• வனம் கண்டு மனம் மயங்கி...
  (பகுதி 3)

  தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் பார்க் எனும் வன விலங்கு சரணாலயத்தைப் பற்றி இரண்டு இதழ்களில் கூறி வந்திருக்கின்றேன். வனத்திற்குச் செல்லும் மார்க்கம் முதல் பகுதியிலும், வனத்தில் முதல் நாள் சுற்றுலாவில் நான் கண்ட மான்கள், யானைகள், பறவைகள் பற்றி இரண்டாம் பகுதியிலும் கூறினேன். தொடர்ச்சியாக மூன்றாம் பகுதியில் ஜீப்ரா எனும் வரிக் குதிரை, ஜிராப் எனும் ஒட்டைச் சிவிங்கி, ஹிப்போபொடாமஸ் எனும் நீர் யானைகள பற்றிக் கூற முற்படுகின்றேன்.

  முதல் நாள் சுற்றுலா மதியம் 3 மணியிலிருந்து மாலை 6-1/2 மணி வரையில், இரண்டாம் நாள் சுற்றுலா காலை 6 மணியிலிருந்து மாலை 6-1/2 மணி வரை. சரியாக காலை 5.50 மணிக்கே பீட்டர் வேனுடன் மேலலைன் ஸன் ஹோட்டல் வாசலில் நின்றிருந்தார். முதல் நாளே காலைச் சிற்றுண்டியை ஆர்டர் செய்திருந்தோம். கச்சிதமாக எங்கள் இருவருக்கும் ஆளுக்கொரு பையில் பிரெட், ஆப்பிள், ஜூஸ், சீஸ், வெண்ணெய், சாக்லெட் ஆகியவை பாக் செய்து கொடுக்கப்பட்டன. விடியற்காலை பயங்கர குளிர் உடல் நடுங்கியது. ஸ்வெட்டர், சால்வை அனைத்தும் போர்த்தியிருந்தும் குளிர் தாங்கவில்லை. வேனில் ஏறியவுடன் “பான்சோ” (Pancho) எனும் கோட்டு போன்ற உடையை எங்களுக்குத் தந்தார். அதை அணிந்து கொண்டவுடன் இதமாக இருந்தது. இரண்டாம் நாள் சுற்றுலாவில் எங்களுடன் இரண்டு ஸ்பெயின் (Spain) நாட்டுத் தம்பதிகள் சேர்ந்து கொண்டனர். “ காட்டுக்குள் போகிறோமே. நம்மைச் சாப்பிட எங்கே மரத்தடியில் இறங்கச் சொல்வார்களோ. அங்கு பாதுகாப்பு எப்படி இருக்குமோ” என்று எண்ணிக் கொண்டிருந்தேன். சிற்றுண்டி நேரம் வந்தவுடன்தான் தென் ஆப்பிரிக்கர்களின் திறமை எனக்குப் புரிந்தது. சரியாக எட்டு மணிக்கு அழகான காம்ப் ஒன்றில் வேன் நின்றது. அங்கு ஒரு மணி நேரம் அவகாசம் தரப்பட்டது. சூடான காபி, தேநீர் கிடைத்தது. ஹோட்டலிலிருந்து கொண்டு வந்த சிற்றுண்டியை வைத்துக்கொண்டு அருந்தினோம். காம்ப்பைச் சுற்றிலும் மின்சார வேலி, விலங்குகள் அருகில் வ்ர இயலாத பாதுகாப்பு. இதே போல் மதிய உணவிற்கு ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரையிலும் மாலை தேநீருக்காக 4.30 மணியிலிருந்து 5 மணி வரையிலும் வெவ்வேறு இடங்களில ட்ரக்கை நிறுத்தி வசதி செய்து தந்தார்கள். க்ருகர் பார்க்கைப் போல் நம் நாட்டிலும் எத்தனையோ வளமான வனங்கள் உள்ளன. இங்கும் இவ்வாறு வசதிகளைச் செய்து கொடுக்கலாமே விரைவில் என்று மனம் பிரார்தத்னை செய்து கொண்டே இருந்தது.

