• தலையே நீ வணங்காய்

  மனிதனின் உடல் உறுப்புகளில் மேன்மையானதாய், முதன்மையானதாய், இருப்பது சிரசு என்று அழைக்கப்படும் தலை. மனிதன் பிறக்கும் பொழுது குழந்தையின் தலைதான் முதலில் பூமியைத் தொடுகின்றது. அப்படி அல்லாது பிரசவத்தின் பொழுது கால் தோன்றி விட்டால் பிரச்சினைதான்!! இதனாலெயே தலையிலிருந்து கால் வரை அமைவது மனித உடல் என்று  தலையினை முதலாவதாகக் குறிப்பிடுகின்றோம்.  கேட்கும் திறன் கொண்ட காதுகள், பார்க்கும் திறன் கொண்ட கண்கள், நுகரும் திறன் கொண்ட மூக்கு, ருசிக்கும் திறன் கொண்ட நா, மற்றும் உணரும் திறன் கொண்ட தோல் என்று ஐந்து இந்திரியங்களையும் கொண்ட அங்கம் தலை.  அறிவின் இருப்பிடமான மூளையும் தலையில் அமைந்துள்ளது.  அகத்தின் – உள்ளத்தின் ஜன்னலாகிய முகம் அமிந்து இருப்பது தலையில்தான்.  படுக்கும்பொழுது தலையைச் சாய்க்கும் தலையணை மீது உட்காரக்கூடாது தலையணையை மிதிக்கக் கூடாது என்பதும் தலையின் முக்கியத்துவத்தைக் குறிக்கவேதான்.

  தலையில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணமே ஒரு நிறுவனத்தின் உயர்ந்த தகுதியில் உள்ளவரையோ கட்சியின் முதல்வரை, குடும்பத்தில் வயதானவரையோ கூட்டத்தில் பெரியவரையோ தலைவர் என்கிறோம். சென்னைத் தமிழில் கூறினால் அது “தலை”.  தாயின் மூத்த மகன் தலைமகன்.  பெரிய தலைபோகிற காரியமா? என்று ஒரு காரியத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றோம்.  இவனோட “ஒரே தலைவலி” என்று ஒருவரின் தொல்லையைக் குறிப்பிடுகின்றோம்.  அந்தக் காரியத்தில் நான் தலையிடவே மாட்டேன் என்றால் அந்தக் காரியத்தைப் பற்றிய நல்லது கெட்டதை நான் கேட்டுக் கொள்ளவே மாட்டேன் என்றாகும்.  “தலை குடுத்துட்டா அப்புறம் அவ்வளவுதான்” என்றால் ஒரு காரியத்தில் ஈடுபட்டு விட்டால் அதன் விளைவுகளை எற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள்.  தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்றால், உயிருக்கு வரவேண்டிய ஆபத்து சிறிய காயத்தோடு சென்றது என்று பொருள். “தலைமுழுகி விட்டேன்” என்றால் அந்தக் காரியம் அத்தோடு சரி. மீண்டும் தொடர்பு இல்லை என்று பொருள்.  மமதை கொண்ட ஒருவரை, “தலைக்கனம் பிடித்தவன்” என்கிறோம். நீங்க ஆமாம்னு தலையை அசைச்சாப் போதும் என்றால் அவரது வார்த்தையின் சக்தியைக் குறிப்பது.  தலைத் தெறிக்க ஓடினான் என்றால் அவனது வெகத்தைக் குறிக்கும்.  அந்த விஷயத்தில் தலைக் குப்புற விழுந்தான் என்று இப்படி தலையை வைத்து தலைப்பட்ட சொற்கள் நம் வழக்கு மொழியில் எத்தனையோ!!

