• வனம் கண்டு மனம் மயங்கி...
  (பகுதி 2)

  சென்ற இதழில் சௌத் ஆப்பிரிக்காவிலுள்ள க்ரூகர் பார்க்கிற்குச் (Kruger Park) செல்லும் மார்க்கங்களைக் குறிப்பட்டேன், இவ்விதழில் வனவிலங்குச் சரணாலயத்தில் எங்களது அனுபவங்களை பற்றிக் கூற முயல்கின்றேன்.

  க்ரூகர் பார்க்கில் நாங்கள் அதாவது நானும் என் கணவரும் மொத்தம் 1-1/2 நாட்கள் சுற்றி வந்தோம். முதல் நாள் மாலை 3 முதல் 6-1/2 வரை. மறுநாள் காலை 6 மணி முதல் மாலை
  6-1/2 மணி வரை, இந்த குறிப்பிட்ட நேரங்களில் நாங்கள் பார்த்த விலங்குகள் ஏராளம். எந்த விதமான ஏமாற்றமும் அறவே கிடையாது. கொடுத்த காசுக்கு மேலேயே விலங்குகளைப் பார்க்க முடிந்தது. அனைத்து மிருகங்களும் இயற்கைச் சூழ்நிலையில் ஆரோக்கியமாகவும் ஆனந்மாகவும் இருந்ததைப் பார்த்தோம்,

  முதல் நாள் மூன்று மணிக்கு எங்களை கூட்டிச் சென்றார் பீட்டர் என்ற வேன் ஓட்டுநர். அன்று வேனில் நானும் என் கணவரும் மட்டுமே. வேறு யாரும் இல்லை. ஓட்டுநர் அமரும் இடம் சிறிது தாழ்வாக இருக்க, பிரயாணம் செய்வோர் சற்று உயரத்தில் அமர இருக்கைகள் அமைந்திருக்கின்றன. ஆகையால் ஓட்டுநர் “விலங்குகளை என்னைவிட நீங்களே முதலில் காண நேரிடும். பார்த்துவிட்டால் மெதுவாக ஸ்டாப், ஸ்டாப் என்று சொல்லுங்கள், நான் வண்டியை நிறுத்தி விடுவேன். நீங்கள் நன்றாகப் பார்க்கலாம்” என்றார். எனக்கு குதூகலம் ஒரு பக்கம். திக் திக் என்று பயம் ஒரு பககம். ஆப்பிரிக்கக் காடுகள் நம் ஊர் வனங்களைப் போல் மரங்கள் அதிகம் கொண்டதல்ல. புதர்களே அதிகமாகக் கொண்டுள்ளது. புதர்களும் பச்சைப் பசேலென்று இல்லாமல் ஒரு விதமான பிரௌன் கலரில் இருக்கின்றன பொதுவாக அங்குள்ள மிருகங்களும் அதே நிறத்தில் இருப்பதால் அவைகளை சட்டென்று கண்டுபிடிப்பது சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும் அங்கு மிருகங்களுக்கு முடையே கிடையாது, யானைகளுக்கும், மான்களுக்கும், காட்டெருமைகளுக்கும், சிங்கங்களுக்கும், ஒட்டைச்சிவிங்கிகளுக்கும் அளவே இல்லை. நம் பார்வை மட்டும் குறியாக இருந்தால் அவைகளை சட் சட்டென்று பார்க்க இயலும்,

