• சிவலிங்க வடிவம்!

  பிரம்மாண்டம் எனப்படும் சிவலிங்க வடிவம் தான் இறை வழிபாட்டிலேயே மிகவும் தொன்மையான வடிவமாகும். சிந்துவெளிப்பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க வடிவமே இதற்குச் சான்று. இந்தச் சிவலிங்க வடிவமானது மிகவும் வினோதமான அதிசயமான வடிவம். “Elliptical” அதாவது “அண்ட” வடிவமானது, சிவலிங்கம். முதல் எது, முடிவு எது எனக் கூற இயலாத வடிவம் “ஜோதி வடிவம்” என்றும் இதனைக் கூறுவர். விளக்கினை ஏற்றினால் அதனின்று வரும் ஜோதி வடிவமானது (jothi image)இப்படித்தான் இருக்கும். இதுவே சிவலிங்க வடிவமாகும்.
  மணிவாசகரது குயில் பத்துப் பாடலில்,

  "கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
  பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கப்பால்
  சோதி மணிமுடி சொல்லில் சொல்லிறந்து நி ன்ற தொன்மை
  ஆதி குணம் ஒன்றுமிலான் அந்தமிலான் வரக்கூவாய்”

  என்கிறார். இப்பாடலில் ஜோதி வடிவம், தொன்மையான வடிவம், ஆதி குணமும் அந்தமில்லாத வடிவம் எனும் மூன்று குணங்களும் சிவனைக் குறிப்பன. சிவனின் வடிவமான சிவலிங்கத்தையும் குறிக்கும்.

  மத்திய பிரதேசத்தில் இந்தூர் அருகில் இருப்பது ஓம்காரேஸ்வரம் எனும் தலம். பன்னிரு ஜோதிர்லிங்க க்ஷேத்திரங்களில் ஒன்றான இத்திருத்தலம் நர்மதை ஆற்றங்கரையில் அமைந்திருக்கின்றது. நர்மதை ஆறு மலைகளுக்கிடையில் ஓம்கார வடிவமெடுத்து (oom image) ஓடுகின்றது. இந்த ஓம்காரத்தின் நடுவில் கோவில்தலம் அமைந்திருக்கின்றது. ஆற்றில் அடித்து வரப்படும் கூழாங்கற்கள் யாவும் இயற்கையாகவே சிவலிங்க வடிவத்தில் அமைந்திருக்கின்றன. இது பாரத நாடு புண்ணிய பூமி என்று ஊர்ஜிதம் செய்யும் இயற்கையின் கையொப்பங்களில் ஒன்று போலும்!!

  ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று அனைத்துச் சிவத்தலங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இவ் வைபவத்திற்கு அதிகமான விசேஷமுண்டு. அன்னத்தை வடித்த பின்பு சிவலிங்கத்தின் மீது சாற்றி வழிபாடு செய்தபின் பக்தர்களுக்குப் பிரசாதமாகவும், பசித்தவர்களுக்கு அன்னதானமாகவும் வழங்கப்பெறும்.

  இவ்வைபவத்தைப் பற்றிக் காஞ்சி காமகோடி பீடாதிபதி மஹாஸ்வாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேச்ந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் கூறுவார்கள்,”அன்னாபிஷேகத்தைப் பக்தர்கள் தவறாது தரிசிக்க வேண்டும். காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். வடித்த சாதத்தில் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்க வடிவம் கொண்டது. சாதத்தைச் சிவலிங்கத்தின் மீது இன்று அலங்காரமாக சாத்துகின்றார்கள். சிவலிங்கத்தின் மீது இத்தனை ஆயிரம் சிவலிங்க வடிவம் கொண்ட சாதத்தைப் பார்த்தால் அத்தனை ஆயிரம் சிவலிங்கங்களைத் தரிசித்த பலன் கிடைக்கும்” என்பார். இதையே கங்கை கொண்ட சோழபுரமாகவோ, தஞ்சைப் பெரிய கோவிலாகவோ, திருவிடைமருதூர் மஉறாலிங்கமாகவோ எண்ணிப் பாருங்கள்!! எத்தனைப் பெரிய லிங்க வடிவம், அதன்மீது எத்தனை மூட்டை அரிசியை வடித்து, எத்தனை கோடி சிவலிங்க வடிவம் கொண்ட சாதப் பாவாடையை நாம் தரிசித்து வணங்கி, எத்தனைப் புண்ணியத்தைப் பெறலாம்”

