• ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள்

  எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்களின் இந்நூலுக்கு “அபிராமி மாத இதழில் அறிமுகம் கேட்டிருந்தார்கள். யாருக்கு யார் யாரை அறிமுகப்படுத்துவது-தகுதி எனக்கு உளதா? “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன் தாயே என்று அன்னை அபிராமியின் அருளை எப்பொழுதும் போல் இப்பொழுதும் நன்றிப் பெருக்கோடு நினைக்கின்றேன். நினைத்து உருகி எழுகின்றேன்!!

  அருளாளர் என்பவர் யார்? யார் ஒருவரின் சன்னிதியில் நாம் நம்மை மறந்து நம் கவலைகளை மறந்து அந்தப் புனித ஆத்மாவுடன் ஒன்றிப் போகின்றோமோ அவர்தான் அருளாளர். பாரத தேசத்தில் எத்தனையோ அருளாளர்கள் பிறந்து வாழந்திருக்கின்றனர். அப்படி வாழந்த அருளாளர்களிடையே நம் காலத்தில் நம்முடன் வாழ்ந்தவர் காஞ்சி காமகோடி மடத்தின் 68வது பீடாதிபதியாகத் திகழ்ந்த மஹா சுவாமிகள் என்று எல்லோராலும் அழைக்கப் பெற்ற பூஜ்யஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆவார். இப்புனிதாத்மாவின் அருளைப் பற்றி பல நூல்கள் வெளி வந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை படிப்போரின் மெய்சிலிர்க்கும் வகையாக மஹாஸ்வாமிகளின் அருளைப் பற்றிக் கூறியிருக்கின்றன. பாடுபொருள் (Topic) உயர்வானதாக அமைந்தால் நூலின் தரமும் உயர்வாக அமைவது இயல்பு. இவ்வரிசையில் தற்போது வெளியாகி உலாவரும் நூல் எழுத்தாளர் திரு.எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்களை “ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள்” என்ற பெயர் கொண்ட நூல். நர்மதா பதிப்பகத்தின் வெளியீடான இந்நூல் முப்பத்து மூன்று அத்தியாயங்களில் முப்பத்து மூன்று பாக்கியசாலிகளுக்கு மஹாசுவாமிகளிடம் கிடைத்த தரிசன அனுபவங்கள் பற்றிக் கூறுகின்றது.

  நூலைக் கையில் எடுத்தால் கீழே வைக்க இயலாது!! அத்தனை உயிரோட்டம். எப்பொழுதும் அனுபவங்கள் மட்டுமே ஆழ்ந்த பக்தியையும், தெய்வ நம்பிக்கையையும் அதிகரிக்கும் வல்லமை பெற்றவையாகின்றன. இந்நூலில் அமைந்திருக்கும் செய்திகள் அனைத்துமே ஒவ்வொருவரின் அனுபவங்கள். இதன் காரணமாகவே நூலின் சுவாரஸ்யம் முதல் அத்தியாயத்தில் இருந்து கடைசி அத்தியாயம் வரை சற்றும் குறையாமல் ஒரே தரத்தில் அமைந்திருக்கின்ற என்றால் அது மிகையாகாது!! தரிசன அனுபவம் பெற்ற பாக்கியசாலிகள் வரிசையில் பாரத ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், மேஜர் ஜெனரல் கரியப்பா, ரிசர்வ் வங்கித் தலைவர் எச்.வி.ஆர்.ஐயங்கார், கவிஞர்.கண்ணதாசன், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ஆங்கில தத்துவப் பேராசிரியர் பால் பிரண்டன், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷ¤தர், ஸ்வீடன் நாட்டு ராஜமாதா ஃப்டெரிகா ªஉறலானஸ், வழக்கறிஞர் பல்கிவாலா, எழுத்தாளர்கள் ரா.கணபதி, ஜெயகாந்தன், மணியன், கவிஞர் வாலி, ஓவியர் சில்பி, தொழில் அதிபர் ஏ.சி.முத்தையா போன்றவர்கள்.