  முதல் நாள் மாலை நாங்கள் முதன் முதலாகப் பார்த்தவை மான்கள். இவற்றை இம்பாலா (Impala) என்று அழைக்கின்றனர். நூற்றுக் கணக்கில் கூட்டமாக மான்கள் துள்ளித் துள்ளி ஓடும் காட்சியே அழகு. ஆண் மான்கள் தனிக் கூட்டமாகவும், பெண் மான்கள் குட்டிகளுடன் தனிக் கூட்டமாகவுமே செல்கின்றன. இம்மான்கள் தென் ஆப்பிரிக்காவின் மானினினங்களிலேயே மிகவும் நளினமானவை. சுமார் 3 மீட்டர் உயரத்திற்கும் 9 மீட்டர் தூரத்திற்கும் துள்ளிக் குதிக்கக் கூடியவை. இவற்றின் உணவு பச்சிலை, புல், பழங்கள், பூக்கள் மற்றும் மரப் பட்டைகள். சாதாரணமாக நீர் நிலைகளுக்கு அருகில்தான் வாழ்கின்றன. அழகிய மான்களே, சிறுத்தைப் (Leopard) புலிகள், காட்டுப் பன்றிகள் (wild boar) போன்ற விலங்குகளுக்கு உணவாகின்றன என்று பீட்டர் கூறியவுடன் என் மனதை என்னவோ செய்தது. சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டேன். எல்லாம் இயற்கையின் நியதிகள்தானே. அதன்படி நடக்காவிடில் க்ரூகர் பார்க் மட்டிலுமென்ன.
  தென் ஆப்பிரக்காவில் மட்டுமென்ன. உலகம் முழுவதுமே மான்கள் மட்டும்தானே இருக்க முடியும்!!

  அடுத்து நாங்கள் பார்த்தது கூடுஸ் (Kudus) எனும் ஒரு வகை மான் இனம். சுமார் 190 முதல் 315 கிலோ எடை எள்ள இதன் உடம்பின் மீது ஆறிலிருந்து பத்து வரையிலான வெள்ளைக் கோடுகள் அமைந்திருக்கின்றன. இம்பாலா மான்களும், கூடுஸ் மான்களும் கூட்டங்களாக இருக்கும் போதும் பெண் மான்கள் குட்டியை ஈன்றெடுக்கும் சமயம் மட்டும் தனித்துச் சென்று அடர்த்தியான புதர்களுக்கு இடையே குட்டியை ஈன்றெடுக்கின்றன. மூன்று நாட்களில் குட்டி எழுந்து நடக்கும் நிலையில் மீண்டும் குட்டியுடன் கூட்டத்தில் வந்து சேர்ந்து கொள்கின்றன. இம்பாலா, கூடுஸ் தவிர நம் நாட்டுப் புள்ளி மான்கள் போன்று இருக்கும் புஷ்பக் (Bushbuck) எனும் மான்களும் அதிகமாக உள்ளன.