  சரியாகக் காலை 5.50-க்கு எங்களை ஹோட்டலில் இருந்து பிக் அப் செய்த பீட்டர் டிரக்கை மாலனைன் கேட்வாசலின் முன் நிறுத்தினார். சுமார் நாற்பது ஐம்பது வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தன. சரியாக ஆறு மணிக்கு வாசல் கதவு திறக்கப்பட்டது. எங்கள் டிரக் உருமிக்கொண்டு உள்ளே சென்று பர்மிட் ஆபீஸ் முன் நின்றது. பர்மிட் பாஸ் வாங்கியவுடன் பீட்டர் ஏறி உட்கார்ந்து “இப்போ நீங்கள் அனைவரும் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுங்கள். என்னுடன் வண்டியில் சுமார் பத்து மணி நேரம் சவாரி செய்யப் போகிறீர்கள். என்னால் எத்தனை வகை மிருகங்களைக் காட்ட முயலுமோ காட்டுகின்றேன். பார்த்து மகிழுங்கள். கீழே மட்டும் இறங்கக் கூடாது. மிருகங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. அவற்றிற்கு உண்ண எதுவும் கொடுக்கக்கூடாது” என்று சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினார்.

  முதலில் புதருக்குள் நாங்கள் பார்த்தது காட்டு எருமைகள். எத்தனைப் பெரிய கொம்புகள் !! இவ்வகையை “கேப்டு பபலோ”(Caped Buffalo) என்கிறார்கள். இவற்றையே நாம் பைஸன் என்கிறோம். தொப்பி அணிந்து கொண்டிருக்கும் வயதான மூதாட்டி போல் தோன்றும இவைகளை நூற்றுக் கணக்கில் பார்த்தோம். தார்ரோடின் நடுவில் ஒரு பைஸன் சர்வ சாதாரணமாக நின்று கொண்டிருந்தது. வண்டியை அருகில் கொண்டு நிறுத்தினார் பீட்டர். எனக்கு இதயம் “திக் திக்” என்று அடித்துக் கொண்டது. ஆனால் அந்தக் காட்டெருமை எங்களைப் பற்றிச் சட்டையே செய்யவில்லை. சற்றே திரும்பிப் பார்த்துவிட்டுப் புதருக்குள் சென்று விட்டது.

  அடுத்ததாகப் பார்த்தது “ஜீப்ரா” எனும் வரிக்குதிரைகள். கறுப்பும் வெள்ளையும் கொண்ட குதிரைகள் போலத் தோற்றமளிக்கும் இம்மிருகங்கள் பார்க்க அழகாக இருக்கின்றன. இந்தக் கறுப்பு வெள்ளைக் கோடுகளின் தோற்றத்தைக் கொண்டே “Z ebra Crossing” எனும் வரிக்கோடுகள் கொண்ட ரோட் கிராஸிங் வந்தனவாம். இந்தக் கோடுகள் நம் கை ரோகை போல் ஒவ்வொரு வரிக்குதிரைக்கும் வேறு வேறாக இருக்குமாம். “பார் கோடு போல் வேறு வேறாகத் தானிருக்கும். இவை ஒன்று போல் மற்றொன்று இருக்காது” என்றார் பீட்டர். கூட்டமாக இருக்கும் ஜீப்ராக்களில் ஒரு பெண் ஜீப்ரா குட்டியை ஈன்றெடுத்தவுடன் அதைத் தனியாக இரண்டு நாட்கள் கூட்டத்தை விட்டு கூட்டிச் சென்று விடுமாம். அந்த இரண்டு நாட்களில் தாயின் வரிக் கோடுகள் பார் கோடுகள் போல அதன் மனதில் பதிந்து விடுமாம். பின்பு கூட்டத்தில் சென்றவுடன் தனது தாயைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளுமாம். சுத்த சைவமான வரிக்குதிரைகள் தான் சிங்கங்களும் சிறுத்தைகளும் விரும்பி உண்ணும் உணவாம். சிங்கங்கள் துரத்தும்போது இவை சுற்றிச் சுற்றி ஓடுவனவாம். அதைப் பார்க்கும் சிங்கத்திற்கு தலையே சுறறிக் கலக்கம் கொள்ளுமாம். இதுவே வரிக்குதிரைகளின் தற்காப்பு யுக்திகளுள் ஒன்று உயரமான புல்லை வில்டர் பீஸ்ட் (Wilder beest) எனும் பசுவும் குதிரையும் கலந்ததுபோல் காட்சியளிக்கும் மிருகங்கள் மேய்கின்றன. அவை நுனியை மட்டும் சாப்பிட்டுவிட்டுச் செல்ல ஜீப்ராக்கள் அடுத்த பகுதியைத் தின்கின்றன. அவை தின்று மிஞ்சிய அடிப்பாகத்தைத்தான் மான்கள் சாப்பிடுகின்றன. மேற்கூறிய மிருக வகைகளின் உயரத்திற்கு ஏற்பவே புல்லைத் தின்கின்றன.

