• விளக்கே திருவிளக்கே

  இல்லக விளக்கது இருள் கெடுப்பது
  சொல்லக விளக்கது சோதியுள்ளது
  பல்லக விளக்கது பலரும் காண்பது
  நல்லக விளக்கது நம சிவாயவே

  என்று திருநாவுக்கரசர் அருளிய நமசிவாய பதிகம் ‘நம சிவாய’ நாமத்தை விளக்குகின்றது. விளக்கு ஏற்றி வைத்தவுடன் புற இருள் அகலும். எங்கும் ஒளி பரவும். ‘நம சிவாய’ எனும் பஞ்சாட்சரத்தை ஓதினால் அக இருள் மறையும். ஞான ஒளி உண்டாகும். புற இருளைப் போக்குவதும் விளக்கு அஞ்ஞான இருளைப் போக்குவதும் ‘நம சிவாய’ எனும் விளக்குதான். இதனாலேயே அஞ்ஞானத்தைப் போக்குதலை ‘விளக்குதல்’ என்றும் கூறுவர்.

  இருளை அகற்றி மங்களத்தை உண்டு செய்வதால் அத்தனை விழாக்களிலும், விசேஷங்களிலும் விளக்கேற்றுவது முதலாக நடைபெறும் மங்கள வைபவமாக அமைகின்றது. ஆதியில் அகல் விளக்காக மண்ணால் செய்யப்பட்ட விளக்கு படிப்படியாக வளர்ந்து காமாக்ஷ¤ விளக்காகி பின்பு குத்து விளக்காகி செடி விளக்காகி மற்றும் மண்ணால் செய்யப்பட்டு அதுவே பித்தளை, வெள்ளி, என்றாகியுள்ளது. விளக்கு ஏற்றுவதற்கு நூல் திரியோ, பஞ்சுத் திரியோ உபயோகிக்கப் பெறுகின்றது. விசேஷ பூஜைகளில் தாமரை தண்டுத் திரியும் பயன்படுத்தப் பெறும். நெய் விளக்கு சாலச் சிறந்தது. இலுப்பை எண்ணெய் அடுத்தது. நல்லெண்ணை அதற்கும் அடுத்தது. விளக்கு எண்ணெய் சில வீடுகளில் பயன்படுத்தப்படும். அகல் விளக்கு காமாக்ஷ¤ விளக்குகளில் ஒற்றைத் திரி போடுவதற்கு முகம் இருப்பதால் அவ்வாறே ஏற்றப்படுகின்றது. குத்து விளக்கில் ஐந்து முகங்கள் உள்ளதால் ஐந்து திரிகள் கொண்டு ஏற்றப்படுவது வழக்கம். இறைவன் எலலாத் திசைகளிலும் இருக்கின்றான் என்பதனை வலியுறுத்தவே இவ்வழக்கம். ஐந்து முக விளக்கில் இரண்டு முகங்களாவது ஏற்ற வேண்டுமே தவிர ஒற்றை முகம் ஏற்றுவது கூடாது. நகரத்தார் சமூகத்தில் அமங்கலமான விசேஷங்களில்தான் ஒற்றை முகம் விளக்கு ஏற்றுவார்கள்.

  மலையாள விளக்கும் செடி விளக்கும் கேரள மாநிலத்தின் விளக்கு வகைகள. மலையாள விளக்கில் முகம் அல்லது மூக்கு இராது. மலையாள விளக்கிலும் வரிசையாக ஐந்து திரியிட்டு ஏற்றினால் மிகவும் அழகாக இருக்கும். ஏழு முகம் கொண்ட விளக்குகளும் கேரளத்தில் உண்டு. விளக்கேற்றுவது புது மணப் பெண்ணின் சாமர்த்தியத்தைத் தெரிந்து கொள்ள உதவும் என்பார்கள். ஒரே தீக்குச்சியில் அத்தனை முகங்களையும் ஏற்றிவிட்டால் அவள் சிக்கனமான பெண் என்று மாமியார் மெச்சக்கூடுமாம்!! விளக்கின் ஐந்து முகமும் அன்பு, அமைதி, அடக்கம், ஒற்றுமை மற்றும் சிக்கனம் என்று பெண்ணுக்குத் துணையான ஐந்து பண்புகளையும் குறிக்குமாம். இதனாலேயே பெண்களை விளக்கேற்றக் கூறுகின்றார்கள். இப்பொழுதெல்லாம் எண்ணெய, திரி, மற்றும் வத்திப்பெட்டி என்று தேட வேண்டியது கிடையாது, சிறிய பல்புகளுடன் கூடிய வயரிங் (wiring) செய்யப்பட்ட செடி விளக்குகளை (switch board) ஸ்விட்ச் போர்டில் பொருத்திவிட்டால் ஜகஜ்ஜோதியாக விளக்கு எரிகின்றது. இதுவே விஞ்ஞானத்தின் முன்னேற்றம்!!