  கவிஞர் கண்ணதாசனுடன் சென்ற அவரது மனைவி வள்ளியம்மை கூறுகிறார். “சுவாமிகள் கவிஞரிடம் ‘நீ நிறைய எழுறதா எல்லாரும் சொல்றா. உன்னைப் போன்றவர்கள் தத்துவம் எனும் கசப்பான மருந்தை அனுபவம் எனும் தேனில் குழைத்துக் கொடுத்தால் மக்கள் அதை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறினார். பெரியவர்களின் ஆசியுடனும், காமாட்சியின் அருளோடும் கவிஞர் கண்ணனின் தாசனாகவே மாறி கீதை முதல் உபநிடதங்கள் வரை எல்லாவற்றிலும் உள்ள தத்துவ உண்மைகளை எளிமையாக எடுத்துச் சொன்னார் என்று

  மஹாசுவாமிகள் வாரியார் சுவாமிகளைத் தரையில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டாம் என்று கூறியதாகவும், அதற்கு அவர் காரணம் கேட்டதற்கு “நீங்கள் மார்பில் பூஜைக்குரிய சிவலிங்கத்தை அணிந்திருக்கின்றீர்கள். தரையில் விழுந்து வணங்கினால் அது பூமியில் படும். அவ்விதம் செய்யக்கூடாது என்றாராம்.

  மஹசுவாமிகளைப் பற்றி பால்பிரண்டன் கூறும் சில கூற்றுகள். “அவருடய அமைதி தம்பும் விழிகளைப் பார்க்கும் போது கடவுளின் கருணையை நாம் உணரலாம். அத்தகையதோர் அருள் ஒளி ததும்பும் பார்வையை நான் வேறெங்கும் கண்டதில்லை!!” மஹா சுவாமிகளின் தெய்வீகம் பொருந்திய பரந்த மனப்பான்மயை, எளிமை, பொறுமை, அறிவு ஆற்றல், தவ வலிமை, தீர்க்க தரிசனம் என்று பல உயர்ந்த குணங்களைக் கண்டதாக அனுபவம் பெற்ற பாக்கியசாலிகள் கூறுகின்றார்கள். எல்லாவற்றையும் நானேக் கூறிவிட்டால் எப்படி? நீங்கள் படித்து, உணர்ந்து அனுபவிக்க வேண்டாமா? மஹாசுவாமிகளின் அழகான படத்துடன் கூடிய மேல் அட்டை!! உள் அட்டையில் “உறவுகள் மேம்பட சில அறிவுரைகள் மற்றும் “இந்த இனிய என்றும் பயன் தரும் நூலைப் பரிசாக வழங்குவதில் பெருமகிழ்வு கொள்ளும் தங்கள் அன்புள்ள------------------“ என்ற அழகான பரிசளிப்பு வாசகத்தையும் கொண்ட உயர்ந்த நூல். விலை ரூபாய் 35 மட்டுமே. நூலின் உள்ளே இருக்கும் செய்திகளோ விலை மதிப்பே இல்லை இல்லாத பொக்கிஷங்கள். வாங்கிப் படித்துப் பாருங்கள். நான் சொன்ன உண்மை என்று தெரியும்!!

  எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள “ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள்" என்னும் நூலுக்கு அறிமுக உரை எழுதும்படி அபிராமி இதழ் ஆசிரியர் கேட்டுக் கொண்டார்கள். அதற்கேற்ப என்னுடய அறிமுக உரையினை எழுதி அனுப்பியுள்ளேன். அதனைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.

  பல வருடங்களுக்கு முன்பு தினமணி நாளிதழில், நானும் எனது கணவரும் மஹா சுவாமிகளிடம் தரிசன அனுபவம் பெற்ற நிகழ்ச்சியினைப் பற்றி எழுதியிருந்தேன். அந்த அனுபவத்தினை மறுபடியும், அபிராமி இதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com