• வனம் கண்டு மனம் மயங்கி...
    (பகுதி 5)

    “க்ருகர் பார்க்” விலங்குகள் சரணாலயத்தைக் கண்டு விக்டோரியா பால்ஸ் காண ஜிம்பாப்வே நோக்கிப் பறந்தோம். போகும்பொழுது ஏதோ ஒரு வகையான வருத்தம் என் மனதில் பாராங்கல் போல் உருண்டது. க்ருகர் பார்க்கில் இருப்பது விலங்குகள் என்றே எனக்குத் தோன்றவில்லை. என் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் போல்தான் தோன்றியது. மிகவும் வேண்டியவர்களை விட்டுச் செல்வதாகத்தான் உணர்ந்தேன். இன்றும் அந்த விலங்குகளின் ஞாபகம் வந்து விட்டால் மான்கள் கூட்டம் எப்படி இருக்கின்றனவோ!! சிங்கங்கள் வரிக்குதிரைகளையும் ஒட்டைச் சிவிங்கிகளையும் கொன்றிருக்குமே!! யானைகள் காண்டாமிருகங்களுடன் சண்டை போட்டிருக்குமே!! என்றெல்லாம் எண்ணங்கள் எழும். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அவற்றையெல்லாம் போய்ப் பார்க்க வேண்டும் என்றும் தோன்றும். வித்வான் லட்சுமணன் அவர்கள் பாட்டில் கூறியதுபோல் “மனம் ஒரு குரங்கு”தானே?

    ஜிம்பாப்வே நாட்டிற்கு “க்ருகர் பார்க்”கில் இருந்து ஜோஹனாஸ்பர்க் வந்துதான் விமானம் மாற்றிச் செல்லவேண்டும். அங்கு சும்மா தெரிந்து கொள்வதற்காகத்தான் ஜிம்பாப்வே நாட்டின் பணம் பற்றி விசாரித்தோம். அங்கு விமான நிலைய வங்கியின் அதிகாரி எங்களிடம் “ஜிம்பாப்வே நாட்டின் பணத்திற்குத் தென் ஆப்ரிக்கப் பணத்தை மாற்றினால் ஜிம்பாப்வே நாட்டின் பணத்தில் மிச்சம் இருந்தாலும் இங்கு கொண்டு வராதீர்கள். அதற்குத் திரும்ப எந்த மதிப்பும் கிடையாது” என்றார். இதே ஜிம்பாப்வே நாட்டுப் பணம் கொடி கட்டிப் பறந்த காலமும் உண்டு!! காலம் ஒரு சக்கரம்தர்னே? இன்றைக்கு மவுசு நிறைந்த பொருள் நாளைக்கு அதே மதிப்புடன் இருக்கும் என்று என்ன நிச்சயம்?

    ஜிம்பாப்வே நாட்டில் “விக்டோரியா பால்ஸ்” எனும் ஊர் வந்து சேர்ந்தோம். விமான நிலையத்திலிருந்து வேன் மூலம் விக்டோரியா பால்ஸ் ஹோட்டல் நோக்கிச் சென்றோம். தென் ஆப்ரிக்காவின் குரூகர் பார்க் போலவே இரு பக்கங்களிலும் வனப்பகுதி. நடுவில் நீண்ட அகன்ற தார் சாலை. இரு ஓரங்களிலும் மர பொம்மைகள் செய்து விற்கும் வியாபாரிகள். மரத்தில் அழகான யானைகள், காண்டா மிருகங்கள், ஒட்டைச் சிவிங்கிகள் என்று எழில்மிகு பொம்மைகளைச் செதுக்கிச் சிற்பமாக்கி விற்கிறார்கள். எங்கும் ஏழ்மை தாண்டவமாடுகின்றது. ஏழ்மையிலும் கண்ணியமும் தூய்மையும் மனத்தைத் தொடுகின்றது. விக்டோரியா பால்ஸ் ஹோட்டல் நம் ஊர் கனீமரா ஹோட்டல் போல் இருக்கின்றது. அழகான கட்டிடங்கள். சுற்றிலும் பசுமையான புல்வெளி. புல்வெளியின் நடுநடுவே “டெம்பிள் ட்ரீஸ” எனும் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. சாவகாஸமாகத் தேநீர் அருந்துவதற்கு நீண்ட வெராண்டாக்கள். சுத்தமான ஆடைகள் அணிந்த ‘பட்லர்கள்’. சுற்றுப்புறம், ஆட்கள், ஆடைகள் பேச்சு அனைத்திலும் ஆங்கிலேயத் தாக்கம் அதிகம் புலப்படுகின்றது.

