• வாழையடி வாழை

  விருக்ஷங்களில் மிகவும் மங்களம் பொருந்திய வாழை. பாரத நாட்டில் அதுவும் தென்னாட்டில் தமிழ்நாட்டில் வாழை பயன் கொள்ளாத விழாக்களே இல்லை என்று கூறலாம். திருமண வீட்டு வாசலில் அனைவரையும் வரவேற்பது வாழைமரம். வாழை இலையே உணவு உண்பதற்கு அவசியம் வேண்டியது வாழைப்பழம் பந்தி உணவில் முக்கிய அயிட்டம். வாழைப்பூ வடை, புட்டு போன்ற உணவு செய்யப்படுகின்றது. வாழைத்தண்டை கூட்டு செய்வதற்கும், வாழைக்காய் பொடிமாஸ், பொரியல், குழம்பு போன்றவை செய்வதற்கும் பயன்படுத்த பெறுகின்றது. நகரத்தார் வீட்டு விசேஷங்களில் கூடி ஆக்கி உண்பது என்று விசேஷத்திற்கு முதல் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மதிய உணவு உண்பர். அன்றய தினம் வாழைக்காய் அவசியமாக உணவில் சேர்க்கப் பெறும். வாழைக்காய் வறுவல் (நேந்நிரங்காய் சிப்ஸ்) உலகப் பிரசித்தி பெற்ற தினபண்டம்.

  கோவில்களில் இறைவனுக்கு நவேத்தியமும் கதளி பழம் எனும் வாழைப்பழம். திருமண மாலையிலிருந்து சரம் வரையிலாகப் பூக்களைத் தொடுக்கும் பொருள் வாழை மட்டையிலிருந்து கிடக்கப் பெறும் வாழை நார். வாழை நார் (ஃபபர்-Fibre) என்ற பொருளிலிருந்து துணி நெய்து அழகிய சட்டைகலையும் (Shirts) கைப்பைகளையும் உற்பத்தி செய்கின்றது பிலிப்பன்ஸ் நாடு,

  வாழையின் மருத்துவ குணங்கலைச் சற்று பார்ப்போம். வாழைப்பழம் மலச்சிக்கலை சீர் செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது. வாழைக்காய் வயிற்றுப் போக்கினை முறியடிக்கக்கூடிய தன்மை வாய்ந்தது. வாழைத்தண்டு உடம்பில் சேரும் கெட்ட நீர வெளிக் கடத்தும் தன்மை கொண்டது. கால் சுரப்பிற்கு உகந்தது. சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் உண்டாகும் கல்லினைக் கரைக்கக்கூடிய வலிமை வாய்ந்தது.

  வாழையின் பாரம்பரிய சிறப்பு (Sentimental value) பற்றிக் கூறும் வகையில் சில செய்திகள் அமைந்துள்ளன. விசேஷ வீடுகளில் வாசல்களில் கட்டப்பெறுவது மட்டுமின்றி, புதிதாகக் கட்டிய வீட்டில் முதலாவதாக வாழையையும், தொன்னையையும் தான் நட வேண்டும் என்ற சம்பிரதாயம் தமிழ்நாட்டில் உள்ளது. தென்னம்பிள்ளை என்பதால் அது பிள்ளைக்கு சமானம். வாழைமரத்தின் வேரில் வாழைக்கன்றுகள் உதிப்பதால் வாழை அடி வாழையாக வம்சம் வளர்ந்து அக்குடும்பமும், இல்லமும் செழிப்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழைமரம் நடப்பெறுகின்றது.

  கிராமங்களில் வாழை மரத்தைப் பற்றிய ஒரு மூடநம்பிக்கையும் உள்ளது. அதனையும் தெரிந்து கொள்வதில் தவறில்லை. வாழைமரத்தினை ஒரு பெண்ணுக்கு ஒப்பிட்டு, ஸ்திரி தோஷம் உள்ள ஆடவனை வாழை மரத்திற்கு தாலி கட்டச் சொல்லி பின்பு அந்த மரத்தினை வெட்டி விடுவார்கள். அந்த வாழை மரம் ஆடவனின் மனைவிக்கு ஈடாகின்றது. பின்பு அவனை தோஷம் நீங்கி மணம் செய்விக்கலாம் என்ற நம்பிக்கையால் உண்டான வழக்கம் இதுரு. விசிறி வாழையைப் பராமரிப்பதால் வீட்டில் வம்சம் விருத்தியாகாது என்று கூறுவர். இதன் காரணம் விசிறி வாழையின் வேரில் வேறு கன்றுகள் உதிப்பதில்லை என்பதாலேயே இவ்வாறு கூறுகின்றார்கள் போலும். இவ்வாறு வேர் கன்றுகள் தோன்றுவதற்கு விஞ்ஞானம் கூறும் காரணம், விசிறி வாழையின் தண்டும் வேரும் சாதாரண வாழை போல் மிருதுவாக இல்லாது உறுதியாக இருப்பதால் அதன் வேரில் இருந்து வேறு கன்றுகள் உண்டாக இடமில்லை. தாய்ச் செடிதான் உறுதி கொண்டு மேலும் விசிறி போல் விரிந்து கொண்டு செல்லும் என்பதாகும்.

