• பழுத்த வெள்ளரிப் பழம்போல...

    பூவுலகம் தோன்றும் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது மரணம். பிறப்பது அனைத்தும் இறக்கத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வு என்று உணர்த்தும் மரணத்தை எண்ணி அஞ்சாத உயிர்களும் இல்லை, இவ்வச்சத்தைப் போக்கவல்லது இறையருள் ஒன்றுதான். இதனையே அபிராமி பட்டர்
    வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்

    செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
    அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
    வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே

    அபிராமி அந்தாதி: 18-ஆம் பாடல்

    என்று பாடுகின்றார். “மரணம் என்னை நெருங்குவதற்கு அடையாளமாக, கொடுமை நிறைந்த காலன் தனது பாசக்கயிற்றை வீசி எனைக் கொண்டு செல்ல முயலும்பொழுது, அபிராமி! நீ உன் கணவனான சிவபெருமானின் வாம பாகத்தை வவ்வியபடி மகிழ்ச்சி ததும்பும் திருமணக் கோலத்தில் தோன்றி என்னை ஆண்டு கொண்டு அருள வேண்டும்” என்கின்றார்.

    மரணம் என்பது தவிர்க்க இயலாத நிகழ்வு. ஆனால் மரண பயத்தைப் போக்கவல்லது இறையுணர்வு. மரண பயம் அல்லது ம்ருத்யு பயத்தைப் போக்குவதாலேயே தேவி திரிபுர சுந்தரிக்கு லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸர்வ ம்ருத்யு நிவாரணி” எனும் நாமம் உள்ளது. மார்க்கண்டேய முனிவருக்கு ம்ருத்யு பயத்தைப் போக்கி இறைவன் அருள்பாலித்த க்ஷேத்ரம்தான் திருக்கடவூர் எனும் தலம். இதனை மஹாம்ருத்யுஞ்ஜய க்ஷேத்ரம் என்றும் கூறுவர்.

    ம்ருகண்டு முனிவருக்குப் பல காலம் குழந்தை இல்லாமல் அமிர்தகவெங்கடேஸ்வரப் பெருமானை வேண்டித் தவம் புரிந்தார். இறைவன் முனிவர் முன் தோன்றி “உமக்குப் பிள்ளை வரம் உண்டாகும். பதினாறு ஆண்டுகளே வாழும் உயர்ந்த புத்திசாலியான பிள்ளை வேண்டுமா? அல்லது நூறு ஆண்டு வாழக்கூடிய புத்திசாலியில்லாத பிள்ளை வேண்டுமா?” என்று கேட்க, ம்ருகண்டு முனிவரும்,”பதினாறு ஆண்டுகளே வாழக்கூடிய உயர்ந்த புத்திசாலியான பிள்ளையே வேண்டும்” என்றார். புத்திசாலியான பிள்ளையென்றால் அதுவே தனது பக்தியாலும், புத்தியாலும் தனது ஆயுளை வளர்த்துக் கொள்ளும் என்ற எண்ணத்தினாலேயே அவ்வாறு வேண்டினார்.

    அவருக்கு ஆண் குழ்ந்தை பிறக்க, அதற்கு மார்க்கண்டேயர் என்று பெயர் சூட்டி முறையாக வளத்தார். மார்க்கண்டேயர் அமிர்தகடேஸ்வரர் பால் அதிக பக்தியும் ஈடுபாடும் கொண்டு வளர்ந்தார்.

    அவருக்குப் பதினாறு ஆண்டுகள் முடியும்போது, காலன் அவரை அழைத்துச் செல்ல வருகின்றான். மார்க்கண்டேயர் மிரண்டு அமிர்தகடேஸ்வரரை இறுகக் கட்டிக் கொள்கின்றார். காலன் தனது பாசக்கயிற்றை அவர் மீது வீச, அது அமிர்தகடேஸ்வரர் என்னும் சிவலிங்கத்தையும் சேர்ததுப் பிணைக்கின்றது. இதனால் சினம் கொண்டு சிவபெருமான் லிங்கத்தைப் பிளந்து கொண்டு தோன்றிக் காலனைத் தனது இடது காலால் உதைத்து, சம்ஹாரம் செய்கின்றார். இதன் காரணத்தால் இறைவன் கால சம்ஹார மூர்த்தியாகின்றார். மார்க்கண்டேயரைக் காத்து அவரைச் சிரஞ்சீவியாக்குகின்றார். மார்க்கண்டேயருக்காக இறைவன் வீரச்செயல் புரிந்தமையால் “அட்ட வீரட்டங்களுள்” திருக்கடவூர் ஒன்றானது. ‘அட்ட வீரட்டம்’ என்றால் இறைவன் பக்தர்களுக்காக வீரச் செயல் புரிந்த எட்டுத் தலங்களுள் ஒன்று என்று பொருள். மார்க்கண்டேயர் படைத்த மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரமும் யந்திரமும் இங்கு உள்ளது. இங்கு நடக்கும் சஷ்டியப்த பூர்த்தி (61 வருடம்) சதாபிஷேகம் (80 வருடம்) உக்ர ருது (59வருஷப் பூர்த்தி) பீம ருது (75 வயது பூர்த்தி) ஆகிய சாந்திகளில் மார்க்கண்டேயரது யந்திரத்தை ஆவாஹனம் செய்து ஆயுள் ஹோமமும், பூஜையும் செய்கின்றார்கள். மஹாம்ருத்யுஜ்ய ஸ்தோத்திரத்தையும் பாராயணம் செய்கின்றார்கள். இதன் காரணத்தால் சாந்தி செய்து கொள்பவர்களுக்கு மரண பயம் நீங்கி அமைதி உண்டாகின்றது. மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் எனறால் ம்ருத்யு அல்லது மரணத்தையே ஜெயிக்கக்கூடிய மந்திரம் என்ற பொருள். அதாவது மரண பயத்தை அடியோடு போக்கக்கூடியது என்று பொருள். மந்திரம் பின்வருமாறு:-