  மனித உடம்பில் அமைந்துள்ள ஆறு ஆதார சக்கரங்கள் மூலாதரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சஹஸ்ராரம்.  இந்த சஹஸ்ராரம் எனும் ஆயிரம் இதழ் தாமரை சக்கரம் ஒருவரின் சிரசின் தலையின் உச்சியில் அமைந்துள்ளது.  குண்டலினி சக்தியானது முதுகுத்தண்டின் நுனி நாடியிலிருந்து மற்ற ஐந்து சக்கரங்களின் ஒன்று கலக்கின்றது.  இதன் காரணமாகவேதான் பக்தியின் வெளிப்பாடாக சிரத்தின் மீது கைகளை கூப்பி இறைவனைத் தொழுகின்றோம்.  “விழுந்து வணங்கும்போது தண்டம் போல் கிடக்க வேண்டும்” என்பார்கள் மஹசுவாமிகள்.  அதாவது ஆண்கள் ஒரு தண்டமானது தரையில் கிடப்பதுபோல் நெடுஞ்சாண்கிடையாக தலைலியிருந்து கால் வரை தரையில் கிடக்கும் வண்ணம் வணங்க வேண்டும்.  இதை அஸ்டாங்க அதாவது எட்டு அங்க நமஸ்காரம் என்பார்கள்.  பெண்களுக்குப் பஞ்ச அங்க சமஸ்காரம்தான்!!  தலையானது தரையைத் தொட்டால் சிறிதும் கர்வம் இல்லை என்று பொருள்.  இப்பொழுது புரிகிறதா காரைக்கால் அம்மையார் ஏன் தலையால் நடந்து கயிலாயத்திற்குச் சென்றார்கள் என்று!!

  நாட்டுக்கோட்டை ந்கரத்தார் வரலாற்றில் ஒரு செய்தி.  முத்து மீனா எனும் சிறுமியைக் கவர்ந்து சென்று விட்டான் பாண்டிய அரசன்.  அவளை மீட்கச் செல்லும் நகரத்தார்களிடம் அரசன் “உங்கள் பெண்ணை நீங்கள் அழைத்துச் செல்லலாம்.  மானத்தை பெரிதாகக் கருதும் நீங்கள் அவள் எங்கள் அரண்மனையில் தங்கியிருந்தாள் என்பதால் அவளை ஒன்றும் செய்துவிடக் கூடாது.  அப்படி ஏதாவது செய்தால் அவளது ஒரு தலைக்கு நீங்கள் பத்துத் தலைகளை ஈடாகக் கொடுக்கவேண்டும் என்கின்றான்.  நகரத்தார்கள் ஒன்பது கோயிலைச் சார்ந்தவர்கள் அதனால் கோயிலுக்கு ஒரு தலை என்றும் பத்தாவது தலையை இளையாத்தங்குடி ஒக்கூர் உடையார் தருவதாகவும் வாக்களித்தனர்.  மற்ற கோயில்கள் ஒரு தலையை அடமானம் வைத்த போது இரண்டு தலையை வைத்த ஒக்கூர் உடையார் பிரிவிற்கு இன்றும் மரியாதை உண்டு.   எந்த நாட்டில், நகரத்தார் கட்டளைகள் கோயிலில் நடந்தாலும் முதல் மரியாதை ஒக்கூர் உடையாருக்குத்தான்.

  இராவணனுக்குப் பத்துத் தலை என்றால் அவனது ஆணவத்தையே அது குறிக்கும்.  பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலை இருந்த்தாகவும், அடி முடி தேடிய படலத்தில் பொய் சொன்னதால் சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து விட்டதால் அவன் நான்கு தலையுடைய தெய்வமானான் என்று கூறுவது புராணம்.  பார்வதியின் உடம்பில் பிரணவ மந்திரத்தை வழித்துச் செர்த்ததில் உதித்தவன் விநாயகன்.  அவள் குளிக்கும் வேளை உள்ளே செல்ல உடன்பட்ட சிவனை யாரென்று அறியாது வழி மறிக்க சிவன் சினத்தால் அவனது தலையைக் கொய்துவிட்டான்.  பின்பு உண்மை அறிந்து சிவன் விநாயகனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பொருட்டு எதிர்ப்படும் முதல் ஜீவனின் தலையைக் கொய்து விநாயகனின் உடலில் பொருத்த அவன் யானை முகன் ஆனான் என்றும் கூறுவது புராணம். பிறைச் சந்திரனை சிவன் சூட்டிக் கொண்டதும் தன் தலையில்தான்!!  பகிரதனின் கடும் தவத்தால் உலகிற்கு கரைபுரண்டு வந்த கங்கையின் வேகத்தைத் தவிர்க்க அவளைத் தாங்கிக் கொண்டதும் சிவபெருமான் தன் தலையில்தான்!!.