    அன்று மாலை சுமார் 3 மணிக்கு வேன் மூலம் ஜாம்பஸி ஆற்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு (Boat Cruise) படகு சவாரிக்குச் சென்றோம். ஜிம்பாப்வே நாட்டிற்கும், ஜாம்பியா நாட்டிற்கும் இடையே உள்ளதுதான் ஜாம்பஸி ஆறு. ஜாம்பியாவின் முதல் எழுத்தான “ஜாம்ப” என்பதும், ஜிம்பாப்வே என்பதின் முதல் எழுத்துமான ‘ஜி’ என்பதும் சேர்ந்துதான் “ஜாம்பஜி” ஆறு ஆனது. இந்த இரண்டு நாட்டையும் இணைப்பது ஜாம்பஸி ஆறும், விக்டோரியா அருவியும்தான்.

    ஜாம்பஸி ஆறு ஒரு சிறிய மரத்தடியில் துவங்குவதாக எங்கள் கைடு கூறினார். எனக்கு உடனே தலைக்காவேரி நினைவுதான் வந்தது. குடகு மலையில் கையளவில் ஆரம்பித்துக் கரை புரண்டு ஓடுகின்றது காவேரி. அதேபோல் காங்கோ பேஸினில் மரத்தடியில் ஆரம்பிக்கும் ஜாம்பஸி ஆறு, அப்பப்பா!! எத்தனை பெரிதாகி ஜிம்ப்£ப்வே நாட்டில் கடல் போல் படர்கின்றது. படகு சவாரி கிட்டத்தட்ட 2.1/2 மணி நேரம் ரம்மியமாக இருந்தது. முதலைகள், காண்டா மிருகங்கள், நீர் யானைகள், யானைகள் மிக அருகில் குளித்துக் கொண்டும் நீந்திக் கொண்டும் இருந்தன. படகிலிருந்து சூரிய அஸ்தமனம் கண்கொள்ளாக் காட்சி!! மாலை வெய்யில் இறங்கியவுடன் மீண்டும் வேனில் ஏறி ஜிம்பாப்வே நாட்டுக் கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றோம். அவர்களது நடனங்கள், பாட்டு அனைத்தும் மிக அற்புதமாக உள்ளது. ஜலதரங்கம் போல் மூங்கிலில் செய்யப்பட்ட கருவியை வெகு லாவகமாக வாசித்துக்கொண்டு பாடும் ஆண்கள்,பந்துகள் போல குதித்து நடனம் ஆடும் பெண்கள், சிறுவர்கள் அனைவரும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினர். இரவு ஹோட்டலில் உணவருந்தித் தங்கினோம். மறுநாள் க்£லை “விக்டோரியா பால்ஸ்” காணச் சென்றோம். விக்டோரியா அருவி ஜிம்பாப்வே நாட்டிற்கும் ஜாம்பியா நாட்டிற்கும் இடையில் உள்ளதால் ஜாம்பியா சென்று பார்ப்பதானால் விஸா எடுக்க வேண்டும். ஆனால் அருவியின் பெரும்பகுதி ஜிம்பாப்வேயில் இருப்பதால் நாங்கள் ஜாம்பியாவிற்குச் செல்லவில்லை. அருவியின் நுழை வாயில் அருகே எல்லோருக்கும் மழைக்கோட்டு ஒன்று தருகிறார்கள். அதை அணிந்துகொண்டு அருவியின் அருகே நடந்துதான் செல்லவேண்டும். கார்களோ, சைக்கிள்களோ எந்தவிதமான வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    விமானத்தில் வரும்போது நான் “என்னடா இது, எங்கேயும் மலையைக் காணோமே..அருவி எங்கிருந்து வரும்” என்று நினைத்துக் கொண்டு வந்தேன். கோட்டை மாட்டி நடக்க ஆரம்பித்தவுடன்தான் புரிந்த்து, இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்திலேயே அருவியின் சாரலை உணர்ந்தோம!!. பார்த்தோம்!! கிட்டே போகப் போக பேரிரைச்சலுடன் மிகப் பிரம்மாண்டமான சுவர்போல் விக்டோரியா பால்ஸ் கொட்டியது!! இயற்கையின் சீற்றம் என்றால் என்ன என்பது அருமையாகப் புலப்படும் இடம் இது. சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக உண்டான பிளவில் ஜாம்பஸி ஆறு கொட்டுவதுதான் விக்டோரியா பால்ஸ் என்பது. உலகத்திலேயே மிகப் பெரிய இயற்கை அருவி. அதன் முன்பு நிற்கும்போதுதான் இறைவனின் படைப்பில் நாம் எத்தனைச் சிறிய தூசி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகின்றது. அருவியைக் கண்டு பிடித்தவர் Livingstone எனும் ஆங்கியேர். இங்கிலாந்து நாட்டுப் பேரரசியாகத திகழ்ந்த விக்டோரியாவின் பெயரையே அருவிக்கும் ஊருக்கும் சூட்டினார். 1860-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது எவ்வாறு இயற்கையான சூழலில் இருந்ததோ அதே சூழலில் தற்போதும் இதனை வைத்திருக்க ஜிம்பாப்வே நாட்டு அரசாங்கம் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளது.

