• என் நெஞ்சினில் பூத்த பூக்கள்!

  மனிதனின் வாழ்க்கையில் பூக்கள் பின்னிப் பிணைந்து நறுமணம் வீசுகின்றன. அவன் பிறந்த நாள் முதல் அவன் இறக்கும் நாள் வரை பூக்கள் அவனது அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமானவை ஆகின்றன, குழந்தையைத் தொட்டிலிடும் பொழுது தொட்டிலைப் பூ அலங்கரிக்கின்றது. காது குத்து விழாவிற்கும், பெயர் சூட்டும் விழாவிற்கும் தோரணமாகின்றது. பெண்கள் மலரும்போது மாலையாகின்றது. திருமணத்திற்குக் கண்டசரமாகின்றது.
  விழாக்களுக்கு வரும் விருந்தினரின் கூந்தலில் அழகுற அமர்கின்றது. ’ பூச்சூடல் ‘ என்றே தாய்மை அடைந்த பெண்களுக்கு விழா அமைக்கின்றனர். கோவில்களில் புஷ்பாஞ்சலி என்றும் , கிராமங்களில் பூப்பாவாடை, பூச்சொரியல் என்றும் விழா எடுக்கின்றனர். இறுதியில் மனிதன் பூவுலகைவிட்டுச் செல்லும்போதும் பூக்கள் தேவையாகின்றன. அவன் அன்றாடம் பூவைக் கொண்டு செய்வதே பூசையானது என்றும் சொல்வர்.

  இப்படிப் பூக்கள் நமக்கு இன்றியமையாப் பொருள் ஆகின்றன, என்றாலும் எத்தனையோ வகைப்பூக்களில் ஒரு சில நம் நெஞ்சைத் தொடுகின்றன. என் நெஞ்சினில் பூத்த பூக்கள் சிலவற்றைப் பற்றித்தான் கூற முனைகின்றேன். ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு சில பூக்கள் என் நினைவை விட்டு நீங்கவே மாட்டா. அந்தப் பட்டியலில் முதலாவது குறிஞ்சிப் பூ. மலையிலும், மலையைச் சார்ந்த இடங்களிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூதான் குறிஞ்சிப்பூ. இள நீல நிறத்தில் குத்துச் செடிகளில் கம்பளம் விரித்தாற்போல் பூத்துக் குலுங்கும்! உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் பூத்திருக்கும் அழகைப் பத்திரிகைகளிலும், நூல்களிலும் நாம் காணலாம். கொடைக்கானலில் இப்பூ பூக்கும் இடத்தில் குறிஞ்சியாண்டவர் கோவில் என்றே முருகனுக்குக் கோவில் இருக்கின்றது. இவ்வரிதான பூவைப் பற்றித் தமிழ் இலக்கியம் என்ன கூறுகின்றது என்று பார்க்கலாம்.

  "நிலத்திலும் பெரிதே வானிலும் உயர்ந்தன்று
  நீரிலும் ஆரளவின்றே சாரல்
  கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
  பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
  ."

  என்று குறுந்தொகையில் ஒரு பாடல் அமைகின்றது. தலைவனின் காதலைக் குறிப்பிடும்போது தலைவி தனது தோழியிடம் குறிஞ்சிப் பூவின் தேனைச் சேர்க்கும் நாட்டினின்று வரும் அவனது நட்பு, அன்பு வானிலும் பெரிது என்றும், நிலத்திலும் விரிவானது என்றும், கடலினும் ஆழமானது என்றும் குறிப்பிடுகின்றாள். குறிஞ்சிப்பூ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் பூப்பதால் அரிதான பொருள். குறிஞ்சித் தேன் என்பது அரிதின் அரிது. அதனைச் சேர்க்கும் நாடனது நட்பு என்னும் போது அவனது அன்பு எத்தனை உயரியது என்றும் அவள் தன் தோழிக்குக் கூறுவதாக அமைந்துள்ள பாட்டில் குறிப்பிடும் குறிஞ்சிப்பூ என் நெஞ்சில் பூத்த முதல் பூ.

  வேப்பம்பூ:

  தேன் என்று கூறியதும் எனக்கு நினைவில் வந்தது ஒரு பாடல் வரி. "வேப்பம்பூவிலும் தேனிருக்கலாம், அதுவும் கூடத் தித்திக்கலாம்”. சேற்றிலும் கூட அழகான பூ மலரலாம். கசப்பான பூவென்பதால் அதில் இனிப்பான தேன் இல்லாமல் போகவேண்டும் என்றில்லை என்று கூறுகின்றது பாடல் வரி.