  இதே தத்துவத்தில் தான் சஉறஸ்ரலிங்கம் என்று திருவாலங்காடு போன்ற தலங்களிலும் கோடி லிங்கம் என்று புவனேஸ்வரத்தில் விங்ககேஸ்வரர் ஆலயத்திலும் தரிசிக்கலாம். ஒரு பெரிய சிவலிங்கத்தின் மீது ஆயிரம் சிவலிங்கங்கள் வடிக்கப்பட்டிருப்பதால்அந்த சிவலிங்கத்தைத் தரிசித்தால் ஆயிரம் சிவலிங்கங்களைத் தரிசித்த புண்ணியமும், கோடி லிங்கத்தைத் தரிசித்தால் கோடி சிவலிங்கங்களைக் கண்ட பேறும் நமக்குக் கிட்டும்.

  ஒவ்வொரு சோற்றுப் பருக்கையின் மீதும்
  இன்னோர் பெயர்!!

  அன்னாபிஷேகம் என்றும் சாதம் என்றும் சொல்வதால் ஒரு செய்தி நினைவில் வந்தது. அதனையும் இக்கட்டுரையில் தொடர்ச்சியாகக் கூற விழைகின்றேன். “தானே தானே பர் லிக்கா ஹை கானே வாலே கா நாம்” என்பது இந்தியில் ஒரு பிரபலமான வரி, அதாவது ஒவ்வொரு மணி அரிசியிலும் ஒரு பெயர் எழுதியிருக்குமாம். பயிர் விளையும்போதே இது இன்னார்க்கு என்று விதியின் கையால் எழுதியிருக்கப்படுமாம். ‘இன்னின்ன பொருள் இன்னின்னார்க்கு’ என்று இறைவனே எழுதியிருப்பதால் நமக்கு விதிக்கப்பட்ட பொருள் நமக்கே அன்றி பிறர்க்குக் கிட்டாது. மற்றும் பிறர்க்கென்ற பொருள் நம்மிடம் இருந்தாலும் அது நம்மிடம்தொடர்ந்து அமையாது என்பதே இதன் ஆழ்ந்த பொருள்.

  இதற்கு எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துப் பெண்மணி கூறிய கதை என் நினைவிற்கு வந்தது. ஒரு முஸ்லீம் முதியவர் உணவு உண்ணும் போது பொறையேறி விட்டதாம். உணவருந்தியபின் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தாராம். அப்பொழுதெல்லாம் இருமிக் கொண்டே இருந்தாராம். பல நாட்கள் பிரயாணம் செய்தபின் வேறு ஒரு நாட்டில் இறங்கினாராம். இறங்கியவுடன் தும்மினாராம். தும்மியதும் பொறை ஏறியபோது அவரது நாசியில் சிக்கிக் கொண்ட ஒரு பருக்கை சாதம் தரையில் விழுந்ததாம். அதனை ஒரு புறா கொத்திக் சென்று உண்டதாம். வேறு ஒரு நாட்டில் உண்ட சாதத்தின் ஒரு பருக்கை பல நாட்கள் அவரது புறையில்சிக்கிக் கடல் கடந்து வந்த வேறு நாட்டின் தரையில் இறங்கியபின் தும்மியபோது விழுந்தது, அதுவே அங்கு ஒரு புறாவிற்கு உணவாகியது என்றால் அது விளையும்பொழுதே அதில் அப்புறாவின் பெயர் எழுதியிருத்தல் வேண்டுமல்லவா? இதுதான் இறைவனின் எழுத்து வடிவமில்லாத உயிலா? அவன் ஸ்ருஷ்டியில் ஜீவ ராசிகளுக்கு அவன் தந்த பட்டய சாஸனமா?

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com