  அடுத்து நாங்கள் பார்த்தது ஜிராப் எனும் ஒட்டைச் சிவிங்கிகள். பார்ப்பதற்கு மிகக கம்பீரமாகத் தோற்றமளிக்கும் இவை நளினமாக நடப்பது அலாதி அழகு. இவை மீதும் உள்ள (Patches) பாட்சஸ் எனப்படும் சதுர வடிவங்கள் பார்கோடு போல் ஒன்றிற்கு ஒன்று வேறுபடுமாம். அவை வயதாக ஆகக் கலர் கூடுமாம். மிக உயரமான மரங்கள் இருக்கும் இடங்களில்தான் இவை காணப்படுகின்றன. மற்ற மிருகங்களுக்கு எட்டாத தழைகளும் ஜிராப்புகளுக்கு எட்டும். அவை நீர் பருகும் விதம் மிகவும் விசித்திரமாக இருக்கும். முன்னங்கால்களை அகலமாக விரித்துக்கொண்டு நீண்ட கழுத்தைக் குனிந்து நீர் அருந்துவன. இவற்றின் கழுத்துக்களில் இருக்கும் ரத்த நாளங்கள் அவை குனியும்போது சுருங்கி தலைக்குச் செல்லும் ரத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இவற்றின் குரல் ஆட்டின் குரல்போல் ஒலிக்கும். இதை பிளீடிங் (Bleeting) என்கிறார்கள்.

  மதிய உணவிற்காக எங்கள் டிரக் ஒரு அழகான காமப்பில் நிறுத்தப்படடது. உணவை வாங்கிக்கொண்டு உண்பதற்காக இருக்கைகளில் அமர்ந்தோம். வட்டமான வெராண்டா போன்ற உணவு விடுதியில் இருந்து சுற்றிலும் உள்ள க்ராக்டைல் நதி (Crocodile River) தௌ¤வாகத் தெரிந்தது. அவற்றில் பாராங்கற்களைப் போன்று முதலைகள் வாயைத் திறந்தபடியே அசையாமல் படுத்திருந்த்து பாரப்பதற்கே அச்சமாக இருந்தது. முதலைகள் அதிகமாக இருப்பதனாலேயே இந்த நதிக்கு முதலை நதி என்று பெயராம். முதலைகளுக்கு வெகு அருகில் Hippopotamus ஹிப்பாபோட்டாமஸ் எனும் நீர் யானைகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. இவை யானைகள் போல் பெரிய உருவம் கொண்ட மிருகங்கள். பெரும்பாலும் நீரிலேயே கிடக்கும் இவற்றிற்கு நீந்தத்தெரியாதாம். அதன் காரணமாகவே ஆழம் மிகுதியாக இல்லாத இடங்களிலேயே இவை இருக்கின்றன. சுமார் ஆறு நிமிடங்கள் நீருக்குள் மூழ்கி இருந்துவிட்டு மீண்டும் தலையை வெளியே விடுகின்றன. இவற்றின் தோல் மிகவும் மென்மையாக இருப்பதால் தண்ணீரில் இருந்தாலன்றி சூரிய வெளிச்சம் இவற்றைப் பாதிக்குமாம். இதன் க்£ரணமாகவே இவை நீர்நிலையின் ஓரத்திலேயே வாழகின்றன. சுமார் 650 முதல் 2400 கிலோ வரையில் கனமான நீர் யானைகளின் கால்கள் மிகவும் குட்டையாக இருக்கின்றன. இவைகளின் பற்கள் யானைத் தந்தம் போல் மதிப்பு மிக்கவை. சுத்த சைவமான ஹிப்போக்கள் சிங்கங்கள், சிறுத்தைகள், முதலைகள் போன்றவைக்கு விருப்பமான உணவாகின்றது.

  தென் ஆப்ரிக்கக் காடுகளில் (Magnificent Five) மாக்னிபிஸன்ட் பைவ் அதாவது சிறப்பு வாய்ந்த ஐந்து மிருகங்கள் என்று யானை, சிறுத்தை, பைஸன், சிங்கம் ரைனோ (ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகம்), என்று கூறுகின்றார்கள். இவற்றில் யானை, பைஸன் எனும் காட்டெருமை நிறையவே பார்த்தோம். சிறுத்தைப்புலி , பாறைகளுக்குப் பின்னால் பதுங்கிப் ப்துங்கி மான்கள் மீது பாய்ந்ததைத் தூரத்திலிருந்து பார்த்தோம். ஐந்து வகைகளில் மற்ற இரண்டு மிருக வகைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம் !!

  பாகம் - 4 ...

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com