    ரெயின்போ அருவி எனும் அருவி மீது எப்போதும் சூரிய வெளிச்சம் வானவில்லின் வண்ணங்களில் மிளிர்கின்றது. அடுத்து ‘காடராக்ட் பால்ஸ’ எனும் அருவி. அதற்கடுத்ததுதான் மெயின் பால்ஸ். விக்டோரியா பால்ஸின் நீளம் சுமார் 1708 மீட்டர்கள். உயரம் சுமார் 90-ல் இருந்து 107 மீட்டர்கள் வரை. இதன் பேரிரைச்சலும் சாரலும் திக்கு முக்காட வைக்கக்கூடியது. அருவியின் எதிர்பக்கம்தான் நடந்து செல்ல இயலும். மரங்களையும் செடிகளையும் இயற்கையாகவே விட்டிருக்கிறார்கள். பெரிய மந்திகள் (குரங்குகள்) திரிகின்றன. உட்கார என்று வசதியான சீட் எதுவும் இல்லை. அதிக நேரம் உட்காரக்கூடாது என்பதற்காகவோ என்னவோ!! விழுந்த மரங்களின் அடிப்பகுதிகள் சில ஆங்காங்கே இருக்கின்றன. கால் வலித்தால் அவற்றின் மீது அமரலாம். சுமார் இரண்டு மணி நேரம் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பவும் ஹோட்டலுக்கு வரப் புறப்பட்டோம். வழியில் “பாபவோ” (Papau) மரம் ஒன்றைக் காட்டிக் கொண்டிருந்தார் எங்கள் கைடு. ‘சலசல’வென்று சத்தம். திரும்பிப் பார்த்தால் பெரிய யானை ஒன்று ஈச்ச மரம் ஒன்றை உலுப்பிக் கொண்டிருந்தது. வேனில் இருந்து பத்து அடி தூரம்தான் இருக்கும். இறுதியாக, இத்தனை அருகில் கணபதியின் தரிசனம் கிடைத்ததே என்று மகிழ்ந்து எங்களது தென் ஆப்ரிக்கப்பயணத்தை முடித்துக்கொண்டு இனிமையான நினைவுகளுடன் ஜோஹனஸ்பர்க் வழியாக சிங்கப்பூர் வந்து சென்னை வந்து சேர்ந்தோம்.

    வாசகர்களே!! ஐந்து மாதமாகத் தென் ஆப்ரிக்கப் பயணக் கட்டுரையை உங்களுக்கு ஐந்து பகுதிகளாகக் கொடுத்த என் முயற்சியைப் பொறுமையுடனும் ஆர்வத்துடனும் ஏற்றுக்கொண்ட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கட்டுரைகளைப் படித்த உங்களது எண்ணங்களை எனக்கு எழுதினால் மகிழச்சி அடைவேன். உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழத்துக்கள். இவ்வாண்டிலும் உங்களுக்கு வேறு பயணக் கட்டுரைகளை அளிக்கும் வாய்ப்பினை அபிராமி எனக்கு அருள வேண்டி விடைபெறுகின்றேன்.

    நன்றி, வணக்கம்.

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com