• வனம் கண்டு மனம் மயங்கி...
  (பகுதி 1)

  தென் ஆப்பிரிக்காவின் “க்ரூகர்” வனவிலங்கு சரணாலயத்தைக் கண்டு மயங்கும் வாய்ப்பு இவ்வாண்டு கிட்டியது. உலகின் உயர்ந்த பதினான்கு சரணாலயங்களில் ஒன்றான “க்ரூகர்” வனவிலங்கு சரணாலயம் (Kruger National Park) தென் ஆப்பிரிக்காவின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் ஆகும். சபி (Sabie) மற்றும் “க்ராகடைல் (Crocodile) நதிகளின் இடையே பத்தொன்பதாயிரத்து ஐநுற்று ஐம்பத்தைந்து கிலோ மீட்டர்களுக்கு விரிந்து கிடப்பதே “க்ரூகர்” ஷேனல் பார்க். 1825-ஆம் ஆண்டிலிருந்து அல்பஸினி, பால் க்ரூகர, மற்றும் மேஜர் ஜேம்ஸ் ஸ்டீவன்ஸன் ஹாமில்டன் போன்றோர் கண்டு பிடித்த சிறு சிறு வனங்களைப் பெரும் முயற்சியுடன் 1926 ஆம் ஆண்டு ஒன்று சேர்த்து தற்போதுள்ள “க்ரூகர் ஷேனல் பார்க் எனும் சரணாலயத்தைப் படைத்தனர். இதுவே இன்றைக்கு விலங்குகளின் சரணாலயமாகவும் அவற்றின் பாதுகாப்புத் தலமாகவும் உலக அளவில் பிரதான இடத்தில் அமைந்திருக்கின்றது.

  எங்களது தென் ஆப்பிரிக்கப் பயணம் பன்னிரண்டு நாட்கள் அமைந்தது. பயணத்தின் நோக்கம் டர்பன் நகரில் கூடிய உலக வர்த்தகச் சபைகளின் சம்மேளததில் பங்கு ஏற்பது. மூன்று நாட்கள் டர்பன் நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தினை ஒட்டியே தென் ஆப்பிரிக்க இடங்களில் சுற்றுலா அமைக்கப் பெற்றிருந்தது. விமானப் போக்குவரத்து டிக்கெட்டுகள், விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் செல்லும் போக்குவரத்து ஹோட்டல் வாடகை சுற்றுலாக்களின் சிலவுகள் என்று அனைத்திற்குமே இந்தியாவில் பணம் கட்டிவிட்டால் அங்கு கூப்பன்களைத்தான் நாம் கொடுக்கவேண்டும். ஹோட்டல்களில் காலைச் சிற்றுண்டியும் இரவு உணவும் ரூம் வாடகையுடன் சேர்ந்தது. மதிய உணவும் நமது ஷாப்பிங் ஆகிய இரணடிற்கும்தான் பணம் தேவை.

  பம்பாயிலிருந்து ஜோஹானஸ்பர்க் நகருக்கு விமானம் உள்ளது. ஆனால் நாங்கள் சென்றது சிங்கப்பூரிலிருந்து செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம மூலம் சிங்கப்பூரிலிருந்து 10.30 மணி நேரத்தில் ஜோஹானஸ்பர்க் சென்றடையலாம். அங்கிருந்து “மூபலங்கா இண்டர்நேஷனல்” விமான நிலையத்திற்கு 45 நிமிடங்கள் சிறிய புரொபல்லர் விமானம் மூலம் செல்ல வேண்டும். காரில் செல்லவும் வசதியான நெடுஞ்சாலைகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடிய ஓட்டுனருடன் வேன் ஒன்று தயாராக நின்றது. விமான நிலையத்திலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்துடன் “மேலலைன் கேட்” (Malalaine Gate) எனும் இடத்திற்குச் சென்றோம். வனத்திற்கு உள்ளே செல்லக்கூடிய வாயில்களே “நும்பி கேட்” (Numbi Gate) மேலலைன் கேட் ( Malalaine Gate) “க்ராகடைல் பிரிட்ஜ் கேட்” (Crocodile Bridge Gate), “பால்க்ரூகர் கேட்” (Paul Krugar Gate) போன்றவை. நாங்கள் தங்கியிருந்த மேலலைன் ஸன் (Melalaine Sun) எனும் விடுதி மேலலைன் கேட்டின் வாயிற்புரத்திலேயே அமைந்திருந்தது. வழி நெடுகிலும் அடர்த்தியான கரும்புத் தோட்டங்கள், பச்சைப் பாய் விரித்தது போன்று இருந்தன. ஆரஞ்சுப் பழத்தோட்டங்கள் கண்ணுக்கு விருந்தளித்தன. பாட்மின்டன் பந்துகளைத் தொங்கவிட்டது போல் இலையே தெரியாத பழகச்சுமையுடன் மரங்கள் காட்சி தந்தன.

