• சாந்தியின் மறுபெயர் காந்தி

  ஆம், சாந்தி என்று சொன்னால் காந்திதான்! காந்தி என்று சொன்னால் சாந்திதான்! சத்யம், சத்யாக்கிரகம் எனும் கீதை சொன்ன பாடங்களைத் தனது வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்துப் பிறரும் அதனைப் பின்பற்ற வேண்டுமெனப் பாடம் சொல்லி வழி நடத்திய மஹான் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி. 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் போர்பந்தரில் பிறந்தார். அக்காலத்தில் அது கத்தியவார் மாகாணம் என்று அழைக்கப் பெற்றது. காந்தியின் குடும்பம் பாரம்பரியம் மிக்க வைசிய குடும்பம். காந்தி ராஜ்காட் மாநிலத்தில் பள்ளியில் பயிலும்போது உயர்குணங்களான உண்ணாநோன்பினைத் தன் தாய் புட்லிபாயிடமிருந்தும் அஹிம்சையைத் தனது தந்தையிடமிருந்தும் பெற்றுத் தனது பிற்கால வாழ்விற்கு அஸ்திவாரமாக்கிக் கொண்டார். பாரிஸ்டர் படிப்பிற்காகக் கடல் கடந்து இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று ‘பார் அட் லா’ பட்டம் பெற்றுத் தேர்ந்தார். தாயகம் திரும்பிய காந்தியை ஏமாற்றம்தான் சூழ்ந்தது. வயதும் பழக்கத்திறனும் (Experience) மட்டுமே வக்கீல் தொழிலில் வெற்றி கொள்ளச் செய்யும் என்பதனால் காந்தி போன்ற இளம் வக்கீலுக்கு அத்துறையில் பெருத்த ஊக்கம் கிடைக்கவில்லை. இத்தருணத்தில்தான் காந்திக்குத் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஓர் இந்திய வியாபாரியின் வழக்கை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது. அதன் பொருட்டாக அவர் தென் ஆப்பிரிக்கா சென்று 1893-1904 வரையில் அங்கு வாழ்ந்து தனது தொழிலைத் தொடர்ந்தார்.

  தென் ஆப்பிரிக்கா அப்போது ஐரோப்பிய நாட்டில் இருந்து குடியேறிய சில வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இவ்வெள்ளையருக்குக் கருப்பர்களையும் ஆசியர்களையும் அறவே பிடிக்கவில்லை. “அபார்தீட்” (Apartheid) எனும் கொடுமையான நிற வேறுபாடும் வெறியும் வியாதிபோல் விளங்கிய நேரம். அதாவது வெள்ளையர்கள் கருப்பர்கள் ((Negroes) மஞ்சள் நிறத்தவர்கள் (Mangolians) மற்றும் கோதுமை நிறத்தவர்களை (Brown Asians) மிகவும் கேவலமாக நடத்தி வந்த கொடுமையான காலம். வெள்ளையர்கள் பிரயாணம் செய்யும் ரயில் பெட்டிகளில் வாகனங்களில் வெள்ளையர் அல்லாதோர் பிரயாணம் செய்யலாகாது. வெள்ளையர் செல்லும் பள்ளிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு, கேளிக்கை இடங்களுக்கு, கழிப்பறைகளுக்கு வெள்ளையர் அல்லாதோர் செல்லக்கூடாது.. ஏன்!! வெள்ளையர் வீதியில் நடந்து செல்லும்போது பாதையை விட்டு வெள்ளையர் அல்லாதோர் விலகிச் செல்ல வேண்டும்.