  வாமண அவதாரத்தில் மூன்றடி கேட்டு வந்த பெருமானிடம் அதனைத் தருவதாக வாக்களிக்கின்றான் மாபலி சக்ரவர்த்தி.  விஸ்வ ரூபம் எடுக்கும் விஷ்ணு பூலோகம் முழுவதையும் ஒரு அடியால் அளக்கின்றான்.  வானுலகம் முழுவதையும் மற்றொரு அடியால் அளக்கின்றான்.  மூன்றாவது அடி வைக்க இடமில்லை என்றதும் அவனது உண்மை ரூபத்தை உணர்ந்த மாபலி மூன்றாவது அடியைத் தனது சிரஸின் மீது வைக்கக் கோரி பெருமானின் திருவடி தாங்கியதால் பாவங்கள் அகற்றப்பட்டு ஸப்த சிரஞ்சீவிகளில் ஒருவனாகவும் புகழடைந்தான்.

  இராமயத்தில் இராமபிரானின் பாதுகையைத் தாங்கி வந்தது பரதன் தன் தலை மீது. சீதை இராமனுக்கு தூது வந்த அனுமனிடம் அளித்தது தன் தலையில் சூடியிருந்த சிந்தாமணி எனும் தலைச்சிட்டிதனை.  எடுத்த பிறவியில் பயன் பெற்று நற்கதியடைய திருநாவுக்கரசர் பாடிய திரு அங்க மாலை எனும் பதிகத்தில் வருவது “தலையே நீ வணன்காய் தலை மாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேருந்தலைவனைத் தலையே நீ வணங்காய்” என்று தொடங்குவதாகும்.  ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் வடிவமே பெருமாள் கோயில்களில் பக்தர்களின் சிரசின் மீது சாற்றப்படும் சடாரி எனும் ஆபரணம்.

  கழுத்திற்கு மாலை தலைவழியாகத்தான் அணிவிக்கப் பெறுகிறதென்றாலும், தருமை ஆதினத்தின் மிக உயர்ந்த மரியாதையானது சிரசில் அணிவிக்கப் பெறும் சொக்கநாதப் பெருமானின் இண்டமாலை எனும் வில்வ மாலையாகும்.  கிரேக்கரிகளது லாரல்ஸ் (Laurels) எனும் தலைமாலையை ஒத்ததாகும் இது.  மன்னர்களுக்கு கிரீடம் அணிவிக்கப் பெறுவதும் தலையில்தான்!!  மங்கள விழாக்களுக்கு மஞ்சள் நீர் மற்றும் மந்திர உரு எற்றிய அபிஷேக நீர் ஊற்றுவதுப்படுவதும் தலை மீதுதான்!!

  தலையை பாதுகாப்பது “தலைப்பாகை”.  வாகன ஓட்டுநர்களின் தலையைப் பாதுகாப்பது ஹெல்மெட் எனும் தலைக்கவசம். தலை இருந்தால்தான் அவன் நடமாடும் மனிதன்.  தலை போனபின் அது தலை இல்லா முண்டம்!!  தலை சுற்றுகிறது என்றால் நிலை தடுமாறுகிறது என்று பொருள்.  தலை கனத்தால் தலை சுற்றுவதும் வலிப்பதும் சகஜம்.  நிலை தடுமாறாது இருக்க, தலைச் சுற்றாமல் இருக்க, தலைவலி இல்லாதிருக்க நாம் எப்பொழுதும் தலைக்கனம் இல்லாது இருக்க வேண்டாமா?

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com