  கிராமத்து வீடுகளில் மாடங்கள் இருக்க அதில் ஏற்றப்படும் அகல் விளக்கு மாட விளக்கு என்று அழைக்கப்படும். துளசிச் செடியை வளாத்து அதற்கு மாடம் அமைத்து அதில் விளக்கேற்றி வணங்கும் பழக்கம் தமிழநாட்டுப் பெண்களுக்கு அதிகம் உண்டு.

  விளக்கே திருவிளக்கே வேந்தன் உடற்பிறப்பே
  ஜோதி மணி விளக்கே ஸ்ரீதேவி பொன்மணியே
  அந்தி விளக்கே அலங்கார நாயகியே
  காந்தி விளக்கே காமாக்ஷ¤ தாயாரே
  பசும்பொன் விளக்கு வைத்துப் பஞசுத் திரிபோட்டு
  குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன்
  ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க
  வைத்தேன் திருவிளக்கு எந்தன் மாளிகையும்தான் விளங்க

  என்று துளசி ஸ்தோத்திரத்தில் உள்ளது. சில வீடுகளில் கார்த்திகை மாதம் தினந்தோறும் மாலை வேளைகளில் விளக்கு ஏற்றும் பழக்கம் உண்டு. அதேபோல் மார்கழி மாதத்தில் காலை வேளைகளில் தினந்தோறும் விளக்கேற்றும் பழக்கம் உண்டு. மனை விளங்க, குலம விளங்க, மனையறம் காக்கப் பெண்கள் விளக்கேற்ற வேண்டியது அவசியம். முன்பே கூறியதுபோல் இத்தனை சிரமம் எடுத்து விளக்கேற்ற வேண்டியது இல்லை. ஸ்விட்சைப் போட்டுவிட்டால் அகல் விளக்கும் எரியும். காமாட்சி விளக்கும் எரியும், குத்து விளக்கும் எரியும், செடி விளக்கும் எரியும், ஆகையால் நேரமில்லை என்றால் அதையாவது செய்யலாமே!!

  கிராமங்களில் இன்றும் லாந்தர் (Lantern) விளக்குகள் இன்றும் ஏற்றப்படுகின்றன. நகரத்தார் சமூகத் திருமண வைபவங்களில் ஸ்லேட் விளக்குகள் என்று நீண்ட தண்டுகள் மீது மெழுகுவர்த்தி ஏற்றிக் கண்ணாடிக் கூடு பொருத்திய விளக்குகள் இரண்டு ஏற்றப் பெறும். மற்றும் பெட்டி விளக்கு என்று கோவில் போன்ற அமைப்பு கொண்ட விளக்கு ஏற்றப் பெறும். இச்சமூகத்தினர் நிலையான விளக்கு எனும் பொருளில் நிலை விளக்கு என்றுதான் கூறுவரேயன்றி குத்து விளக்கு என்று கூறும் பழக்கம் கிடையாது.

  வீடுகளில் ஏற்றும் விளக்குகள் போல் கோவில்களில் ஏற்றப்படுவது தூண்டாமணி விளக்கு மற்றும் சர விளக்குகள். தூண்டாமணி விளக்கு குடுவைபோல் இருப்பதால் அது நிறைய எண்ணெயை ஊற்றிவிட்டு ஏற்றினால் பல மணி நேரம் எரிந்து கொண்டேயிருக்கும். சர விளக்கு கம்பியில் மாட்டப் பெற்று சரம் போல் தொங்குவது.

  கோவில்களில் தை வெள்ளிகளிலும் ஆடி வெள்ளிகளிலும் விசேஷமாக 108 அல்லது 1008 திருவிளக்குப் பூஜை நடைபெறுவது உண்டு. உலக நலன் கருதி செய்யப்படும் இப்பூஜைகளில் மங்கலப் பொருள்களான மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துணி, பூ, தாலிக்கயிறு போன்றவை வழங்கப் பெறுகின்றன. சிலர் விளக்குகளை வழங்கும் பழக்கமும் உண்டு. குருவாயூர் போன்ற கோவில்களில் லட்ச தீபம் ஏற்றும் பிரார்த்தனையும் உண்டு. திருப்பதி தலத்தில் ஸஹஸ்ர தீப அலங்கார சேவை எனும் பிரார்த்தனையும் உண்டு. மகர சங்கராந்தி அன்று சபரிமலையில் ஏற்றப்படும் மகர ஜோதி விளக்கு கண் கொள்ளாக் காட்சியாகும். கார்த்திகை தீபத்தன்று திருஅண்ணாமலை அருணாசல தீபம் பார்ப்பவர் அனைவரையும் முக்திக்கே அழைத்துச் செல்லும் விளக்காகும். சரியாக மாலை ஆறு மணிக்கு ஏற்றப்படும் அருணாசல தீபத்திற்கு ஈடு இணை மற்றொன்று உண்டா?

