• வனம் கண்டு மனம் மயங்கி...
    (பகுதி 4)

    தென் ஆப்ரிக்காவில் அமைந்துள்ள “க்ரூகர் பார்க்” (Kruger Park) எனும் வனவிலங்குகள் சரணாலயத்தைப் பற்றிச் சென்ற மூன்று இதழகளில் கண்டோம். (The Big Five) தி பிக பை அல்லது (Magnificient Five) மக்னிபிஸன்ட் பை என்று அங்குள்ள விலங்குகளில் சிறப்பு வாய்ந்தவை என்று சிங்கம், யானை, சிறுத்தை, ரைனோ (ஒத்தைக் கொம்புடைய காண்டாமிருகம) மற்றும் பைஸன் ஆகிய மிருகங்களைக் குறிப்பிடுவர். இவற்றில் யானையைப் பற்றியும் சிறுத்தை மற்றும் பைஸன் பற்றியும் பார்த்துவிட்டோம். எஞ்சியிருப்பது ரைனோ மற்றும் சிங்கம். இவ்விதழில் இவை பற்றிய சில செய்திகள்

    தென் ஆப்ரிக்காவில் காணப்படும் ரைனோக்களில் ச்துர வாய் கொண்ட ரைனோக்கள் சாதாரண வகை ரைனோவினை விடச் சிறப்பானவை. இதன் எடை சுமார் 1800 முதல் 2400 கிலோ வரையில் இருக்கும். இதன் வாய் சதுர வடிவில் 20 சென்டி மீட்டர் அளவு உள்ளது. இம்மிருகம் புல் மேயாதபொழுதும் கூட குனிந்தபடியேதான் செல்லும். யானைக்கு அடுத்தபடியாக உயிர்வாழ் பிராணிகளில் மிகப் பெரிய உருவம் கொண்டது. உருவத்தால் பிரம்மாண்டமாக இருந்தாலும் மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் அளவு ஓடக்கூடிய சக்தி வாய்ந்த மிருகம் ரைனோ. கிட்டத்தட்ட ஒண்ணரை முதல் 2 மீட்டர் வரை அமைந்த இதன் கொம்பு உயர்ந்த மருத்துவ குணமுடையது. யானையின் த்ந்தம்போல் ரைனோவின் தந்தமும் விலையில் உயர்ந்தது. கொம்பிற்காகவே ரைனோவை மனிதன் வேட்டையாடுவதால் மனிதனே இதன் முதல் எதிரி. சிங்கம் மற்றும் காட்டு நாய்கள் ஆகிய மிருகங்களும் ரைனோவை வேட்டையாடுகின்றன. இவை 2 அல்லது 3 என்று சிறிய கூட்டத்தில்தான் சுற்றித் திரிகின்றன. விடிகாலையிலும் மாலை நேரங்களிலுமே வெளியே வரும் ரைனோக்கள் சூடு அதிகம் உள்ள வேளைகளில் வெளியே அதிகம் வருவதில்லை. தனியாக இருக்கும் ரைனோ மிரண்டுவிட்டால் காடே கொள்ளாது என்று எங்கள் கைடு பீட்டர் கூறினார். ஆண் ரைனோக்கள் சுமார் 6-8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைத் தங்களது உரிமை நிலம் என்று குறிப்பிடுவதற்காக ஆங்க்£ங்கே சாணத்தை இட்டு வைக்கின்றன. அதைத் தாண்டி வரும் மற்றோர் ஆண் ரைனோ பாடு அவதிதான். பெண் ரைனோக்கள் அத்தனை முரடு அல்ல. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குட்டியை ஈன்று தரும் பெண் ரைனோ சுமார் இரண்டு மாதங்களுக்கு குட்டிக்குப் பால் ஊட்டும். இரண்டு வயது வரை குட்டி தாயுடனேயே சுற்றித் திரியும். குட்டியும் முழுமையாக வளர்ந்த ரைனோவைப் போல் புல் மற்றும் தளிர்களைத் தின்று வளரும்.

