• ராம நாமத்தின் மகிமை!

    இவ்வுலகத்தில் தோன்றியுள்ள பொருள்கள் ;அனைத்திற்கும் ஒரு நாள் அழிவு உண்டு. அழிவே இல்லாதது ஆன்மா
    மட்டும்தான். இவ்வுலகில் பிறக்கும் புழு, பூச்சி பயிர், செடி, மரம், மிருகம், மனிதன்ஆகிய அனைத்தும் பிறப்பு, வளர்ச்சி, நோய், மூப்பு, இறப்பு என்ற ஐந்து (Birth, Growth, Disease, Decay & Death) கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது, அதனால் பிறக்கும் எந்தப் பொருளும் இறக்கத்தான் செய்யும். இறவாதது ஆத்மா ஒன்றுதான். ஆத்மாவானது பரமாத்மா என்பதனின்று வரும் (Subtle) சூக்ஷம வடிவம். உடல் என்பது ஆத்மாவினைத் தாங்கி நிற்கும் வடிவம்-பாத்திரம். உடல் அழிவு பெறும்போது ஆத்மாவானது பரமாத்மாவிடம் சென்று ஐக்கியமாகின்றது, எங்கிருந்து வருகின்றதோ அங்கேயே அது சென்று அடைகின்றது. “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி, கல்லாய் மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய் வல்அசுரராகி முனிவராய், தேவராய்ச் செல்லாது நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்தினைத்தேன் எம்பெருமானே” என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் கூறுகின்றரர். புல்லினின்று படிப்படியாக மனிதராய்ப் பிறக்கின்றது ஆன்மா. “அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது” என்கின்றார் ஒளவையார். காரணம் மனித உடலில் ஆன்மா இடம் பெற்றால் பரமாத்மாவுடன் ஐக்கியமாக வாய்ப்புகள் அதிகமாகின்றன. பக்தியால், பரவசத்தால், ஆழ்ந்த சிந்தனையால், ஈடுபாட்டினால், விரதங்களால் இன்னும் பல வழிகளினால் ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையத்துடித்து இணைகின்றது.

    கிருத யுகம், திரேதாயுகம், துவாபரயுகங்களில் கடும் தவம், யாகம் போன்றவையால் ரிஷிகளும்,முனிகளும் பரமாத்மாவினை அடைந்தனர். இவர்கள் பெற்ற பலனைக் கலியுகத்தில் பெறுவது எப்படி? இது விண்வெளியுகம். கணினி யுகம். அணுகுண்டு யுகம். முந்தைய யுகங்களில் இருந்த அமைதி இல்லை. முந்தைய யுகங்களில் இருந்த சாவகாசம் இப்போது இல்லை. எதிலும் ஒரு வேகம் இருக்கின்றது. உட்கார்ந்து இலைபோட்டுப் பரிமாரி உண்பதற்கெல்லாம் ஏது நேரம்? மாத்திரை வடிவில் உணவை உண்டு பள்ளிக்கு,கல்லுரிக்கு.வேலைக்கு என்று பறக்கின்றார்கள் அனைவரும். பல திரவியங்களை ஒன்று திரட்டி யாகம் வளர்த்து. விரதமிருந்து இறைவனை வழிபாடு செய்ய ஏது நேரம்? ஆகையால் தான் இக்கலியுகத்திலும் முந்தைய யுகங்களில் பக்தர்கள் பெற்ற பலனை மிக எளிதாகப் பெறுவதற்கு நாம ஜபம், அதாவது இறைவனின் பெயரை ஓயாது கூறுவது சிறந்த முறையாகின்றது. என்ன காரியம் செய்து கொண்டிருந்தாலும் நா மட்டும் நாம ஜபம செய்தால் அதுவே ஜீவாத்மா பரமாத்மாவிடம் சென்று ஐக்கியமாகச் சிறந்த உபாயமாக அமையும். இதற்காகக் கடினமான பெயர்களையோ, நாமங்களையோ ஜபிக்க வேண்டும் என்பதில்லை. குழந்தைகளும் எளிதாகக் கூறவல்ல நாமம் "ராம"எனும் நாமம். "ராம" நாமத்தை ஒரு நாளில் 108 முறை ஜபித்தால் கூடப்போதும். இதில் இருக்கும் "ரா" எனும் அக்ஷரம் “ஓம் நமோ நாராயணாய நமஉற” என்பதின் நடுவாக அமைந்திருக்கின்றது. “ம” எனும் அக்ஷரமோ ‘ஓம் நம சிவாய’ என்பதின் நடுவாக அமைந்திருக்கின்றது. வைணவத்தையும் சைவத்தையும் இணைக்கும் பாலம் தான் “ராம” எனும் நாமம்.

    ராம பக்தர்களில் தலைசிறந்தவர் உறனுமன் என்பதனை நாம் அறிவோம். சீதையைத் தேடிச் செல்ல ராமன் உறனுமனுக்குப் பணித்திட கடலைத் தாண்டிச் செல்ல உறனுமன் “ராம ராம” என்று அவனது நாமத்தைத்தான் ஜபித்தான். “ராம” நாமமே உறனுமனுக்கு அளவிட இயலாத பலத்தினைத் தந்தது.

    ராம நாமத்தை உயிர் மூச்சாகக் கொண்ட மற்றொரு பக்தர் மகாத்மா காந்தி ஆவார். அவருடைய ரத்தத்தில் அந்த ராம நாமம் எந்த அளவிற்கு ஊறியிருந்தது என்பதை, கோட்சே, காந்தியைத் துப்பாக்கியால் சுட்டவுடன் காந்தியின் உயிர் பிரியும் தருணத்திலும் கூட “ராம் ராம்” என்னும் ஜபத்தினை உச்சரித்தவாறு அவரது உயிர் பிரிந்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    “ராம” நாமத்தை ஜபித்தால் நாமும் அதிக வரம் பெறலாம். லட்சம் ராம நாமம் எழுதுவதற்கென்று சங்கர மடத்தில் ராம நாம புத்தகங்கள் கிடைக்கின்றன. இவற்றில் சிறிய கட்டங்கள லட்சம் உள்ளன. அவற்றில் “ராம” எனும் நாமத்தை எழுதி அனுப்பினால் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கருணைக்குப் பாத்திரமாகலாம்.ஆசாரிய சுவாமிகளின் அனுக்கிரஹப் . பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இப்புத்தகங்களை ஆலயப் பிரதிஷ்டைக்குப் பயன்படுத்துகின்றனர். சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீபோதேந்திராவின் அதிஷ்டானம் கும்பகோணத்திற்கு அருகேயுஙள்ள கோவிந்தபுரம் எனும் இடத்தில் இருக்கின்றது. இங்கு லட்சம் ராம நாமம் கொண்ட பல புத்தகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன என்றும், அந்த அதிஷ்டானச் சுவற்றில் காதை வைத்துக் கேட்டால் “ராம” எனும் நாமம் காதுகளில் ஒலிக்கும் என்றும் கூறுகின்றனர்!!

     

    “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
    தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
    ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
    “ராம” என்றிரண்டெழுத்தினால்”

    நல்லன எல்லாம் தரும் “ராம” நாமத்தை நாளும் நாம் ஜபிப்போமாக!

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com