• சொல்வாய் நீ வெண் சங்கே!

  28-1- 2004 அன்று ரத ஸப்தமி, அஸ்வினி நட்சத்திரம், பென்னலூரில் அமைந்திருக்கும் “ஸ்ரீவெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் (SVCE) எனும் கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தின் பிரதிஷ்டா தினம்.(இக்கல்லூரி,மஹாஸ்வாமி பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் எங்களுக்கு அளித்த பிரசாதம்). பெரியவர்களின் ஆசியும் அருளும் என்றும் பரிபூரணமாக இருப்பதால் தான் அக்கல்லூரியின் மரங்களும் செடிகளும் கூட அதிகப் பசுமையுடன் காட்சி தருகின்றன போலும்!! ஏன் அங்கு வீசும் காற்றும் கூட அதிகக் குளிர்ச்சியுடனும், தூய்மையுடன் இருக்கின்றது!! இக்கோவிலின் பிரதிஷ்டை 10.2.1992 ரத ஸப்தமி அன்று பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளாலும், பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளாலும் இனிதே நடத்தி வைக்கப் பெற்றது. அதுவும் மஹாமக வருடம். 2004-ம் மஹாமக வருடம். இவ்வாண்டும் மீண்டும் குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது.

  விழாவிற்குக் கல்லூரி செயலர், பேராசிரியர் கிருஷ்ணன் என்னை அழைத்திருந்ததால் பென்னலூருக்கு நான் வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். வழியில் அடுத்த ‘அபிராமி’ இதழுக்கு என்ன எழுதலாம் என்று மனதில் அசைபோட்டுக் கொண்டே சென்றேன். பல தலைப்புகள் என் மனதில் தோன்றி, கருத்துக்களும் உதித்தன. இதற்குள் கல்லூரி வந்து விட்டது. உள்ளே சென்று விநாயகர் கோவிலைக் கண்டேன். அடுத்து இருக்கும் மண்டபத்தில் கணபதி ஹோமம் நிறைவுபெற்றுப் பூரணாஹூதி நடக்கவிருந்தது. அருகில் பூரணக் கலசம் வைக்கப்பட்டிருந்தது. அதனைச் சுற்றிலும் 108 வலம்புரி சங்குகள் அபிஷேகத் தீர்த்தத்துடன் அரிசி மீது அழகாக அடுக்கப் பெற்றிருந்தன. ஒவ்வொரு சங்கின் மீதும் ஒரு ரோஜா மலர் இருந்தது. தரை மீது தையல் இலை! அதன் மீது அரிசி! அரிசி மீது சங்குகள்! அவற்றின் மீது ரோஜாக்கள்!! பார்ப்பதற்குக் கண்களைக் கொள்ளை கொள்வது போன்ற தோற்றம்!! அதைப் பார்த்தவுடன் சங்கைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது!!

  அன்று பூஜைக்குப் பயன் பெற்ற 108 வலம்புரி சங்குகளும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் வாங்கப் பெற்றவை. வந்த நாளிலிருந்து இந்த நாள் வரை கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் ஆலயம், வெங்கடேஸ்வரா கல்லூரி விஜய கணபதி ஆலயம், தமிழ்நாடு பெட்ரோப்ராடக்ட்ஸ் கணபதி ஆலயம். மணலி பெட்ரோப்ராடக்ட்ஸ் கணபதி ஆலயம் என்று அத்தனைக் கணபதி ஆலயங்களுக்கும் பூஜைக்கும் அபிஷேகத்திற்கும் சென்று சென்று வருகின்றன.

  சங்குகளை வாங்கி இவ்வாறு எங்கள் பார்வைக்கு உட்பட்ட விநாயகர் கோவில்களுக்குக் கொடுத்து வாங்குமாறு என்னைப் பணித்தது தருமபுரம் 26-வது ஆதீனம குரு மஹாசந்நிதானம சண்முக தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள். சங்கின் உயர்வைப் பற்றிக் கூறும் அவர், “சங்கின் உயர்விற்குக் காரணமே அதன் தன்னலமற்ற தியாகம் தான்” என்பார். “சங்கு பிறப்பது ஆழ்கடலில். அதனை எடுக்கும்போது அதனுள் புழுப் போன்ற சதை-பிண்டப் பூச்சி ஒன்று இருக்கும். இதனைப் பார்க்கும் போதே அருவறுப்பாகத்தான் இருக்கும். அந்தச் சதைப் பூச்சியை நீக்கிவிட்டு, சங்கைச் சுத்தம் செய்து மெருகு (பாலிஷ்) கூட்டியபின் அது தெய்வ காரியங்களுக்குப் பயன் பெறுகின்றது. அதேபோல்தான் காரைக்கால் அம்மையார் அவர்கள் தன் எழிலையும், இளமையையும் தூரக் கிடத்தி விட்டுப் பேய் உருவம் கொண்டபின்தான் இறைவனிடம் விரைவில் சென்று சேர்ந்தார்”. என்பார்கள். சங்கைப் பார்க்கும் பொழுதெல்லாம் அதன் உயர்ந்த குணங்களும் காரைக்கால் அம்மையார் பற்றிய நினைவும் என் மனதில் அலை மோதும். ஏன்? உலக க்ஷேமத்திற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அத்தனை சந்நியாசிகளையும், துறவிகளையும் எனக்கு நினைவுபடுத்தும்.

