாக விளைகின்றன. இந்தியாவில் தூத்துக்குடியில மட்டுமே முத்து மிகவும் பிரபலமாகவும் அமோகமாகவும் விளைகின்றது. ஜப்பான் நாட்டில் செயற்கையாகவும் முத்து உற்பத்தி செய்யப் பெறுகின்றன. முத்து சிப்பிகளுக்குள் மழை நீரை ஊசி வழியாக (inject) பொருத்தியபின் அவற்றை ஆற்றிலும் கடலிலும் கொண்டு விட்டு விடுகின்றனர். பல மாதங்களுக்குப் பிறகு அவற்றைச் சேகரித்து முத்துக்களை எடுக்கின்றனர். இவை (cultured pearls) செயற்கையாக வளர்க்கப் பெற்ற முத்துக்கள் ஆவன. "ரிவர் வாட்டர் பெர்ள்ஸ்" (River Water Pearls) என்றும் இவற்றை அழைப்பர். இயற்கையான முத்துக்கள் உருண்டை வடிவம் கொண்டவையாக இருக்கும் தருணத்தில் செயற்கை முறையில் தயாரித்த முத்துக்கள் அரிசி போலும், கோதுமை போலும் வடிவம் கொண்டவையாக உள்ளன. இயற்கையில் முத்து வெண்மை நிறத்தினது. "பிங்க் பெர்ள்" என்ற ரோஜா நிறத்தில் உள்ள முத்து மிக மிக விலை உயர்ந்தது. இது மிகவும் அரிதான வகை. இவை தவிர செயற்கையாக நிறம் மாற்றப்பட்ட சாம்பல் நிற முத்துக்கள் (‘Grey Pearls’) மற்றும் நீல நிற முத்துக்கள் (Blue Pearls) ஆகியவை பிரபலமான வகைகள்.

  முத்தின் இயற்கையான வெண்மை நிறத்தைப் பாராட்டும் வகையில்தான் முத்து போன்ற பற்கள் என்று வெண்மையான வரிசையான பற்களைக் குறிப்பிடுகின்றோம். கையெழுத்து அழகாக அமைந்திருந்தால் “அவருக்கு முத்து முத்தான எழுத்து என்கின்றோம். உயர்ந்த செய்தியை "முத்தான செய்தி" என்கின்றோம். "நெற்றியில் வியர்வை முத்து முத்தாக வடிந்தது" என்கின்றோம். "முத்தான பேச்சு" என்பது அன்பும் கனிவும் கலந்த வார்த்தைகளைக் குறிப்பன.

  “சோழநாடு சோறுடத்து, சேர நாடு தந்தமுடத்து, பாண்டியநாடு முத்துடத்து என்று மூவேந்தர்களின் சிறப்பினக் கூறும் தமிழ் இலக்கியங்கள் பாண்டிய நாட்டின் செழிப்பை அதன் முத்துக்களை முதலில் கூறி குறிப்பிடுவன. இதன் காரணமாகவே கண்ணகி கோவலன் கள்வனல்ல என்று நிரூபிக்க முற்பட்டபோது அவள் உடைத்த அவளது சிலம்பிலிருந்து மாணிக்கக் கற்கள் உதிர்ந்தன. பாண்டிமாதேவியின் சிலம்பிலிருந்து உதிர்ந்தது முத்துக்கள். கர்ணன் கதை கூறும்போது கர்ணனும் அவனது நெருங்கிய தோழனான துரியோதனனின் மனைவி பானுமதியும் பகடை ஆடிக் கொண்டிருக்க, துரியோதனன் வருவதைப் பார்த்து அவன் மனைவி பானுமதி எழுந்து செல்ல முற்பட, இதனைப் பாராது கர்ணன் அவளை, "எங்கே போகிறாய், தோற்றுவிட்டதால் ஓடுகிறாயா" என்று கூறி அவள் இடையில் இருக்கும் முத்து மாலையப் பிடித்து இழுக்க, முத்துக்கள் சிதறி தரையெல்லாம் உருண்டு ஓட உள்ளே வந்த துரியோதனன் நண்பன் மீதும் மனவி மீதும் சிறிம் கூட சந்தேகமற்ற நிலமையில், "சிதறி விழுந்த முத்துக்களைக் கையில் எடுக்கவா? கோர்க்கவா? என்று கூறியது நம் இலக்கியத்தில் முத்தான ஒரு நிகழ்ச்சி.

  வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாத ஸ்வாமி தையல்நாயகி அம்மையின் தவப்புதல்வனான முருகனின் பெயர் செல்வ முத்துக்குமாரசாமி. இவரை இங்கு “முத்தையா என்றழைப்பார்கள். நகரத்தார் சமூகத்தினர் வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் பல ஆண்டு காலங்களாக கால்நடைப் பயணமாகவே சென்று வழிபட்டு வருகின்றனர். இவர்கள் சமூகத்தில் முத்தையா எனும் பெயர் மிகவும் பிரபலம். அரசர் அண்ணாமலை செட்டியாரின் மகன் ராஜா ஸர் முத்தையா செட்டியார், அவரது சிறிய தந்தையின் மகன் ஸர் எம்.ஸி.டி.முத்தையா செட்டியார், ராஜா ஸர் முத்தையாவின் மகன் குமாரராஜா எம்.ஏ.எம்.முத்தையா, TI சைக்கிள்ஸ் குழுமத்தின் நிறுவனர் அமரர் எம்.எம்.முத்தையா, பிரபல சரித்திர எழுத்தாளர் எஸ்.முத்தையா, ஸாலார்ஜங் மன்னன் சேகரித்ததைப் போல அரிய நூல்கள் ஒருவரே சேகரித்துப் பெயர் பெற்றவர் ரோஜா முத்தையா. கவியரசராகத் திகழ்ந்தவர் கண்ணதாசன் இவர் கொண்ட இயற்பெயர் முத்தையா, தொழில் அதிபராகவும் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் புகழ் அடைந்தவர் ஏ.ஸி.முத்தையா. அதே கிரிக்கெட்டில் வேகப் பந்து வீச்சாளர் முரளீதரனின் முதற்பெயர் முத்தையா. உலகெல்லாம் நம் நாட்டுக் கோவில்களை நிர்மாணித்தவர் ஸ்தபதி முத்தையா. இன்னும் எத்தனை எத்தனயோ முத்தையாக்கள்!!

  முத்துக்களைப் பற்றி எத்தனையோ செய்திகள் இருக்கும் போதிலும் அவற்றைப் பற்றிய முத்தான செய்திகள் மூன்றினை மட்டும் கூற விழைகின்றேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய "முத்துச் சிப்பி கடல் அலைக்கு மேலே வந்து மழைத்துளிக்காகக் காத்து நிற்கின்றது. மழைத்துளி அதன் வயிற்றில் விழுந்தவுடன் ஆழ்கடலுக்குள் சென்று விடுகின்றது. அதன் பின் அது யார் கண்களிலும் தென்படுவதில்லை. தனிமையில் அது முத்தினை உற்பத்தி செய்கின்றது. முழுமையாக முத்து உண்டான பின்புதான் அது வெளியில் சேகரித்துக் கொண்டு வரப்படுகின்றது. அதனின் உள்ளிருந்து முத்து நீக்கி எடுக்கப்படுகின்றது. இதில் இருந்து நமக்கு ஒரு பாடம் கற்பிக்கப்படுகின்றது. நல்ல செய்திகளை நாம் கிரகித்துக் கொள்ளக் கற்க வேண்டும். அதனைக் கிரஹித்துக் கொண்டபின் கூட்டத்தைவிட்டு விலகி வெகு தொலைவில் சென்று விடவேண்டும். தனிமையில் அதனை அசை போட்டு முத்துப் போன்ற முடிவுகளைக் கூறவும் செயற்படுத்தவும் விளையவேண்டும்".

  இரண்டாவது செய்தி, காஞ்சி காமகோடி மடத்தில் சமஸ்கிருத விற்பன்னராகத் திகழும் திரு ராமகிருஷ்ண தீட்சிதர் அவர்கள் கூறியது. "மழைத்துளி எல்லா இடத்திலும் தான் விழுகின்றது. அது விழும் இடத்தைப் பொறுத்துத்தான் அதன் வடிவமும் வாழ்வும் அமைகின்றது. பழுக்கக் காய்ச்சிய இரும்பின் மீது விழுந்தால் சுரீரென்று காய்ந்து விடுகின்றது. பாராங்கல்லின் மீது விழுந்தால் காய்ந்து காற்றோடு காற்றாகின்றது. மண்ணில் விழுந்தால் சூட்டில் உறிஞ்சப்படுகின்றது. கடல் நீரில் விழுந்தால் நீரோடு நீராகி கலக்கின்றது. தாமரை இலையின் மீது விழுந்தால் முத்துப்போல் காட்சி தருகின்றது. ஆனால் முத்துச் சிப்பியின் வயிற்றில் விழுந்தால் முத்தாகவே மாறிவிடுகின்றது. எல்லாம் சங்கமத்தைப் பொறுத்தும் சென்றடையும் இடத்தைப் பொறுத்துமே அமைகின்றது" என்பார்.