  பாதிரி, மாம்பூ, பலா:

  பலாமரம் பூப்பதே கண்ணிற்குத் தெரியாது. திடீரென்று ஒரு பெரிய பிஞ்சு தெரியும். அதுவே பிரம்மாண்டமான பழமாகி, முள் போன்ற தோலினிடையே சுவையான சுளைகள் இருக்கும். மாம்பூ பூப்பது கண்ணிற்குத் தெரியும். பூ பிஞ்சாகி, காய் ஆகி, அது பழுத்து விழுவதைப் படிப்படியாகப் பார்க்கலாம். பாதிரி மரம் அழகான
  இளஞ்சிவப்பு நிறப் பூக்களைக் கொண்டது. இப்பூக்கள் அழகாகப் பூத்துக் குலுங்குவன. ஆனால் காய்க்கவே காய்க்காது. இம்மூன்று பூக்களையும் ஒப்பிட்டுப் பேசினார் டாக்டர் ஸ்ரீவத்ஸன் என்பவர். சிலர் பாதிரிப் பூக்களைப் போன்றவர்கள். பேச்சு மட்டும் பேசுவர் செயலில் எதுவும் இருக்காது. சிலர் மாமரம் போன்றவர். ஓரளவு செயல், ஓரளவு செயல் இருக்கும் . மாம்பூ காயாகிக் கனிவது போல் பேச்சுக்குச் செயல் வடிவம் கொடுப்பார்கள். ஒரு சிலர் மட்டும் பலாப்பூ போன்றவர்கள். பூ தெரியாதது போல் பேச்சே இருக்காது. ஆனால், திடீரென்று பெரிய பழம் பழுப்பது போல் பெரிய பெரிய காரியங்களைச் செய்வார்கள்.

  கொன்றைப் பூ, செண்பகப்பூ:
  அபிராமி அந்தாதியின் காப்புப் பாடலில் பட்டர்,

  "தாரமர் கொன்றையும் சண்பக மாலையும்
  சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை
  மைந்தனே”

  என்று பாடுகின்றார்.

  இப்பாடலில் அர்த்தநாரீஸ கோலத்தைக் குறிப்பிடுகின்றார். சிவ பாகம் கொன்றை மலர் மாலையையும் உமை பாகம் செண்பக மாலையையும் அணிந்திருப்பதாகக் கூறுகின்றார். கொன்றை மலர் சிவனுக்கே உகந்தது. இதனை ‘சொர்ண புஷ்பம்’ என்றும் கூறுவர். இப்பூவைக் கொண்டு வழிப்பட்டால் பொன்னை வைத்து வணங்கிய பலன் கிடைக்கும் என்பர். செண்பக மலர் தேவிக்கு உகந்த பூ. நறுமணம் கமழும் அழகான பூ, இவ்விரண்டு பூக்களுக்கும் ஓர் உயர்வு உண்டு. இரண்டும் வண்டு மொய்க்காத பூக்கள் என்பர். பக்தி இதன் காரணத்தை இறைவன் இறைவிக்கே மலர்ந்தது என்பதால் தான் வண்டு மொய்க்காத பூக்கள் என்று கூறினாலும் விஞ்ஞானம் கூறும் காரணம் இப்பூக்களிலிருந்து ஒருவகை பிசின் போன்ற திரவம் வருவதால் இப்பூக்களை வண்டு மொய்ப்பதில்லை என்று கூறும்.

  மாதுளம்பூ:

  அழகான சிவந்த நிறம் கொண்ட இப்பூவின் நிறத்தை அன்னைக்கு ஒப்பிட்டுக் கூறும் வழக்கம் பக்தி இலக்கியத்தில் உண்டு. மாதுளம் பூவிற்கு ஒரு சிறப்புண்டு. பூவிலிருந்து பழம் வருவதில்லை. அதன் காம்பிலிருந்துதான் பழம்
  உற்பத்தியாகின்றது. பிஞ்சு உறுதியானவுடன் மாதுளம்பூ சிறிதும் சிதறாமல் முழுவதுமாகத் தனித்துப் பிரிந்து விழுந்து விடுகின்றது. தான் பெற்ற பிஞ்சு உறுதியான பின்பே அதனின்று பிரித்துவிடும் பூவிற்கு ஜகத்திற்கே தாயான தேவியை ஒப்பிடுவதில் வியப்பென்ன இருக்கின்றது?

  நாகலிங்கப்பூ:

  நடுவில் சிவலிங்கம் போன்ற வடிவம்! அதன்மீது படம் எடுத்தாற்போல் நாகவடிவம்! சுற்றிலும் தாமரை இதழ்கள் போன்ற இதழ்கள்! அதீத அழகும், மணமும் கொண்ட இப்பூ மற்ற பூக்களைப் போல் கிளையில் பூப்பதில்லை. மரத்தின் அடிப்பாகத்தில் மட்டுமே பூக்கின்றன. லிங்க வடிவம் கொண்டதால் இப்பூ அர்ச்சனைக்கு உகந்ததல்ல. அலங்காரத்திற்கு மட்டுமே உகந்தது.

  மல்லிகை:

  பல வகையுண்டு. முல்லை, ஜாதி. இருவாட்சி, சந்தன முல்லை, நித்திய மல்லி, ராமர் பாணம், குண்டு மல்லி, அடுக்கு மல்லி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பளிச்சென்ற வெள்ளை நிறத்தாலும் மணத்தாலும் கவர்ச்சியான மலராகின்றது. கவர்ச்சியான, அழகான பெண்களை என் நெஞ்சில் பூக்கச் செய்யும் பூ மல்லிகை.