  வலம்புரி, இடம்புரி என்று இருவகைப் பெரும்சங்கு குழந்தைக்குப் பாலூட்டப் பயன் பெறுகிறது. முதியோருக்கு மருந்தூட்டப் பயன் பெறுகின்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார், வங்காளிகள், நேபாளிகள் போன்ற இனத்தவரின் அத்தனை விசேஷங்களிலும ஒலிக்கப் பெறுகின்றது. கோவில்களில் அபிஷேகத் தீர்த்தத்தைச் சுமப்பது இந்தச் சங்குதான். திருக்கடவூர், திருத்தணி, வைத்தீஸ்வரன் கோவில் போன்ற சிவ க்ஷேத்திரங்களில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அன்று பிரதி சோம வாரமும் சிவலிங்கத்திற்கு 1008 சங்காபிக்ஷேகம் நடைபெறுவது வழக்கம். பண்டைக் காலத்து அரசர்கள் போர்க்களங்களில் சங்கினை ஊதிப் போரைத் துவக்கும் பழக்கம் இருந்தது. கீதையில் பீஷ்மாச்சாரியார் முதலில் சங்கினை ஊதியதாலேயே பாரதப் போரை ஆரம்பித்தது கௌரவர்கள் தான் பாண்டவர்கள் அல்ல என்றும் கூறும் புராணம்.

  சங்கின் தியாக மனப்பான்மையைப் பற்றி நான் கூறும் வேளை, வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் ‘எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ்’ பிரிவில் பணிபுரியும் பேராசிரியர் என்.நித்யானந்தம் கூறியதையும் குறிப்பிட விழைகின்றேன். “சங்கு பிறப்பது கடலில். உயர்வான பயன் தருவது நிலத்தில். மனித இனமும் முதன் முதலில் கடலில் தோன்றிப் பரிணாம வளர்ச்சியின் காரணமாகப் படிப்படியாக மனிதனாக உயர்வு பெற்றது நிலத்தில்தான். குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்கிறது டார்வினின் பரிணாம வளர்ச்சி நீதி. ஆனால் இந்தக் குரங்கு எப்படி வந்தது? ஆரம்பத்தில் கடல்தான் மூன்று பங்காகவும், நிலம் ஒரு பங்காகவும் இருந்தது”. நீரில் வாழும் அமீபியா எனும் ஓர் அணு ஜீவராசி (Single cell living being) தான் முதலில் உண்டானது என்பர். இதிலிருந்து படிப்படியாக நீரில் மட்டும் வாழும் மீன் உண்டாகியிருக்க வேண்டும். அதுவே பின்பு தவளையாக நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய ஜீவராசியாக உண்டாகியிருக்க வேண்டும். பின்பு இத்தகு ஜீவராசியின் பரிணாம வளர்ச்சியே குரங்கு, குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” என்று கூறினார்.

   

  “கழுத்திற்குச் சங்கு என்று பெயர் உண்டு. கழுத்துப் பகுதியான தொண்டையிலிருந்து வரும் கீதம்தான் சங்கீதம். சங்கிலும் கீதம் இருக்கிறது. அதனை ஒலிப்பதால் வருவது சங்க நாதம்” என்றும் திரு.நித்யானந்தம் கூறினார்.

  சங்கு, கால்ஷியம் எனப்படும் சுண்ணாம்பினால் ஆனது. கிளிஞ்சல் போல்தான். ஆனால் கால்ஷியத்திலிருந்து பெறப்பட்ட மற்ற எந்தப் பொருளைச் சுட்டாலும் கறுத்துவிடும். ஆனால் சங்கினைச் சுட்டாலும் கறுக்காது. வெண்மையாகத்தான் இருக்கும். இதனால் தான் “சங்கு சுட்டாலும் வெண்மை தரும். சுட்டாலும் ஒளி பெறுவர் மேன்மக்களே” என்று கூறுவதுண்டு. எத்தனை இடர்களும், சோதனைகளும் வந்தாலும் உயர் மக்கள் மேலும் மேலும் மெருகு பெறுவர், ஒளி தருவர்.