    இத்தனை மிருகங்களையும் பார்த்த பின்பு மிருகங்களின் ராஜாவை பார்க்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தோம். என் வாய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை ஜபித்துக் கொண்டே இருந்தது. ஓம் ஸ்ரீமாதா, ஸ்ரீமஹாராஜ்னி ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வரி” என்று சொல்லும்போது “தாயே உனது வாகனமாகிய சிம்மத்தை விரைவில் காட்டு” என்று மனம் வேண்டிக் கொண்டே இருந்தது. இரண்டாம் நாள் மதியம் சுமார் மூன்று மணி இருக்கும். நாங்கள் சாலையில் வேனில் போய்க் கொண்டிருக்கும்போது எதிரில் கார் ஒன்றில் வந்த பெண்மணி “நேராக ஆற்றங்கரைக்குச் சென்று அணைக்கட்டின் பக்கம் திரும்புங்கள். அங்கு சிங்கக் கூட்டம் ஒன்று காட்டெருமையை அடித்து விருந்துண்டு கொண்டு இருக்கின்றது” எனறார். என் மனம் ‘படக் படக்’ கென்று அடித்துக் கொண்டிருந்தது. சுமார் பத்து நிமிடங்கள் சாலையில் சென்று அணைக்கட்டின் அருகே திருப்பி வேனை ஓசைப்படாது நிறுத்தினார் பீட்டர். “யாரும் கீழே இறங்கவோ, எழுந்து நிற்கவோ கூடாது. ஆசை தீர சிங்கங்களைப் பார்த்து ரசியுங்கள்” என்றார். புதர்களுக்கு இடையில் பார்த்தோம். காட்டெருமையை அடித்துக் கொன்று ருசித்துப் புசித்துக் கொண்டிருந்தது சிங்கக்கூட்டம் ஒன்று!! ஒரு பெரிய ஆண் சிங்கம், ஐந்து பெண் சிங்கங்கள் மற்றும் ஏழு குட்டிகள் கொண்ட சிங்கக் கூட்டத்தைப் பார்த்தவுடன் தாய் ர்£ஜ ராஜேஸ்வரியிடம் நன்றி தெரிவித்துக் கொண்டேன். அவற்றின் ராஜ களையும் கம்பீரமும் சுதந்திரமாகத் திரியும் காரணத்தால் உண்டான செழிப்பும் எங்களை மெய் சிலிர்க்கச் செய்தது!! என் கணவரின் காமராவிற்கு என்றே பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு ஆண் சிங்கம் போஸ் கொடுத்தது.

    சிங்கங்களின் பழக்கங்களைப் பற்றி பீட்டர் விரிவாகக் கூறினார். சிங்கக் கூட்டத்தில் ஒன்றிலிருந்து எட்டு ஆண் சிங்கங்கள் வரை இருக்குமாம். பெண் சிங்கங்களும் குட்டிகளும் கூடி சுமார் 30 முதல் 35 சிங்கங்கள் வரை கூட்டமாகச் செல்கின்றன. ஆண் சிங்கம் தனது அல்லாத மற்ற ஆண் சிங்கங்களின் குட்டிகளைக் கொல்லும் வாய்ப்பு உள்ளதாம். மான்கள், காட்டெருமை, வரிக்குதிரை ஜிராப் மற்றும் காண்டாமிருகங்களையும் கொன்று தின்னக் கூடிய அதி வலிமை வாய்ந்த மிருகம் சிங்கம். சாதாரணமாகப் பெண் சிங்கங்கள்தான் மற்ற மிருகங்களைக் கொல்லுமாம். ஆனாலும் தான் முதலில் உண்ணாது ஆண் சிங்கங்கள் உண்ணும் வரைக் காத்திருந்த பின்புதான் குட்டிகளுடன் பெண் சிங்கங்கள் உண்ணுமாம். இது எனக்கு நம் இந்தியப் பெண்மணிகளை நினைவுறுத்தியது. தான் உணவு சமைத்தாலும் கணவன் உண்ணும் வரைக் காத்திருந்து பின்பு குழந்தைகளுக்கு ஊட்டித்தான் உண்ணும் வழக்கம் கொண்ட நம் குடும்பப் பெண்களைப் போல் இல்லையா சிங்கங்களின் வ்ழக்கம்? இரவு வேளைகளில் மிகுந்து சுற்றித் திரியும் சிங்கங்கள் பகலில் துங்குகின்றன. ஒரு நாளில் சுமார் 20 மணி நேரம் சிங்கங்கள் தூங்குகின்றனவாம்.