    “ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோ முக்ஷீயமாம் அம்ருதாத்”

    இதன்பொருள் - “நான் முக்கண்ணணான சிவனைத் தியானம் செய்கின்றேன். எனக்கு நல்ல ஜன்ம வாசனைகளையும் (பந்தங்களையும்) ஆரோக்கியத்தையும் தர வேண்டும். பழுத்த பக்குவமடைந்த வெள்ளரிப்பழம் போல் என்னைப் பற்றுகளிலிருந்து விடுவித்து மரண பயம் போக்கிப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இதில் ”பழுத்த வெள்ளரிப் பழம் போன்று” என்பதன் உட்பொருளைச் சற்று கவனிக்க வேண்டும். பக்குவம் எனும்போது மூன்று பொருட்களை மனதில் கொள்ள வேண்டும். ஒன்று பஞ்சு. இரண்டாவது மாம்பழம், மூன்றாவது வெள்ளரிப்பழம். பஞ்சு பக்குவம் அடைந்தபின் அதன் கூடு வெடித்துவிடும். பஞ்சு மேலே பறந்து விடும். உயரே பறப்பதால் பஞ்சிற்குப் பாதகங்கள் ஏற்படலாம். மாம்பழம் பழுத்தபின்,மரத்திலிருந்து கீழேதான் விழும். கீழே விழுவதால் பழம் சேதமடையலாம். ஆனால் வெள்ளரிப்பழமோ அவ்வாறு இல்லை. வெள்ளரிக்கொடி தரை மீதுதான் படரும். பழம் பக்குவம் அடைந்து நன்றாகப் பழுத்த பின் அது காம்பிலிருந்து தானாகவே விடுபட்டுத் தரை மீதே அமர்ந்திருக்கும். அந்தப் பழுத்த வெள்ளரிப்பழம் போன்றே நம் வாழ்வும்அமைய வேண்டும்.

    பழுத்த பழம் என்று கொண்டால் நம் ஆயுள் நீண்டு நிறைவாக இருக்கவேண்டும் என்று பொருள். தக்க வயதில்லாமல் அகால மரணம் ஏற்படலாகாது. பழம் கீழே விழுந்தால் சிதறலாம். பஞ்சு மேலே பறப்பதால் சிதையலாம். ஆனால் வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து கழன்று சிறிதும் சிதைவின்றி இருந்த இடத்திலேயே இருக்கின்றது. உடல் சிதைந்து கொடூரமான மரணம் ஏற்படலாகாது என்று பொருள். பிரிந்த சுவடு தெரியாமல் காம்பினின்று பழம் கழன்று விடுகின்றது. அவ்வாறு விடுபட்டால் கொடூரப் பயம், துன்பம், வேதனை இவைகளின் சுவடே இல்லாத அனாயாஸ மரணம் ஏற்படும். தவிர்க்க இயலாத நிகழ்வான மரணம் அனாயாஸமாக அமைவதே சிறப்பு. இதனைத்தான் ஒவ்வொரு உயிரும் விரும்பி வேண்டுதல் அவசியம்.

    பற்றற்று இருக்க ‘நான்’, ‘எனது’ எனும் குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளியே வரவேண்டும். ‘நான்’ என்பது ‘நாம்’ என்று மாறவேண்டும். ‘எனது’ என்பது ‘எமது’ என்று ஆகவேண்டும். உலக நலத்திற்காக வாழவேண்டும்!! எல்லா உயிரினங்களின் உயர்விற்காக வாழவேண்டும்!! தன்னலமற்ற, பற்றற்ற வாழ்க்கை ஒன்றையே நம்மைப் பழுத்த வெள்ளரிப்பழம் போலக் கட்டுகளிலிருந்து விடுவிக்கும். பற்றற்ற நிலை பெறவேண்டும். பிறருக்காக வாழவேண்டும், பழுத்த வெள்ளரிப் பழம் போலப் பக்குவமடைதல் வேண்டும்!!

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com