  மேலலைன் ஸன் ஹோட்டலில் எங்கள் இறக்கிவிட்டு வேன் சென்று விட்டது. செல்லுமுன் ஓட்டுனர் “இன்று மதியம் மூன்று மணிக்கு உங்களை அழைத்துச் செல்ல ஸபாரி ஜீப் (Safari Jeep) வரும். தயாராக இருங்கள். தாமதமானால் ஜீப் சென்றுவிடும்” என்று கண்டிப்பான குரலில் கூறிவிட்டுச் சென்று விட்டார். ஹோட்டலில் எங்கள் வருகையைப் பதிவு செய்தபின் மதிய உணவை முடித்துக்கொண்டு ஜீப்பிற்காகக் காத்திருந்தோம். ஜீப்பைப் பார்த்தவுடன் எனக்குத திக்கென்றது. பத்துப்பேர் பிரயாணம் செய்யக்கூடிய வாகனம், ஏறுவதற்கு ஏணி போன்ற மூன்று படிக்கட்டுக்கள், வாயில்களில் பொருத்தப்பட்டிருந்தன. எப்படி ஏறப் போகிறோம் என்று பயந்து கொண்டிருந்த என்னை ஓட்டுனர் “பயம் வேண்டாம், நான் சொல்லிக்கொடுப்பது போல உங்கள் உடலின் பாரத்தை (வெயிட்டை)க் கால்களில் போடாமல் கைகளில் பொருத்தி ஏறுங்கள்” என்றார். அதுபோலவே ஏறினேன். வெகு சுலபமாக இருந்தது. எங்களது சுற்றுலா முடிந்து நாங்கள் திரும்பும்போது அதே ஓட்டுனர் “பார்த்தீர்களா, இப்பொழுது ஏணியில் எப்படி ஏறுவது என்று எனக்கே பாடம் சொல்லிக் கொடுப்பீர்கள் போல் இருக்கிறதே” என்று கூறிச் சிரித்தார்.

  வனத்திற்குள் செல்வதற்குப் பல விதிகள் உள்ளன. உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் “காம்ப் கேட்” என்ற வாயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். உள்ளே செல்லும் முன்பு விதிமுறைகள் கொண்ட சிறிய புத்தகத்தைக் கொடுக்கின்றார்கள். அதன்படி எந்த நேரத்திலும் யாரும் எங்கும் (குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில்) வாகனத்தைவிட்டு இறங்கவோ நடக்கவோ கூடாது. வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது. எந்த இடத்திலும் அவற்றிற்குத் துன்பமோ இடையூறோ அளிக்கக்கூடாது. எங்கும் குப்பை போடக்கூடாது. சைக்கிள்களையோ மோட்டார் வாகனங்களையோ உபயோகிக்கக்கூடாது. புகை பிடிக்கக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் வனத்திலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. விதிகளை யாரும் மீறவே இல்லை. ஒரே ஒரு சமயம் ஒரு காரிலிருந்து இறங்கிய இரண்டு வாலிபர்களை ரோந்தில் இருக்கும் வனப் பாதுகாப்பாளர் உடனே வந்து 500 ராண்ட் அபராதம் விதித்ததைக் கண்டோம்.

  வனம் முழுவதும் வாகனங்களில் செல்லக்கூடிய அருமையான தார் ரோடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மொத்த அளவு சுமார் 2000 கிலோ மீட்டர்கள் வசதியான அழகான கார்களில் குடும்பத்துடன் பலர் வருகின்றனர். வனத்தைச் சுற்றிப் பார்க்கக் கிட்டத்தட்ட மெரினா பீச்சிற்குப் போவதுபோல் கார்கள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தன. ஒரு இடத்திலும் கூடச் சிறிய பேப்பரையோ குப்பையையோ பார்க்க முடியவில்லை. அத்தனைச் சுத்தம. ரோடில் எதிர்கொண்டு வருபவர்கள் தாங்கள் பார்த்த விலங்குகளைப் பற்றிய விவரங்களைக் கூறி அந்த இடத்திற்குச் சென்றால் பார்க்கலாம் என்று வாஞ்சையுடன் கூறிச் செல்கின்றார்கள்.

  வனத்தில் வாயில் வரை வந்துவிட்டோம். உள்ளே அமைந்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி அடுத்த இதழில் பகிர்ந்து கொள்வோமா !

  பாகம் - 2 ...

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com