  இத்தகைய கொடூரமான நிறவெறி தலைவிரித்தாடும் வேளையில்தான் இளம் வக்கீல் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி தென் ஆப்பிரிக்கா வந்து பீட்டர்மாரிட்ஸ்பெர்க் (Peter Marits Burg) எனும் நகரில் தொழில் செய்யத் துவங்கினார். அங்கிருந்து ஒரு முறை வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் இரயில் பயணத்தை மேற்கொண்டார். ரயில் டிக்கெட்டை அவரை வேலைக்கமர்த்திய வெள்ளையர் வாங்கிக் கொடுத்தார். வெள்ளையர் வாங்கியதால் அது வெள்ளையர் ஏறும் ரயில் பெட்டி டிக்கெட்டாக அமைந்தது. காந்தி அதில் சென்று அமர்ந்தார். ரயில் படுக்கை விநியோகம் செய்யும் ஊழியர்கள் வெள்ளையர் அல்லாத ஒருவர் வெள்ளையரது ரயில் பெடடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கி வெளியில் எறிந்து விட்டனர். ரயில் வண்டி சென்றுவிட்டது. அன்று 1893-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7-ஆம் நாள். எலும்பையும் உறைய வைக்கும் கடும் குளிர!! அன்று நடந்த நிகழ்ச்சியே காந்தியின் வாழ்க்கையில் பெரியதோர் மாற்றத்தை உண்டு செய்தது.

  பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில சம்பவம் நடந்த் அவ்விடத்தைக் குறிக்கும் வண்ணம் கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டிருக்கின்றது. அதில் உள்ள வாசகத்தில் காந்தி கூறியிருப்பதாவது: “அன்று இரவு முழுவதும் நான் கடும் குளிரில் நடுங்கியவாறு என்னைப் போன்று வெள்ளையர் அல்லாத பலரது அவல நிலையையும் எண்ணிப் பார்த்தேன். அவர்கள் படும் வேதனை என்னைக் கண்ணீரில் மூழ்க்ச் செய்தது. அன்று முதல் அவர்களது உரிமைகளுக்காகப் போராடுவது என்று உறுதி கொண்டேன்” என்று உள்ளது. வளமான ஆப்ரிக்க நாட்டில் கருப்பர்கள் சுமார் 60 லட்சம் பேர் வாழ்ந்தனர். இவர்கள் படிப்பறிவு சிறிதும் இல்லாதவர்கள். மிகவும் ஏழ்மையானவர்கள். எந்தவித உரிமைகளோ அரசியல் சுதந்திரமோ இல்லாதவர்கள். ஐரோப்பியர்கள் சுமார் 12 லட்சம் பேர்கள். இவர்களது ஆதிக்கம்தான் தலைவிரித்தாடிற்று. இந்தியர்கள் 2 லட்சம் பேர். நிறவெறியினால் நசுக்கப்பட்ட இந்தியர்களுக்கும், கருப்பர்களுக்கும் உரிமை கேட்டுப் போராடவே காந்தி உறுதி பூண்டார்.

  நிறவெறி கொண்ட வெள்ளையர்கள் இந்தியர்களை வெறுத்தனர். இந்தியர்களைக் கட்டுப்பாடு, சுகாதாரம், குடிமை உணர்வு அற்றவர்கள் என்று கூறினர். அது உண்மை அல்ல. கடின உழைப்பாளிகளான இந்தியர்களின் திறமையும் அறிவும் வளர்ச்சியும் வெள்ளையர்களை அவர்கள் மீது பொறாமை கொண்ட காழப்புணர்ச்சியைக் கொள்ளச் செய்தது. அவர்களது வளர்ச்சி வெள்ளையரை அச்சுறுத்தியது. இந்தியர்களை மன உளைச்சல் கொள்ளத்த்லைப்பட்டது. இதனால் இந்தியர்கள் யாவரும் அடையாள அட்டைகள் வைத்திருக்க வேண்டுமென்று தென் ஆப்ரிக்கா அரசு, சட்டம் இயற்றியது. இத்துடன் இந்தியத் திருமணங்கள் செல்லாது என்றும் கூறப்பட்டது. இதனால் காந்தி இந்தியர்களை ஒருங்கிணைத்து நியாயமற்றச் சட்டங்களை எதிர்த்துப் போராடினார். உண்மையும் அஹிம்சையுமே அவர்களது ஆயுதங்களாயின!! சத்யாக்கிரக போராட்டம் பிறந்தது!! இப்படித்தான் அன்று 1906-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமைதியான வழிமுறைகளைக் கையாண்டு போராட்டம் நடத்தும் Non Violence எனும் சத்யாக்கிரகம் பிறந்தது.