    நாங்கள் தென்ஆப்ரிக்கா புறப்படும் முன்னரே சென்னையில் உள்ள எங்கள் நண்பர் தர்மசேனன் எபனேசரிடமும், சிங்கப்பூரில் இருக்கும் எங்கள் பேத்தி தேவகி அஸ்வினிடமும் என் கணவர் உறுதி கூறி வந்திருந்தார். முதல் சிங்கத்தைப் பார்த்தவுடன் உங்கள் இருவருக்கும் போன் செய்கிறேன்” என்று கூறியதால் ஒன்றென்ன பதினைந்து சிங்கங்களைக் கண்டவுடன் முதலில் எங்கள் பேத்திக்கு போன் செய்தார். செய்தியைக் கூறும் என் கணவரின் குதூகலம் அதிகமா, செய்தியைக் கேட்ட எங்கள் பத்து வயதுப் பேத்தியின் குதூகலம் அதிகமா என்று என்னால் கூற இயலவில்லை. “என்னை எப்பொழுது கூட்டிச் சென்று காட்டப் போகிறீர்கள் அய்யா?“ என்று அவள் கேட்டது என் காதிலும் விழுந்தது. நடுக்காட்டிலிருந்து சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் அத்தனைத் தௌ¤வாக ஸெல்போன் இயங்குகிறது. ஸெல் போன் இருக்கும் இடமெல்லாம் தனிமை இல்லை. பயமும் இல்லை!!!

    சுமார் அரை மணி நேரம் சிங்கங்களைப் பார்த்த பின் மீண்டும் வனத்தைச் சுற்றி வந்தோம். ஒட்டைச் சிவிங்கிகள, யானைகள், மான்கள் என்று பலவற்றைப் பார்த்து மாலை சிற்றுண்டிக்காக மற்றொரு காம்பில் இறங்கி பின்பு மெலலைன் ஸன் ஹோட்டல் நோக்கிச் சென்றோம். சரியாக ஐந்து மணி நாற்பது நிமிடத்தின்போது ஒரு மலை அருகில் வந்து பீட்டர் காட்டினார்.கடிகாரத்தில் ஐந்து ஐம்பது எனும்போது சூரியன் இரு மலைகளுக்கிடையில் அஸ்தமிக்கத் தொடங்கியது. இரண்டே நிமிடங்களில் பந்து துவாரத்தில் விழுவது போல் பிளம்பு இரு மலைகளுக்கு இடையில் கவிழ்ந்து விட்டது!! சரியாக 6.30 மணிக்கு மெலலைன் கேட் வழியாக ‘க்ராகடைல் பாலம்’ தாண்டி ஹோட்டல் வந்து சேர்ந்தோம். எங்களுடன் நாள் முழுவதும் பிரயாணம் செய்து ஸ்பெயின் நாட்டுத் தம்பதிகள் விடை சொல்லிச் சென்றனர். வீட்டர் எங்களை இறக்கி விடும் பொழுது எங்களுக்கு மனதை என்னவோ செய்தது. பொறுமையாக, நிதானமாக வேனையும் செலுத்தி சரியான இடங்களில் நிறுத்தி மிருகங்களைக் காட்டியும் எங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். அதற்கு நன்றி கூறி விடை பெற்றோம்.

    அன்று இரவு ஹோட்டலில் உணவு உண்ணும்பொழுது அங்கு கிடைக்கும் மான், முயல் போன்ற மிருகங்களின் மாமிஸம் பரிமாறப்பட்டது. மனதை மிகவும் வேதனைப்படுத்தியது. இத்தனை சாதுவான பிராணிகள் பார்ப்போரின் மனதை குதூகலிக்கச் செய்யும் பிராணிகள் - இவற்றைக் கொன்று தின்ன எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

    மறுநாள் காலை ஹோட்டலில் இருக்கும் டவர் மீது ஏறி அங்கு அமர்ந்த வண்ணம் கிராகடைல் நதியை ரசித்துப் பார்த்தோம். அதில் காண்டாமிருகங்களும் முதலைகளும் அசையாமல் பாறை போல் இருந்ததைக் கண்டு ரசித்தோம். காலைச் சிற்றுண்டி முடித்து அங்கிருந்து ஜிம்பாப்வ நாட்டில் உள்ள “விக்டோரியா பால்ஸ” காணப் புறப்பட்டோம். அடுத்த இதழில் அதைப் பற்றிப் பார்ப்போமா?

    பாகம் - 5...

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com