  தாமரை:

  மலர்களிலேயே உயர்வானதாகக் கருதப்படுவது. “ஊர் என்பது உறையூரே, பூ என்பது பொறி வாழ் பூவே” என்பது தமிழ் இலக்கியம். அத்தனைத் தெய்வ வடிவங்களின் கைகளிலும் இடம் பெறும் இப்பூ, லட்சுமி, சரஸ்வதி, பிரம்மா என்ற தெய்வங்களின் இருப்பிடமாகவும் ஆகின்றது. தெய்வத்தோடு அதிகத் தொடர்பு கொண்டமையால் தானோ என்னவோ இம்மலர் ஒரு துறவியைப் போல் உள்ளது. நீரில் மலர்ந்தாலும் நீரோடு உறவாடுவதில்லை. தனித்து நீரின் மேலேயே நிற்கும் இதன் இலை மீதும் நீர்த் திவலைகள் ஒட்டுவதில்லை. சூரியனின் வருகை மட்டுமே மலரச் செய்யும் தாமரையின் கற்பு நெறி என்னை வியப்பிலாழ்த்தும். என் நெஞ்சினில் பூத்த உயர்வான பூ தாமரை.

  மனோரஞ்சிதம்:

  நிறம் பச்சை! தோற்றம் இலை போன்று! ஆனால் மணமோ மனதை ரமிக்கச் செய்யும் பூ. இலையோடு இலையாகப் பார்க்க வேறுபாடு இல்லாவிடினும் பூவை நுகரும்போது நாம் என்ன மணத்தை மனத்தில் நினைக்கின்றோமோ அதனைத் தரவல்லது. ஒரு சிலர் பிறரிடமிருந்து மாறுபட்டுத் தோன்றாவிடினும் அவர்களது குணங்கள் உயர்வாக (Out Standing) இருக்கும். என் மனதில் பூத்த மனோரஞ்சிதம். தற்போதைய தஞ்சை மன்னர் பாபாஜி ராஜா போன்ஸ்லே! பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும் சாதாரணக் குடிமகன் போலவும் தோன்றினாலும் அவரது பாரம்பரிய அரச குணங்கள் அவரது கட்டுப்பாட்டையும் மீறி மிளிர்கின்றன.

  பாரிஜாதம்:

  பவள மல்லி என்றும் அழைக்கப் பெறும் பூ. சுவாமி அம்பாளின் பிரியாக்கோலம் கூறுவது போல் பவள நிறக் காம்பும், வெள்ளை இதழ்களும் கொண்டது! பால் போன்ற நறுமணம்! இப்பூவைப் பறிக்ககத் தேவையில்லை. தானே மாலையில் உதிர்ந்து விழும்.

  என் நெஞ்சினில் பூத்த பூக்களையெல்லாம் கூறிவிட்டேன். பட்டியலைப் பார்க்கும் போது மறைந்த எனது தமிழாசிரியர் எனது எம்.ஃபில்., பட்டப்படிப்பிற்கு மேற்பார்வையாளர் டாக்டர் திரு.சி. பாலசுப்பிரமணியம் கூறியது நினைவிற்கு வருகின்ற்து. யாரோ ஒரு மாணவர் எம்.ஃபில்., பட்டப்படிப்பிற்கு ஆய்வேடு கொடுக்க வேண்டி ‘மலர்கள்’ என்ற தலைப்பில் இருக்கும் அத்தனைப் பூக்களின் பெயர்களையும் பட்டியலிட்டு ‘இதுதான் ஆய்வேடு’ என்று கொடுத்துவிட்டாராம். டாக்டர் சி.பா. மட்டும் இருந்திருந்தால் "அதைவிட இது தேவலை அம்மா” என்றிருப்பார்.

  இத்தனை நேரம் எனது கட்டுரையைப் பொறுமையாகப் படித்த உங்களுக்கு ஒரு ஜோக். எனக்குத் தெரிந்த ஒரு நகைச்சுவை மிக்க நண்பர் வெளியூரிலிருந்து வந்த வெள்ளைக்காரரை வெளியே கூட்டிச் சென்றாராம். வீதியெல்லாம் ரோஸும், வெள்ளை நிறமும் கொண்டு பூத்திருக்குமே கல்லறைப்பூ என்பார்கள். அதனைப் பார்த்து “ அடடே இது ரொம்ப அழகாக இருக்கிறதே, இதன் தாவரவியல் பெயர் (Botanical name) என்ன?” என்றாராம். உடனே நண்பர் ‘ஓ. அதுவா... அதுதான் ரோடு ஓரம் சைடு ஓரம்” (Road oram Side oram) என்றாராம். இது எப்படி இருக்கு?

  புத்தாண்டில் உங்கள் வழி எல்லாம் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கட்டும்!! வாழ்த்துக்கள்.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com