  மூன்றாவது செய்தி. தமிழ் அறிஞர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் கூறியது!!. மத்திய நிதி மந்திரி திரு ப.சிதம்பரம் மற்றும் அவரது தமையனார் இலக்கியச் சிந்தனை திரு ப.லெட்சுமணன் அவர்கள் ஆகிய இருவரும் என் கணவர் டாக்டர் திரு ஏ.ஸி.முத்தையா அவர்களின் அத்தை மகன்கள். ஒரு முறை ப.லெட்சுமணன் அவர்கள் ராஜபாளையத்தில் அமைந்துள்ள அவர்கள கற்பகாம்பாள் மில்ஸ் ஆண்டு விழாவிற்கு எங்களைத் தலைமை ஏற்க அழைத்து இருந்தார்கள் அவரது பேச்சில் திரு ஏ.ஸி.எம். அவர்கள் நட்பப் பற்றிக் குறிப்பிட்ட திரு லெட்சுமணன் அவர்கள் "என் நிழல் மீது வெயில் பட்டாலும் கூட அவர் தாங்கமாட்டார் என்று கூறினார். A.C.M.அவர்கள் பதில் கூறும்போது "அவர் ஏதேதோ சொல்கிறார். எனக்கு அவரைப் போல் கவிதை எல்லாம் வராது. நான் சொல்லப் போனால் அது ஏதோ பூர்வ ஜன்ம பந்தம் என்பேன்" என்றார். அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் பேசும்போது கூறினார். "நட்பைப் பற்றி இருவரும் சொன்னார்கள். ஒருவர் கவிதை நடையில் கூறினார். மற்றொருவர் உணர்ச்சி மேலோங்கக் கூறினார். என்னைக் கேட்டால் நட்பு பற்றிய ஒரு குறிப்புதான் என் மனதில் தோன்றுகிறது. தூத்துக்குடியில் முத்துக் குளிப்பது அன்றாடம் காணும் ஒரு காட்சி. ஒருவன் கடலுக்குள் முங்கி முங்கி முத்தெடுப்பான். அவன் இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டியிருப்பான். அதன மறுநுனியை கரையில் இருக்கும் ஒருவன் பிடித்துக் கொண்டிருப்பான். முத்துக் குளிப்பவனுக்கு மூச்சுத் திணறினால் அந்தக் கயிற்றைச் சுண்டிக் காண்பிப்பான். உடனே கரையில் இருப்பவன் அவனைக் கயிற்றால் இழுத்துக் கரை சேர்ப்பான். முத்துக் குளிப்பவன் உயிரே கரையில் இருப்பவன் கையில்தான் இருக்கும்!!. சாதாரணமாகக் கயிற்றப் பிடித்திருப்பவன் முத்துக் குளிப்பவனின் மைத்துனனாகத்தான் இருப்பான். அவனுக்கு அந்தக் கயிறு வெறும் கயிறாக இல்லாமல் தன் சகோதரியின் தாலிக் கயிறாகவே தோன்றும்!!. தூத்துக்குடிக்கும் முத்தையாவுக்கும் நெருக்கம் அதிகம் உண்டு. தூத்துக்குடிக்கும் முத்துக் குளிப்பதற்கும் நெருக்கம் அதிகம் உண்டு. அத்த மகன் மாமன் மகன் என்ற வகையில் மைத்துனர்களான லெட்சுமணனுக்கும் முத்தையாவிற்கும் நெருக்கம் அதிகம் உண்டு. மூன்று காரணங்களுக்காகவேதான் இந்த முத்துக் குளிக்கும் உதாரணத்தைக் கூறினேன் என்று அ.ச. அவர்கள் கூறியபோது உணர்ச்சி வசப்பட்ட எங்கள் கண்களிலிருந்து முத்து முத்தாக நீர் வடிந்தது!!.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com