  சமீபத்தில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் செல்லும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தென்ஆப்ரிக்காவில் டர்பன் நகரில் நடைபெற்ற உலக வர்த்தகச் சபைகளின் கூட்டத்திற்கு என் கணவர் டாக்டர் ஏ.சி.முத்தையா அவர்கள் செல்ல இருந்ததால் நானும் உடன் சென்றேன். டர்பனிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பீட்டர்மாரிட்ஸ்பர்க். காரில் தான் சென்றோம். உயர்தரமான, சௌகர்யமான ஹவேக்கள். சுமார் ஒன்றரை மணிப் பயணம். பீட்டர்மாரிட்ஸ்பர்க் மார்க்கெட் சதுக்கத்தில் மிகவும தத்ரூபமான காந்தியின் உருவச் சிலை உள்ளது. அதன் மீது காந்தியின் சொற்களான “என் வாழக்கைதான் எனது செய்தி” (My life is my message) எனும் வாசகம் உள்ளது.

  பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையம் தற்போது உபயோகத்தில் இல்லை. மியூஸியம்போல் அமைந்துள்ள நிலையத்தில் காந்தி ரயிலிலிருந்து தூக்கி எறியப்பட்ட இடம், அவரைச் சிறை வைத்திருந்த இடம் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன. காந்தியின் அஹிம்ஸா நெறியைப் பின்பற்றியே தென்ஆப்ரிக்கத் தலைவர் நெல்ஸன் மண்டேலாவும் சத்யாக்கிரகப் போராட்டங்களை நடத்திச் சிறை சென்றார் என்று அங்குள்ள மக்கள் பெருமையாகக் கூறுகின்றனர்.

  பீனிக்ஸ் பார்ம் எனும் இடத்தில் ஒரு சிறு குன்றின் மீது காந்தி வாழ்ந்த இல்லம் அமைந்துள்ளது. சண்டையும் சச்சரவும் மிகுந்த புறநகர்ப் பகுதியின் மத்தியத்தில் அமைந்திருக்கும் அந்த வீட்டில் அமைதி தாண்டவமாடுகின்றது. இடத்தையும் சுற்றுப் புறத்தையும் காட்டிலும் அங்கு வாழ்பவர்களின் குணம்தான் அமைதியை நிலவச் செய்கின்றது எனும் கருத்தைப் பறைசாற்றுவது இந்த அமைதி. அருகில் காந்தி நடத்திய “இந்தியன் ஒப்பினியன்” எனும் பத்திரிகையைத் தயாரித்த அச்சகமும் உள்ளது.

  எங்கு பார்த்தாலும் அடி தடி சண்டை, குண்டு வெடிப்பு என்று வன்முறை கோரதாண்டவமாடும் காலம் இது. உலகத்தையே உலுக்கிய குண்டு வெடிப்பு நியூயார்க் நகரில் நடந்த நாள் இது. “உலக வர்த்தக மையங்கள் தரைமட்டமாக்கப்பட்ட நாள் இன்றுதான்..ஆம்.. செப்டம்பர் 11. என்ன வேடிக்கை. காந்தி சத்யாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தினமும் செப்டம்பர் 11 தான். மனிதர்கள் என்றால் ஏக்கங்கள், தவிப்புக்கள் என்று இருக்கும்தான். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, உரிமைகளுக்காகப் போராட அமைதியான சத்யாக்கிரக வழி உள்ளபோது தடியும், அடியும் குண்டுவெடிப்பும் எதற்கு? கனியிருக்கக் காய் எதற்கு? காந்தியின் திருஉருவச் சிலை முன்பு என் மனம் செய்தப் பிரார்த்தனை இதுதான். “மஹாத்மாவின் அஹிம்ஸை நெறியும் சத்யாக்கிரகமும் உலகம் முழுவதும் பரவ வேண்டும், எங்கும் சாந்தி நிலவ வேணடும்”.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com