
என் தாயுமானவர்
அபிராமி வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தீவாவளி வாழ்த்துக்கள். தீபாவளி என்பது புது உடைகள், இனிப்புகள், பட்டாசு என்று பெறும் உல்லாசப் பண்டிகையாக மட்டும் அமையாமல் உல்லாசத்தோடு (Celebrations) வேறு ஒருவரது வாழ்க்கையிலாவது அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞான ஒளிதனை எற்றவல்ல சிறு அகல் விளக்காகவேனும் நம்மை ஆக்கிக் கொள்ள அபிராமியின் அருளை நாடுவோம்.
இக்கட்டுரை திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26 – ஆவது குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய் சுவாமிகளின் சதாபிஷேக (கனகாபிஷேக) விழா மலருக்காக நான் எழுதியது. தென்னகத்தில் பல நூற்றாண்டுகளாக அருளாட்சி செய்து வரும் தருமபுர ஆதீனத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட 27 திருக்கோவில் பட்டியலில் திருக்கடவூர், வைத்தீஸ்வரன் கோவில், திருப்புவனம், சீர்காழி, திருவையாறு போன்ற திருக்கோவில்களும் அடங்கும். அதில் திருக்கடவூர்த் தலமும் கோவிலும் எங்கள் நெஞ்சில் நிறைந்ததாகும்!! திருக்கடவூர் தெய்வம், “அபிராமி”, என்னை ஆட்கொண்ட நாயகி, எனது ஒவ்வொரு செயலும் சொல்லும் எண்ணமும் எனதல்ல. அன்னையின் அருள் ஆணையே ஆகும்!! என்னை அபிராமித் தாயிடம் இத்தனை அருகில் கொண்டு சேர்த்தது தருமை ஆதீனம் 26 – வது குருமஹாசந்நிதானம் அவர்கள் தான்!! இக்கட்டுரையின் மூலம் ம்ஹாசந்நிதானம் அவர்கள் எங்களைத் தமிழிலும், தெய்வத் திருப்பணிகளிலும் எந்த அளவிற்கு ஈடு கொள்ளச் செய்திருக்கின்றார்கள் என்று உலகம் அறிய வேண்டும் என்பதே எனது அவா. அதுவும் “அபிராமி” வாசகர்களுக்குத் தெரியவேண்டும் என்றே இதனை இம்மாத இதழில் வெளியிட்டிருக்கின்றேன்.
|