  வாகனங்கள் என்று எடுத்துக் கொண்டால் முன்பெல்லாம் சைக்கிள்களில் டைனமோ பொருத்தி அதன் வயர் சக்கரம் சுழலும்பொழுது அதில் உராய்ந்து விளக்கு எரியும். இப்பொழுதெல்லாம் சைக்கிள்களில் விளக்கே எரிவதில்லை. மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களின் ஒற்றை விளக்கு, வாகனங்களில் இரட்டை விளக்கு மற்றும் பார்க் லைட். இதுவே இருட்டில் எதிரில் வருவோருக்கு வருவது என்ன வாகனம் என்று அறிவிக்கும். லாரிகளின் அட்டகாச விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டியின் கண்களையே குருடாக்கி விபத்துக்களை உண்டு செய்யக்கூடியவை. சொகுசுப் பேருந்துகளின் வண்ணமயமான சீரியல் விளக்குகள் புது வகை. வாகனப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் பச்சை, சிகப்பு, மற்றும் ஆரஞசு விளக்குகள் நகர வீதிகளின் முக்கிய அங்கம். முக்கியப் பிரமுகர்களின் வாகனங்களின் மீது உள்ள சுழலும் சிகபபு விளக்குகள் சாலைகளில் போக்குவரத்துத் தடையன்றி செல்ல உதவும்.

  வீதிகளில் எரியும் மெர்குரி விளக்குகள், ட்யூப் விளக்குகள், ப்ளூரசண்ட் விளக்குகள் மற்றும் ஸோலார் எனர்ஜி விளக்குகள் எனப்படும் சூரிய வெளிச்சத்திலிருந்து கிரகிக்கப்படும் சக்தி விளக்குகள் என்று பல வகை விளக்குகள், கப்பல்களின் விளக்குகள், மாலுமிகளுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்குகள், விமானங்களின் சக்தி வாய்ந்த விளக்குகள் அவற்றிற்கு வழி காட்டும். விமான தள ஓடுபாதை விளக்குகள், விமான தளத்தில் வட்டமிடும் ஸர்ச் விளக்கு, புகை வண்டியின் விளக்கு அதனை இயக்கும் ஸ்டேஷன் மாஸ்டரின் கை விளக்கு, ஒற்றையடிப் பாதையில் துணையாகும் டார்ச் விளக்குகள், திருமண வைபவங்களில் ஊர்வலத்திற்குப் பயன்பெறும் பெட்ரோமாக்ஸ் விளக்குகள், மற்றும் மின்சாரம் இல்லாத வேளைகளில் பயன்தரும் எமர்ஜென்ஸி விளக்குகள், படிப்பதற்கு உதவும் டேபிள் லாம்ப்புகள், ரீடிங் லைட்டுகள, வலிகளைப் போக்கப் பயன்படும் ‘இன்பரா ரெட்’ விளக்குகள்இ மற்றும் ‘அல்ட்ரா வயலெட்’ விளக்குகள் என்று விளக்குகள். பலவிதம், பலவிதம்!!

  செவிலியர் கல்லூரிகளில் விளக்கேற்றும் வைபவம் (Lighting Ceremlny) என்ற வைபவம் உண்டு. கல்லூரியில மாணவிகள் செவிலியர்களாகச் சேர்ந்தவுடன் நடைபெறும் இவ்விழாவில் ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற முதல் செவிலியரின் நினைவாக விளக்கு ஒன்றை ஏற்றி அதனின்று அத்தனைப் புதிய மாணவிகளும் ஒவ்வொரு விளக்கை ஏற்றி வாக்குறுதி எடுத்துக் கொள்வார்கள்.

  மாணவர்கள் என்றவுடன் நினைவில் வருவது டென்னிஸ், கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள், ODI எனப்படும் ஒரு நாள் கிரிக்கெட் பகல் இரவு இரு வேளைகளிலும் நடைபெறுவதால் அதற்குத் தேவையானது பிரம்மாண்டமான விளக்குகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அமைந்திருக்கும் விளக்குகளின் உயரம். 58 மீட்டர்கள. இதுபோல் 4 விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு கம்பத்திலும் 140 பல்புகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பல்பும் 20 K.W. சக்தி உள்ளது. அதனால் ஒரு ஸதம்பத்து விளக்கின் ஒளி 280 கிலோ வாட்ஸ் ஆகும். இதனை 4-ஆல் பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் ஒளி புரியும்!!

  இத்தனை வகை விளக்குகள் இருப்பினும் அனைவரும் தமக்கென்று ஒன்று வேண்டும் என நினைக்கும் விளக்குதான் அலாவுதீனின் அற்புத விளக்கு!!

  விளக்கு ஏற்றுவது என்பது உயர்ந்த செயலாகும். ஒரு சிறு விளக்கு எத்தனையோ விளக்குகளை ஏற்ற உதவும். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தில் விளக்கேற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டால் இந்திய நாட்டில் வறுமை இராது, இருளும் இராதல்லவா? இப்படிச் செய்வதால் உலகம் அனைத்திற்கும் விளக்காகும் சூரியர், சந்திரர்களின் புகழ்போல் அழியாப் புகழை நாம் பெறலாம் அல்லவா!!

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com