  வாழையைப் பற்றிய சில செய்திகளைப் பலர் கூறக் கேட்டிருந்தாலும் தருமை ஆதினம் 26வ சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சார்ய சுவாமிகள் கூறிய சில செய்திகள் என் மனதில் என்றும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். இறைவனின் படைப்பில் அத்தனைப் பொருள்களிலும் ஆண், பெண் என்ற இரு இனங்கள் அமைந்திருக்கும். இறைவனும், இறைவியும் கூட ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் உள்ளனர். பாஸிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி (Positive energy & Negative energy) இரண்டும் இணைந்தால்தான் மின்சாரம் உண்டாகும். உலகம் உய்விற்கு மூல காரணமான இறைவனும், இறைவியும் ஆண், பெண் என்ற இரு கூறுகளாகக் கொள்ள வேண்டும். தாவர இயலை எடுத்துக் கொண்டாலும் ஒரே புல்லில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. வாழை இலையை எடுத்துக் கொள்ளுங்கள். நடுவில் கோடு இருக்கும். ஒரு பக்கம் சற்று கனமாகவும், வெளிப் பக்கம் மென்மையாகவும் இருக்கும். கனமான அடிப்பக்கம் சூடான சாதம் படைப்பதற்கு ஏற்றது. மென்மை பெண்மையின் குணத்தைக் குறிக்கும். ஒரே வாழை இலையில் ஆண்மை, பெண்மை கொண்ட இரண்டு பகுதிகள் உள்ள குறிப்பிடத்தக்க என்பார்.

  அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் பல இடங்களில் அபிராமிய வணங்குவதால் உண்டாகும் நன்மைகளைக் கூற முற்படுவார். இதில் இரண்டு பாடல்களைக் குறிப்பதாகக் கூறலாம்.

  வயம் ரகம் மதகரி மாமகுடம் சிவிகை
  பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
  ஐயன் திருமனையாள் அடித்தாமரக் கன்புமுன்பு
  செய்யும் தவமுடையார்க் களவாகிய சின்னங்களே
  அபிராமி அந்தாதி 52

  எனும் பாடலில் அபிராமியை தொடர்ந்து வழிபட்டதால் நிலம், குதிரைகள், யானைகள், அரசபதவி, பல்லக்குகள், பொற்காசுகள், விலையுயர்ந்த ஆபரணங்கள் ஆகிய இப்பூவுலக வாழ்விற்குத் தேவையான செல்வங்கள் அனைத்தும் அமைந்திருக்கின்றன. இவையாவும் பக்தனது அபிராமி வழிபாட்டின் சின்னங்கள் என்று கூறுகின்றார்.

  மற்றொரு பாடலில்

  சொல்லும் பொருளும் எனநடமாடும் துணவருடன்‘
  புல்லும் பரிமளப் பூங்கொடியே! நின் புமலர்த்தாள்
  அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
  செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே
  அபிராமி அந்தாதி 28

  என்று பாடுகின்றார். சொல்லும் பொருளும் போல் இணை பிரியா சிவபெருமானுடன் இணைந்திருக்கும் அபிராமிய அல்லும் பகலும் தொழும் அடியவர்க்கு இப்பூவுலகில் அழியாத செல்வங்களும், தவம் பிறளாத வாழ்க்கையும் பின்பு சிவலோகமும் கிடைக்கப் பெறும் என்கின்றார். இவ்விரண்டு பாடல்களையும் இணைத்துப் பார்த்தால் உண்மை ஒன்று புலப்படும். இதனைத்தான் தரும ஆதீனம் வாழைத் தோட்டத்திற்கு உதாரணமாகக் கூறுவார்.

  நாம் வாழைத் தோட்டம் போடுகின்றோம். அதன் முடிவான பயன் வாழையைப் பயிர் செய்து வியாபாரம் செய்ய வேண்டும் என்பதான், வாழைப் பயிர் ஆவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகலாம். இடைப்பட்ட காலத்தில் கத்திரி, வெண்டை போன்றவற்றை வாழை மரங்களின் இடையில் பயிர் செய்து பயன் அடைகின்றோம். அபிராமியை வணங்குவதால் வீடு பேறு என்ற சிவலோகம் சித்திக்கின்றது. ஆனால் அச்சிவலோகம் கிடைக்கும் பொழுது வரை இப்பூவுலக வாழ்விற்குத் தேவையான செல்வங்களும் கிடைக்கின்றன என்பார்.