  மான்கள் அனைத்தும் வனப்பகுதியின் வெளிப்புறங்களில்தான் அதிகம் இருக்கின்றன. சற்று உள்ளே போகப் போக யானைகள் தென்படுகின்றன. ஆப்பிரிக்க யானைகள் நம்நாட்டு யானைகளிலிருந்து மாறுபட்டு இருக்கின்றன. மூக்கும், தும்பிக்கையும் சற்று முன் நோக்கி அமைந்துள்ளது (Protruding). காதுகள் நம் யானைகளை விடவும் பெரிதானவையாக அமையப் பெற்றிருக்கின்றன. பார்க்கப் போனால் நம் நாட்டு யானைகள்தான் அழகு!! இங்கு யானைகளின் நிறமும் கூட செடி கொடிகளின் நிறம் போலவே அமைந்திருப்பதால் உன்னிப்பாகப் பார்த்தால் அன்றி கண்களுக்கு அவை நிற்பது சுலபமாகத் தெரிவதில்லை. ஆண் யானைகள் தனியாகவேதான் அதிகம் திரிகின்றன. பெண் யானைகள் குட்டிகளுடன் 40 அல்லது 50 கொண்ட கூட்டத்துடன் நீர் நிலை ஒன்றில் நீர் பருகுவதைப் பார்த்தோம். குட்டிகள் சுமார் ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்களே நிரம்பியவை. சுறுசுறுப்பாக தண்ணீர் அருகில் செல்லாமல் கரையில் உள்ள நீர் கலந்த மண்ணை அள்ளி அள்ளித் தின்ற காட்சி அருமையிலும் அருமை!! குட்டிகளுடன் கூடிய பெண் யானைக் கூட்டத்தை நர்ஸிங் ªஹர்டு (Nursing herd) என்று கூறுகிறார்கள். சீராட்டுத் தாய் கூடடம் என்று இதன் பொருள். சாதாரணமாக இக்கூட்டத்திற்கு ஒரு ஆண் யானை காவலுக்காக இருக்கின்றது. இந்த சீராட்டுத் தாய் கூட்டத்திலிருந்து ஆண் குட்டிகள் சுமார் பதினான்கு ஆண்டுகள் வரை இருந்துவிட்டு தனியாகப் பிரிந்து சென்று விடுகின்றன. பெண் யானைகள் மட்டும் தொடர்ந்து இருக்கின்றன, “அமைதியாக அவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவைகளும் அமைதியாக இருக்கின்றன. நாம் சத்தங்களை உண்டு பண்ணினால், அவை பயத்தில் தற்காப்பிற்காக நம்மை விரட்ட ஆரம்பித்து விடுவன. ஆகையால் சத்தம் செய்யாதீர்கள்” என்று பீட்டர் கூறினார். நாங்களும் அவரது அறிவுரைகளை மதித்தே நடந்தோம். யானைகளின் உணவு மூங்கில் தளிர்கள், மரப்பட்டைகள், கரும்பு மற்றும் ,இலைகள். கூகர் பார்க்கைச் சுற்றிலும் மைல் கணக்கில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கரும்புத் தோட்டங்கள் உள்ளன. இங்கெல்லாம் யானைகளின் வருகை அதிகம் என்று கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.

  யானைகளுக்குக் கண் பார்வை சற்று குறைவுதான். காதுகள் பெரிதாக இருப்பதால் கேட்கும் சக்தி அதிகமாக உள்ளது. உடல் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள Sweet Glands எனப்படும் வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால் காதை வேகமாக வீசிக் கொள்வதால் அதன் உடல் வெப்பம் குறைகின்றதாம். யானைகள் சுமார் 60 ஆண்டுகள் வரை வாழ்கின்றனவாம். தனது உருவத்தால் அனைத்து மிருகங்களையும் அச்சுறுத்தி வைக்க நேர்ந்தாலும் யானைகள் சுத்த சைவமான விலங்குகள். தந்தத்திற்காக யானைகளைக் கொல்ல முற்படும் மனிதன் தான் இதன் முதல் எதிரி. சிங்கங்களும், சிறுத்தைகளும் அடுத்துத்தான்.

  வனத்தில் பறவை வகைகளும் நிறையவே இருக்கின்றன. கழுகு, பருந்து, ஆந்தை, கொக்கு, நாரை இவை தவிர வண்ணக் குருவிகளும், பஞ்சவர்ணக் கிளிகளும், புறாக்களும், கின்னி பவுல் (Guinea Fowl) எனும் கோழி வகைகளும் மனதை கவரும் வகையில் உள்ளன. வாகனங்கள் செல்லும் தார் ரோட்டில கம்பீரமாக நடந்து வந்த (Ground Horn Bill) கிரௌண்ட் ஹார்ன் பில் எனும் கருப்பு நாரைக்கு பலூன் போன்ற சிகப்பு அலகு. வாகனங்கள் வருவது, போவது பற்றி சிறிதும் அச்சமோ, கலக்கமோ இல்லாத இப்பறவைகளை என் கணவர் டாக்டர்.ஏ.சி.முத்தையா அவர்கள் அழகாகப் படம் பிடித்தார். அவர் எடுத்த படங்களே எனது இக்கட்டுரையிலும் துணை புரிகின்றன.

  வனத்தைப் பற்றி இன்னும் நிறைய செய்திகள் இருக்கின்றன. அடுத்த இதழ் வரை பொறுத்திருப்பீர்களா?

  பாகம் - 3...

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com