  சங்கைக் காதில் வைத்துக் கேட்டால் அதில் “ஓம்“ என்று அலை ஓசை கேட்டுக் கொண்டேயிருக்கும். சங்கின் விசுவாச குணத்தையும் நன்றிக் கடனையும் பாருங்கள். தற்போது உயர்வான இடத்தில் இருந்தாலும் தான் பிறந்த கடலை மறக்காமல் அதன் ஒலியையே தனது ஒலியாகக் கொண்ட சங்கின் உயர்வை என்னவென்று கூறுவது? கடல் அலைகள் தான் சங்கின் நினைவலைகளோ?

  ‘பின்னமான சங்கினை என்ன செய்வது’ என்று சிவாச்சாரியார் ஒருவரைக் கேட்டேன் ‘அதனைத் திரும்பவும் கடலில் சேர்த்துவிடுங்கள’ என்றார் அவர். பழுதுபட்ட பிற பண்டங்களைப் போல் சங்கை எறிந்து விடாமல் அதனைக கடலில் சேர்ப்பது அது பிறந்த இடத்திலேயே அது சங்கமம் ஆக வேண்டும் என்பதனை நிலைநிறுத்துகின்றதல்லவா?

  சங்குகளிலேயே அழியா உயர்வினைப் பெற்றது பாஞ்சசன்னியம் எனும் வலம்புரி. கண்ணனின் கைகளில் என்றும் நிலைபெற்று நிற்கும் வலம்புரிச் சஙகைப் பற்றி எழுதலாமே என்று எண்ணி எழுதிய கவிதைதான் “வெள்ளைச் சங்கே” எனும் கவிதை. பல ஆண்டுகளுக்கு முன் “அமுதசுரபியில் வெளியிடப் பெற்ற இந்த எனது கவிதையை ‘அபிராமி’ வாசகர்களுக்காக மீண்டும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

  ஆழ்க்கடலில் பிறந்த வெள்ளைச் சங்கு தனது பரிணாம வளர்ச்சியைகக் கூறுகின்றது. பூச்சியாக இருந்த சங்கு எப்படிப் படிப்படியாக உயர்வு பெற்று, அந்தப் பரந்தாமன் கையில் போய்க்குடி கொண்டது என்று அதுவே கூறும் கதைதான்
  “வெள்ளைச்சங்கே” என்ற இந்தக் கவிதை.

  வெள்ளைச் சங்கே!

  ஆழ்கடலிலே பிறந்து வந்த வெள்ளைச் சங்கே!
  அந்தப் பரந்தாமன் கையில் நீ வந்ததெங்கே!
  “என் கூட்டுக்குள்ளே குடியிருந்த நத்தைப் பூ ச்சியை
  என்னைக் கண்டெடுத்தவன் தின்றிடத்தான் வேறுபடுத்தினான்!
  வலிக்க வலிக்க எந்தன் சதைப் பிண்டத்தை அவன்
  குடைந்தெடுத்ததனால், வெறும் கூடாகினேன்;
  கூடான என்னைச் சில காசுக்காகத்தான்
  கூட்டமிகு கடைத்தெருவில் விலை கூவி விற்றானே!
  காசு கொடுத்து என்னை வாங்கிக் கொண்டபின்
  கடைக்காரன் எனனைப் பட்டை தீட்டினான்! சுட்டு மெருகு கூட்டினான்;
  பட்டை தீட்டி, மெருகூட்டிப் பொலிவு கண்டபின்- என்னைப்
  பணக்காரன் ஒருவனிடம் கொண்டு விற்றானே!
  அந்தப் பணக்காரன் புண்ணியத்தை நாளும் தேடுவான்;
  நன்மை தரும் காரியத்தை நாடிச் செய்குவான்!
  பூசைக்கென்று என்னை அந்தச் செல்வச் சீமானும்
  பெருமாள் கோவிலிலே உடனேதான் கொண்டு சேர்த்திட்டான்;
  பிறப்பை மறந்து உடலைத் துறந்த வெறும் கூடுவடிவிலே
  பூசைக்கென்று வந்த சேர்ந்த என்னைக் கண்ணன் கண்டானே!
  தங்க ஒளிக் கைகளிலே என்னை வாரிக் கொண்டானே!
  அருச்சுனனுக்(கு) உபதேசம் சொன்ன திரு வாயினால்
  போர்முனையில் பரந்தாமன் எனைப் பொருத்தி நிறுத்தினான்;
  அவன் புகழ் பாட என்னையே ஊதி முழக்கினான்!
  உலகெல்லாம் என்னைக் கண்டு போற்றி நிற்கவே அந்த
  வைகுந்தன் எந்நாளும் எனைக் கையில் தாங்கினான்!”

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com