  வாழைத் தோட்டங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும் கொடுக்க வல்லவது. கண்களுக்கும் மனதிற்கும் பேரானந்தத்தைத் தரும். வாழைத் தோட்டங்களைச் சென்ற மாதம் நான் கோவை அருகே உள்ள சிறுவாணியில் காணும் பேறு பெற்றேன். SPIC ABC எனும் நிறுவனம் இத்தோட்டங்களை பராமரிக்கின்றன. சதர்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பொரேஷன் நடத்தும் (Agro Bio Technology Centre) திசு வளர்ப்பு வேளாண்மையகம் தான் திசு வளர்ப்பில் (Tissue Culture) மூலம் இங்கு வேளாண்மை செய்கின்றது. திசுக்கள் தாவரத்திலிருந்து பிரித்து எடுத்து சோதனைச் சாலையில் (Laboratory) மிகுந்த கட்டுப்பாடான சூழ்நிலையில் வளர்க்கப்படும்போது அவை பல்கிப் பெருகிப் பல செடிகளாக உருவாகின்றன. இதுவே Tissue Culture எனப்படும். கட்டுப்பாடான சீதோஷ்ண நிலையில் வளர்க்கப்படும்போது திசுக்கள் பல்கிப் பெருகித் தாய் செடியின் குணங்களைப் பெற்று முழுமையாக உருவாகும் தன்மை கொண்டவைகளாக அமைகின்றனது. இந்த முழுமயான வளர்ச்சியைத்தான் (Totipotency) டோட்டிபொட்டன்ஸி என்று குறிப்பிடுவர்.

  சாதாரணமாக வாழையைத் தாக்கக்கூடிய நோய்கள் நான்கு வகையான வைரஸ் நோய்கள். இந்த நோய் கண்ட செடிகளில் இருந்து உண்டாகும் கன்றுகள் உறுதியாக அமையும் வாய்ப்பு இருக்காது. அதனால் நல்ல உறுதியான தாய்ச் செடி பல சோதனகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இத்தகைய உறுதியான தாய்ச் செடியின் பக்க கன்றுகளின் திசுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இவை பல கட்டங்களில் சோதனை செய்யப்பட்டுக் கண்ணாடி ஜாடிகளில் பெருக்கி வளர்க்கப்படுகின்றன. சாதாரணமாக திசு வளர்ப்பு என்பது 18 முதல் 22 மாதங்கள் வரை ஆகும்.

  ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இந்த செடிகள் வெளி சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு பக்குவப்படுத்தப் பெற்று பின்பு பசுமையகம் (Green House) எனும் கூடத்தில் பாகாப்பாக நோய்த் தாக்குதல் எதுவும் இல்லாமல் வளர்க்கப்பெற்று பின்பு விவசாயிகளிடம் விற்கப்படுகின்றன. இத்தனை சோதனையும் பாதுகாப்பும் கொண்டு வளர்க்கப்படும் கன்றுகள் என்பதால் இவற்றிலிருந்து வரும் மகசூல் அதிகமாக அமைகின்றது. சாதாரணமாக திசு வளர்ப்பில் வரும் வாழை மரத்தில் வரும் குலை 42 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கின்றன. செவ்வாழை, பூவன், பச்சநாடான் என்று பல வகையான வாழைச் செடிகள் இங்கு பயிர் செய்யப்படுகின்றன.

  இவ்வாழைத் தோட்டங்களைப் பார்க்கும்போது என் மனதை அதிகமாக கவர்ந்த வாழை மரத்தின் கட்டுப்பாடும் தியாகமும்தான். வாழை மரத்தினின்று 27 இலைகள் உண்டாகின்றன. இலைகள் மேல் நோக்கியே அமைகின்றன. 27வது இலை தோன்றிய பின்பு மரம் குலை தள்ளுகின்ற. இந்த இலை முழுமையாக வடிவம் இல்லாமல் குலையை மறைத்தவாறு கீழ் நோக்கி உருவாகின்றது. 27 இலைகள் மேல் நோக்கி மனிதனுக்கே அமைந்தாலும் தான் ஈன்ற குலையைப் பாதுகாக்க இருபத்தி எட்டாவது இலையைப் பிறப்பிக்கின்றது. வாழும் போதும் பிறர்க்குப் பயன் தந்து வீழ்த்தப் பெற்ற பின்னரும் பிறர்க்குப் பயன்தரும் வாழையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.

  இக்கட்டுரையில் வரும் வாழைப் பயிரின் திரசு வளர்ப்பு பற்றிய செய்திகளை எழுவதற்கு எனக்குத் துண புரிந்த SPIC ABC நிறுவனத்தைச் சார்ந்த உற்பத்திப் பிரிவின் திரு ஜே,தனஞ்செயன் (Assistant Manager-Production) அவர்களுக்கு எனது நன்றி.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com